கமல் அரசியல் : ‘‘மக்கள் நீதி மய்யம்’’ கமலின் புதிய கட்சி……..

மதுரை ஒத்தக்கடையில்   நேற்று   நடந்த பொதுக் கூடத்தில் தனது புதிய கட்சியின் பெயரையும் கட்சி சின்னத்தையும் அறிமுகம் செய்து வைத்தார் கமலஹாசன்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வந்த கமல் தான் அரசியலில் ஈடுபடப் போவதாகவும் கூடிய விரைவில் கட்சிப் பயணத்தையும் தொடங்க விருப்பதாக அறிவித்து இருந்தார்.அரசியலில் இறங்குவது தொடர்பாக மன்ற நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்..
தொடர்ந்து கேரள முதல்வர் பினராய் விஜயன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு உள்ளிட்டோரையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டில் இருந்து, தனது அரசியல் பயணத்தை பிப்ரவரி 21ம் தேதி துவக்க உள்ளதாகவும், மதுரை ஒத்தக்கடையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயரையும், கொடியையும் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.


இதன்படி தனது அரசியல் பயணத்தை துவக்க, நேற்று காலை 7.50 மணிக்கு ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டிற்கு நடிகர் கமல்ஹாசன் சென்றார். அங்கு கலாமின் அண்ணன் முகமது முத்துமீரா மரைக்காயரை சந்தித்து, ஆசி பெற்றார். தொடர்ந்து அங்கு மீனவர்களுடன் கலந்துரையாடினார்..

மாலை 7 மணியளவில் மதுரை ஒத்தக்கடையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இருவரும் ஒன்றாக மேடையேறினர். 7.30 மணியளவில் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற தனது புதிய கட்சியின் பெயரை கமல்ஹாசன் அறிவித்தார். முன்னதாக மேடை அருகே 40 அடி உயர கம்பத்தில், தூய வெள்ளையில் 6 இணைந்த கைகள் கொண்ட கட்சிக்கொடியையும் அறிமுகம் செய்தார்.

கூட்டத்தில் கமல்ஹாசன் பேசும்போது, ‘‘இது மக்களுக்கான கட்சி. நான் உங்கள் கருவி; தலைவனல்ல. இது தலைவர்கள் நிறைந்த கூட்டம். கட்சியின் பெயரை நான் அறிவிக்கிறேன். ‘மக்கள் நீதி மய்யம்’ – இதனை சொல்லி பழகிக் கொள்ளுங்கள். இனிமேல் நமக்கு கடமை இருக்கிறது. இது ஒருநாள் கொண்டாட்டம் அல்ல. இந்த சந்தோஷத்துடன், பெரும் பொறுப்பும் வந்து சேர்ந்துள்ளது. அரசியலில் எடுத்துக்காட்டாக, முன்னோடிகளாக விளங்க வேண்டும். அறிவுரை கூறும் தலைவனல்ல நான். அறிவுரையை கேட்கும் தொண்டன். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற சோற்றை சமைத்திருக்கிறோம். இந்த பருக்கையை யாராவது தொட்டுப்பார்க்க நினைத்தால், அவர்கள் விரல் சுடும். பல நாட்களாக நடந்து வரும் அநியாயங்களைப் பார்த்து பொங்கி எழுந்ததால், சமைத்த சோறு இது.தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்ற கூட்டம் நடத்தப்படும்,’’ என்றார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அகில இந்தியப் பொறுப்பாளராக தங்கவேல் நியமிக்கப்பட்டார். கட்சியின் உயர்மட்டக் குழுவும் அறிவிக்கப்பட்டது. இதில் கமலின் நண்பரும், பேராசிரியருமான கு.ஞானசம்பந்தன், நடிகை பிரியா, கமீலா நாசர், ஓய்வுபெற்ற காவல்துறை ஐஜி மவுரியா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். பின்னர், மாவட்டவாரியான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு மேடையேற்றப்பட்டனர். விழாவில் பாடலாசிரியர் சினேகன், காமெடி நடிகர் வையாபுரி உள்ளிட்டோர் கட்சியில் இணைந்தனர். விழாவிற்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார். கட்சி துவக்க விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி எம்எல்ஏ சோம்நாத் பாரதி, விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் நேர்மைக்கு பஞ்சம் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு: கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்திப் பேசும்போது, ‘‘மாற்றத்தை கொண்டு வரவேண்டிய இடத்தில் தமிழகம் இருக்கிறது. எப்போதும் நான் கமல் விசிறியாகவே இருந்தேன். இங்கு விசிறியாக மட்டும் வரவில்லை. திரைப்பட ஹீரோவாக இல்லாமல், களத்தில் நின்று போராடும் நிஜ ஹீரோவாக கமலை பார்க்கிறேன். அவரது நேர்மை பிடித்திருக்கிறது. கடந்த சில மாதங்களாக அவரது துணிச்சல் பிடித்திருக்கிறது. இரு பெரிய கட்சிகளை வீழ்த்தி டெல்லியில் ஆட்சியை பிடித்தேன். தற்போது அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பவருடன் இணைந்து குரல் கொடுக்கிறேன். நேர்மையாக ஆட்சி செய்தால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. இங்கே நிதி, பணம் பற்றாக்குறை இல்லை. நேர்மை பஞ்சமாக இருக்கிறது. டெல்லி மக்கள் நிகழ்த்திய சாதனையை முறியடித்து, தமிழகத்தில் புதிய சகாப்தம் உருவாக்க கேட்டுக் கொள்கிறேன்,’’ என்றார்.

கட்சிக்கொடியில் இணைந்த கைகள்: கமல் அறிமுகப்படுத்திய கட்சிக் கொடியானது, வெள்ளை நிறத்தில் இணைந்த கைகளுடன் உள்ளது. 3 சிவப்பு நிறக்கரங்களும், 3 வெள்ளை நிறக்கரங்களும், வட்ட வடிவத்தில் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக பிடித்துக் கொண்டபடி உள்ளது. நடுவில் கருப்பு நிறத்தில் வெள்ளை நிற நட்சத்திரம் உள்ளது. கொடிக்கு விளக்கம்: ‘‘எங்கள் கட்சிக்கொடி தென்னிந்திய மேப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. 6 கைகள், 6 மாநிலங்களை குறிக்கிறது. நட்சத்திரத்தின் ஆறு முனை, மக்களை குறிக்கிறது. மக்களின் நீதியை மையமாக வைத்து துவங்கப்பட்ட கட்சி இது. எனவேதான், நட்சத்திரம் மையமாக இருக்கிறது. நீதிக்கட்சி போன்ற மூத்த கட்சிகளின் அறிவுரைகளை கையாண்டு கட்சிக்கொடியை உருவாக்கி உள்ளோம்,’’என்றார் கமல்.