இணங்க மறுப்பவர்களுடன் இணக்க அரசியல் செய்தால் யாருக்கு பாதிப்பு?

கல்முனை நிலவரம் கூறும் பதில்….

உள்ளூராட்சி மன்றதேர்தல் நடைபெற்று பத்து நாட்கள் கடந்துவிட்டநிலையிலும் பல சபைகளுக்கு ஆட்சியை நிறுவமுடியாமல் கட்சிகள் திண்டாடிக்கொண்டிருக்கின்றன. எந்தவொரு விடயத்திற்கும் தன்னை வித்தியாசமாகக் காட்டிக்கொள்ளும் கல்முனைப் பிரதேசம் இதற்கும் விதிவிலக்காகவில்லை. தேர்தல் முடிவுகளின்படி மொத்தமாகவுள்ள 41 ஆசனங்களில் ஐ.தே.க முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி 12 ஆசனங்களையும், சாய்ந்தமருது சுயேச்சை 9 ஆசனங்களையும், த.தே.கூ, அ.இ.ம.காங்கிரஸ், த.வி.கூ என்பன முறையே 7, 5, 3 ஆசனங்களையும் மீதமுள்ள ஐந்து ஆசனங்களையும் ஏனைய கட்சிகளும் சுயேச்சை குழுக்களும் தலா ஒன்று வீதம் தம்மிடையே பங்கிட்டுக்கொண்டுள்ளன.

எந்தவொரு கட்சியும் ஆட்சியமைக்கூடிய பெரும்பான்மையை கொண்டிருக்கவில்லையென்பதுடன் சாய்ந்தமருதை பிரதிநிதித்துவம் செய்யும் சுயேச்சை மு.கா உடன் கூட்டாட்சிக்கு இணங்கவில்ல என்பதும் வழமையில் இங்கு ஆட்சியமைக்கும் மு.கா வுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருகின்றது. தமிழ் தரப்புடன் ஆட்சியை பங்கிட்டால் இதுவரை காலமும் வெற்றிக்கோலோச்சிய அவர்களால் தமிழர்களின் கோரிக்கைகளை ஏற்பதோ அல்லது அனுசரித்துபோவார்களா என்ற கேள்வியும் உள்ளது.

இவற்றுக்கப்பால் இங்கு ஒரு விடயத்தை சீர்துக்கிப்பார்த்தல் பொருத்தமென நினைக்கின்றேன். கடந்த கிழக்கு மாகாண சபை ஆட்சிப்பங்கீட்டில் 11 உறுப்பினர்களை கொண்ட த.தே.கூட்டமைப்பு 7 உறுப்பினர்களை மட்டும் கொண்டிருந்த மு.கா வுக்கு முதலமைச்சு பதவியை வழங்கி ஆட்சியை பங்கிட்டுகொண்டமை யாவரும் அறிந்ததே. இது தமிழ் மக்கள் மத்தியில் பாரிய விமர்சனங்களை அண்மைய தேர்தல்வரை கொண்டிருந்ததை யாரும் மறுப்பதற்கில்லை.

ஆனால் சற்றும் மாற்றமில்லாத இதேபாணியிலமைந்ந ஓர் ஆட்சிக்கான வாய்ப்பை காலம் இன்று மு.கா வுக்கு வழங்கியிருக்கின்றது. கல்முனை தொடர்பில் இரு சமூகங்களும் ஒன்றித்து மற்றைய பிரதேசங்களுக்கு முன்னோடியாக இருக்கக்கூடிய பிரதேசம், விட்டுக்கொடுப்புக்களை செய்யவேண்டிய இடமென்றெல்லாம் வியாக்கியானம்பேசியோர் அதனை செயற்படுத்த தூண்டுகோலாக இருக்கவேண்டிய காலம் இது. நிபந்தனையின்றி ஆட்சியமைக்க சாய்ந்தமருது சுயேச்சையை அழைத்த மு.கா வின் தலைவர் ஹகீம், அவர்கள் நிராகரித்தபின்பும் ஏன் தமிழ்தரப்பு தொடர்பில் கவனம்செலுத்தவில்லையென அந்த நடுநிலை பற்றி பேசியோரால் இன்றுவரை உணரமுடியாமல் இருப்பதுதான் ஆச்சரியம். இந்த இடம்தாம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் தோழமைக்கட்சிகளின் தலைவர்கள் சிந்திக்கவேண்டிய இடம்.

முஸ்லிம் தரப்பை பொறுத்தவரை கல்முனை நகர் தங்களது வாழ்விடமென்று நிறுவிவிட மிகுந்தபிரயத்தனம் மேற்கொண்டு வந்துள்ளனர். அவர்கள் அரசாங்கங்களோடு கொண்டிருக்கும் பங்காளித்துவத்தை பயன்படுத்தி தமிழர்களை இங்கு அடக்கியாளவேண்டுமென முயற்சிக்கின்றனர். இதன் அங்கங்களாகவே கல்முனை நகரில் முன்னர் ‘சிங்கள கொலனி’ என்றழைக்கப்பட பிரதேசத்தில் ஏற்படுத்தப்பட்ட ‘இஸ்லாமாபாத்’ எனும் குடியேற்றத்திட்டம், தமிழர் பகுதிக்கான பிரதேச செயலகத்தை தரமுயர்துவதில் பலவழிகளிலும் தடையேற்படுத்தும் மு.கா. வின் செயற்பாடுகள், நகர அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர் பகுதிகளை சுருக்க எடுக்கப்படும் முயற்சிகளென வரிசைப்படுத்துமளவு அவர்களது செயற்பாடுகள் இங்கு விரிவடைந்து செல்கின்றன. ஆனால் இங்குள்ள தமிழர் தரப்பு இவற்றிலிருந்து தமது பூர்வீகத்தை காக்கும்பொருட்டு முஸ்லிம்தரப்புக்கு எதிராக மட்டுமன்றி தேசியத்திற்கான த.தே.கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரசுக்கு இடையேயான இணக்க அரசியலுக்கு எதிராகவும் போராடவேண்மியுள்ளது.

மு.கா வுடனான இணக்க அரசியலால் தமிழ் மக்கள் இருப்பதையும் இழந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் யதார்த்தமாக இருக்கின்றது. விட்டுக்கொடுப்பு என்பது இரண்டு பகுதியிலும் இருக்கவேண்டும். இல்லையேல் அது அவசியமற்றது. மாகாணசபையில் தாங்கள் பெற்றதை மாநகர சபையில் அவர்கள் வழங்க வேண்டும். மேற்குறிப்பிட்டவை முஸ்லிம் தரப்பால் ஒருபோதும் சாத்தியப்படப்போவதில்லயென்பது நாமறிந்ததே.

தமிழ்தரப்பை பொறுத்தவரை தங்களது இருப்புக்களை உறுதி செய்வதுதான் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு. அதற்காகவே மக்கள் வாக்களிக்கின்றனர். ஆட்சி பற்றிய அக்கறைகள் அவர்களிடம் ஒருபோதும் இருந்ததில்லை. அதற்கு கல்முனை தமிழர்களும் விதிவிலக்கல்ல. சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சிசபை வழங்கப்படுவது தொடர்பில் தமிழர்கள் கருத்து கூறவேண்டிய அவசியமே இங்கில்லை. ஆனால், அவ்வேளையில் தமிழர் பகுதிகளை துண்டாடி அவர்களது ஒற்றுமையையும்இ தனித்துவத்தையும் சிதைக்க முஸ்லிம் அரசியல் தலைமைகள் முனைவதை அவர்கள் வன்மையாக எதிர்க்கின்றனர்.

ஆளணி, பௌதீக வளத்துடன் இயங்கிக்கொண்டிருக்கும்  கல்முனையில் தமிழர்  பிரதேச செயலகத்தை தரமுயர்த்தல், இயற்கைக்கு புறம்பான முறையில் நகர அபிவிருத்தி என்றபோர்வையில் தமிழர்களது விவசாயக் காணிகளை கையகப்படுத்த எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை எதிர்த்து எமது இருப்புக்கு பங்கமேற்படுத்தப்படுவதை தடுத்தல், தமிழ் கிராமங்களின் எல்லைகளில் இடம்பெறும் அத்துமீறல்களை தடுக்க தேவையான சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளல், தமிழர் கலை, கலாசாரங்களை உறுதி செய்யும் நினைவு சின்னங்களை நிறுவுதல், உள்ளூராட்சி சபைகளால் ஆற்றப்படக்கூடிய சேவைகளை உச்ச அளவில் மக்கள் பெறுவதை உறுதிசெயத்தல் இவைதான் மக்களால் உறுப்பினர்களிடம் எதிர்பார்கப்படுபவை. இம்முறை உறுப்பினர்களாக தெரிவு செயப்படுள்ளோரும் சுயநலமின்றி மக்கள் நலன் தொடர்பில் செயற்படுவோர் என்பதில் ஐயப்பாடுகள் இல்லையென்பதும் இது கட்சி பேதமின்றி அனைத்து தமிழ் உறுப்பனர்களுக்கும் பொருந்துமென்பதும் சிறப்பாகும்.

அதேவேளை கல்முனை தமிழர் நலன் தொடர்பில் மாற்றுநடவடிக்கைகளுக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாயின் அதற்கான தீர்ப்புக்கும் நீண்டநாள் காத்திருக்கவேண்டியதில்லையென்பதை வரும் மாகாண சபை தேர்தல் உணர்த்தும்.

-வேதநாயகம் அரவிந்தன்-

By admin