சீனாவின் பசுமை வளர்ச்சிக் கோட்பாடு………

சீனாவின் ஷான்சி மாநிலத்தில் ச்சான் பா சூழலியல் மண்டலம்

சீனாவின் ஷான்சி மாநிலத்தில் ச்சான் பா சூழலியல் மண்டலம்

“பசுமை வளர்ச்சி”என்ற கோட்பாட்டைக் கடைப்பிடிக்கும் சீனா, கடந்த சில ஆண்டுகளில் சூழலியல் மேம்பாட்டுப் பணிகளைப் பெரிதும் முன்னெடுத்து வருகிறது. தற்போது, சீனாவின் பல்வேறு பகுதிகளில் சுற்றுச்சூழலைச் சீர்கெடுக்கும் போக்கு தடுக்கப்பட்டுள்ளது.

சிச்சுவான் மாநிலத்தின் லுச்சோ நகரில் வாழும் ரௌமின்னின் வீடு, யாங்சி ஆற்றுக்கு அருகிலுள்ள குடியிருப்பு ஒன்றில் அமைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சுற்றுச்சூழலில் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றம் ரௌமின்னின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியதாவது

முன்னதாக, இப்பகுதியில் பல குப்பைகளும் கட்டிடப் பொருட்களும் நிறைந்து, அசுத்தமாக காணப்பட்டது. அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணாக, படிப்படியாக தூய்மையாக மாறி, தற்போது சுற்றுச்சூழல் பூங்காவை போல் காணப்படுகிறது. அரசு வாரியங்களின் முயற்சியுடன், சுற்றுச்சூழலை மேம்படுத்திய பிறகு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அனைவரிடையேயும் உயர்ந்துள்ளது என்றார்.

யாங்சி ஆற்றில் சுற்றுச்சூழல் மேம்பட்டதற்கு லூச்சோவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செயலுக்கு வந்த பாதுகாப்புத் திட்டம் முக்கிய காரணமாகும். இத்திட்டம் மூலம், யாங்சி ஆற்றுக் கரைகளுக்கு அருகில் கழிவுப் பொருட்களைக் கொட்டும் இடங்கள் முற்றிலும் சீரமைக்கப்பட்டுள்ளன.

யாங்சி ஆற்றில் அமைந்துள்ள ஹுபெய் மாநிலத்தின் யீச்சாங் மாவட்டம் கடந்த சில ஆண்டுகளில், வேதித் தொழில்களின் மேம்பாட்டையும் மாற்றத்தையும் முன்னெடுத்து, யாங்சி ஆற்றின் சுற்றுச்சூழலை மீட்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 2017ஆம் ஆண்டு, யீச்சாங்கில், யாங்சி ஆற்றிற்கு அருகில் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்குள் 25 வேதி நிறுவனங்கள் மூடப்பட்டன. திட்டப்படி வரும் 3 ஆண்டுகளில், 134 வேதி நிறுவனங்கள் மூடப்படும், அல்லது இடமாற்றம் செய்யப்படும்.

காற்று மாசுப்பாட்டுக் கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணிகளில் மிகக் கடினமான ஒன்றாகும் என்று கருதப்படுகிறது. இருப்பினும், சீனா, இத்துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பெற்றுள்ளது. முன்பு, பெய்ஜிங், தியன்ஜின், ஹேபெய் ஆகிய பகுதிகள் புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டு, இப்பகுதிகளில் பி.எம் 2.5 எனப்படும் துகள்களின் நிலை 9.9 விழுக்காடு குறைந்தது. காற்றுத் தரம், மிக சிறந்த நிலையில் பதிவாகியுள்ளது என்று சீனச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் பல்வேறு பகுதிகளில், சூழல்நலம் போற்றும் திட்டங்களைச் செயல்ப்படுத்தும் அதே சமயத்தில், இதற்கான மத்திய நிதி ஆதரவும் தொடர்ச்சியாக வலுப்படுத்தப்பட்டு வருகிறது. 2017ஆம் ஆண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சிறப்பு நிதி ஒதுக்கீட்டுத் தொகை, 5000 கோடி யுவான் ஆகும். மத்திய அரசு வருங்காலத்தில் இத்துறைக்கான மேலதிக நிதியை ஒதுக்கீடு செய்யும் என்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகத்தின் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

பசுமை வளர்ச்சிக் கோட்பாடு என்பது, முழு சமூகத்தின் பொதுக் கருத்தாகும். எதிர்காலத்தில், பசுமை வளர்ச்சிக்கான புதிய உந்து சக்திகளைத் தொடர்ந்து தோற்றுவித்து, நெடுங்காலப் பணி அமைப்புமுறையை உருவாக்க வேண்டும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.