மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள்  கவன ஈர்ப்பு போராட்டம்!

-டினேஸ்-

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக நேற்று  புதன்கிழமை கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் தொழில் உரிமை கோரிய சாத்வீக போராட்டம் கடந்த ஆண்டு பெப்ரவரி 21ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டும் இதுவரையில் தமக்கான உரிய நியமனங்கள் வழங்கப்படாததை கண்டித்தும் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.

பட்டதாரிகளின் ஏமாற்றம் தொடருமா?,அநீதி இழைக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு நீதிவேண்டும்,வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எங்கே,4927வெற்றிடங்களை உடனடியாக நிரப்பு,நீதியற்ற கிழக்கு மாகாணசபையா,ஆசிரிய போட்டிப்பரீட்சையில் 40 புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்தவர்களுக்கும் நியமனங்களை வழங்கு போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

தமது தொழில் உரிமை கோரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர்,எதிர்க்கட்சி தலைவர்,கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆகியோரினால் பல்வேறு உறுதிமொழிகள் வழங்கப்பட்ட நிலையிலும் இதுவரையில் அவை முறையாக நிறைவேற்றப்படவில்லையென பட்டதாரிகள் குற்றஞ்சாட்டினார்.

கிழக்கு மாகாணத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள் உள்ளபோதிலும் அவற்றிற்குள் பட்டதாரிகளை உள்ளீர்ப்பதற்கு பொதுச்சேவை ஆணைக்குழு தொடர்ந்து பின்னடித்துவருவதாகவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.
தமக்கான தொழில் உரிமையினை நல்லாட்சி அரசாங்கம் பூர்த்திசெய்யாவிட்டாலி; தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

By admin