சிரியாவில் தொடரும் மரணங்கள்: போர்நிறுத்தத்தை கொண்டுவர தடுமாறும் ஐ.நா…..

A wounded Syrian child Eastern Ghouta (22 February 2018)

கடந்த வியாழன் முதல் அடுத்தடுத்த வாக்கெடுப்புகள் தடைபெற்றுவரும் சூழலில், இன்று மீண்டும் ஒரு வாக்கெடுப்பை நடத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.

உதவி மற்றும் மருத்துவப் பொருட்களை கொண்டு செல்வதற்காக 30 நாட்கள் போர்நிறுத்தம் மேற்கொள்ளப்படவேண்டும் என்று அந்தத் தீர்மானத்தின் நகலில் கூறப்பட்டுள்ளது.

அதில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று சிரியாவின் முக்கியக் கூட்டாளியான ரஷ்யா வலியுறுத்திவரும் நிலையில், போர்நிறுத்தம் அமலாவதை ரஷ்யா தமாதிப்பதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.

இந்த விவகாரத்தில் செயல்படுவதில் தோல்வி ஏற்பட்டால் அது ஐ.நா-வின் தோல்வி என்று பிரான்ஸ் கூறியுள்ளது.

கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு கூட்டா பகுதியில், கடந்த ஞாயிறு முதல் நடக்கும் அரசின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 462 ஆக உயர்ந்துள்ளதாகவும், அவர்களில் குறைந்தது 99 பேர் குழந்தைகள் என்றும் சிரியன் அப்சர்வேட்டரி ஃபார் ஹியூமன் ரைட்ஸ் அமைப்பு கூறியுள்ளது.

தீர்மானத்தின் அம்சங்கள் என்ன?

குவைத் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளால் முன்மொழியப்பட்டுள்ள அந்த தீர்மானத்தில், அது ஐ.நா-வில் நிறைவேற்றப்பட்ட 72 மணி நேரத்தில் சிரியா முழுதும் போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என்று கூறுகிறது.

Rescue workers evacuate a wounded civilian from the site of a reported government air strike in Douma, in the besieged rebel-held Eastern Ghouta, Syria (22 February 2018)

மருத்துவ ரீதியான மீட்பு மற்றும் உதவிப் பொருட்கள் வழங்குவது ஆகியன 48 மணி நேரத்தில் தொடங்கும். சிரியா முழுவதும் 1,244 குடியிருப்புகளில் உள்ள 56 லட்சம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி, அவசர உதவி தேவைப்படுவோராக உள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஐ.நா பொதுச் செயலர் ஆண்டானியோ கட்டரஸ் ‘பூமியில் உள்ள நரகம்’ என்று குறிப்பிட்டுள்ள, போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவிப் பொருட்களைக் கொண்டு சேர்ப்பதே தங்கள் முக்கிய நோக்கம் என்று ஐ.நா-வுக்கான சுவீடன் தூதர் ஓலோஃப் ஸ்கூக் பிபிசியிடம் தெரிவித்தார்.

போரிடும் அனைத்து தரப்பும் மக்கள் குடியிருக்கும் பகுதிகளிலும், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகிலும் ராணுவ நிலைகளை அமைக்கக் கூடாது என்று அந்தத் தீர்மானம் வலியுறுத்துகிறது.

ரஷ்யா எதிர்ப்பது ஏன்?

போர் நிறுத்தத்தை அமல்படுத்துவதற்கான தீர்மானத்தில் இஸ்லாமிய அரசு மற்றும் சிரியாவில் அல்-கைதாவின் அதிகாரப்பூர்வ கிளையாக விளங்கிய நுஸ்ரா ஃபிரண்ட் ஆகிய அமைப்புகளுக்கு போர் நிறுத்தம் செல்லாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்படாத அமைப்புகள் மீது தாக்குதலைத் தொடரலாம்.

எனினும் கிழக்கு கோட்டாவில் உள்ள இரு கிளர்ச்சியாளர்கள் அமைப்பான ஜெய்ஷ் அல்-இஸ்லாம் மற்றும் அதன் எதிர் அமைப்பான பைலா அல்-ரஹ்மான் ஆகிய அமைப்புகளுக்கும் போர் நிறுத்தத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று ரஷ்யா கூறுகிறது.

Su-57

“போர் நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்பட்டாலும் கிளர்ச்சியாளர்கள் தலைநகர் டமாஸ்கஸ் மீது தாக்க மாட்டார்கள் என்பதற்கான உத்தரவாதம் இல்லை, ” என்று கூறியுள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ், சில நிபந்தனைகளின் அடிப்படையிலேயே தங்கள் நாடு அந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற ஒப்புக்கொள்ளும் என்று கூறியுள்ளார்.

கிழக்கு கூட்டாவில் தொடரும் அவலம்

சிரியாவின் அரசு மற்றும் அதன் ஆதரவுப் படைகள் தொடர்ந்து ஆறாவது நாளாக கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் கிழக்கு கூட்டாவில் தாக்குதல் நடத்தி வருகின்றன.

ரஷ்யாவும் அந்தத் தாக்குதலில் பங்காற்றுவதாக அமெரிக்கா கூறியுள்ள குற்றச்சாட்டை ரஷ்யா ‘அடிப்படையற்றது’ என்று கூறியுள்ளது.

சுமார் 3,93,000 பேர் சிக்கியுள்ள அந்த பகுதியில் அரசு படைகள் தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருகின்றன.

எனினும் தாங்கள் ‘தீவிரவாதிகளை’ குறிவைத்தே தாக்குதல் நடத்துவதாகவும், தங்கள் தாக்குதல் இலக்கு பொது மக்கள் இல்லையென்றும் சிரியா கூறியுள்ளது.

BBC NEWS