அவுஸ்திரேலியா : அவுஸ்திரேலியாவில் குடியேறும் மக்களின் எண்ணிக்கை குறைக்கப்படவேண்டும் – முன்னாள் பிரதமர்

அவுஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் குடியேறும் மக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து பத்தாயிரம் (110,000) என்று குறைக்கப்படவேண்டும் என்று முன்னாள் பிரதமர் டொனி அபெர்ட் (Tony அப்போட்) அழைப்பு விடுத்துள்ளார். தற்போது அவுஸ்திரேலியா ஒவ்வொரு ஆண்டும் சுமார் இரண்டு லட்சம் பேரை (190,000) நாட்டில் நிரந்தரமாக குடியேற அனுமதிக்கிறது. இந்த எண்ணிக்கையில் எண்பதாயிரம்பேரைக் குறைத்து இனிமேல் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேரை மட்டுமே நாட்டில் நிரந்தரமாக குடியேற அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் கூறியுள்ளார். குடியேறுவோரின் எண்ணிக்கை குறைந்தால்தான் புதிதாக குடியேறும் மக்கள் அவுஸ்திரேலியா சமூகத்துடன் ஒன்றிணைவது மேம்படும் என்றும், குறைவான மக்கள்தொகை இங்குள்ள மக்களின் சம்பள உயர்வுக்கும் வழி வகுக்கும் என்றும், வீடுகளின் விலை குறைந்து இங்கு ஏற்கனவே வாழும் மக்கள் எளிதில் வீடு வாங்க முடியும் என்றும் டொனி அபெர்ட் தனது கருத்தை நியாயப்படுத்தினார்.

மேலும் குடியேறும் மக்கள் எண்ணிக்கை நாட்டில் அதிகரிப்பதால் போக்குவரத்து நெரிசல், சில குழுக்களின் வன்முறை என்று வேறு பல பிரச்சனைகளும் எழுவதாக அவர் குறிப்பிட்டார்.

ஆனால் பிரதமராக டொனி அபெர்ட் இருந்த போது குடிவரவுத்துறை எத்தனை பேரை புதிதாக குடியேற அனுமதித்ததோ அந்த எண்ணிக்கையை இப்போதைய பிரதமர் அதிகரிக்கவில்லை என்று நாட்டின் கருவூலக்காப்பாளர் ஸ்காட்மோரிசன பதில் கூறியுள்ளார். பிரதமராக டொனி அபெர்ட் பதவி வகித்தபோது குடிவரவுத் துறை அமைச்சராக இருந்தவர் ஸ்காட்மோரிசன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் திறமையின் அடிப்படையில் நாட்டில் புதிதாக குடியேற அனுமதிக்கப்படுகின்றவர்கள் வரி செலுத்தும் மக்கள் என்றும், இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நல்லது என்றும் ஸ்காட்மோரிசன் கூறினார்.

SBS news