இன்று (21.02.2018) புதன்கிழமை உலக தாய்மொழி தினம்.

அதனையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகின்றது.

‘தாய் மொழி கண் போன்றது; பிற மொழி கண்ணாடி போன்றது’

இன்று உலக தாய்மொழிதினம். தாய்மொழியின் முக்கியத்துவம் அதனுடன் தொடர்புடைய தாய்மொழிக்கல்வி பற்றியும் இக்கட்டுரை கூறவிளைகின்றது.

மொழி ஒரு கருவி. மனிதன் மொழிகொண்டுதான் வாழ்கின்றான். மொழியால் கருத்துப்பரிமாற்றம் செய்கின்றான். உலகில் 4000-5000 மொழிகளிருப்பதாக ஆய்வுநிலை மொழிநூல்கள் கூறுகின்றன.

ஒருவன் சிறுவயதில் கற்றுக்கொண்டதும் சிந்திக்கவும் கருத்துக்கள பரிமாறவும் இயல்பாக ஒருவனுக்கு உகந்ததும் தாய்மொழி எனலாம்.

ஒருவரின் தாய்மொழி தனது பெற்றோரின் மொழியா? அல்லது தனது தாயின் மொழியா? என்பதில் சிக்கல் உள்ளது. எமது தாய் மொழி தமிழ். எமது புலம்பெயர் வாழ்வில் பிறந்த பிள்ளைகளுக்கும் தமிழ்தான் தாய்மொழியா?

புலம்பெயர் வாழ்வில் தாய்மொழி எது என்பதை வரையறுப்பதில் சிக்கல்கள் உள்ளன.

ஒருவரின் தாய்மொழி என்பது அவரின் பெற்றோரின் தாய்மொழியாக எப்போது அமையுமெனின் அவரின் பெற்றோரின் தாய்நாட்டில் அவர் வாழும்போதும் அல்லது அவரின் தாய்நாட்டுமொழி மற்றொரு நாட்டுமொழியாக இருக்கும்போதுமேயாகும்.

ஒருவன் தன்கருத்துக்களை முதன்முதலில் வெளியிடப்பயன்படுத்தும் மொழி அவனின் தாய்தந்தையரின் மொழியாக இருக்கவேண்டுமென்பதில்லை. முதன்முதல் அவன் பேசக்கற்றுக்கொண்ட மொழியாகவும் இருக்கவேண்டும் என்பதில்லை. ஏனெனில் குறிப்பிட்ட சில காரணங்களினால் ஒரு மனிதன் முதன்முதலில் பேசப்பழகிய மொழியை முற்றாக மறந்துவிடவும்கூடவும். எனவேதான் பெற்றோரின் தாய்மொழி பிள்ளைகளுக்கு வேற்றுமொழியாகஅமையலாம்.

எனவேதான் யுனெஸ்கோ தாய்மொழி என்றால் என்ன என்பதற்கு பின்வருமாறு வரைவிலக்கணம் கூறுகின்றது.

(The use of vernacular languages in Education ,Report of the UNESCO ,Paris 1953)

1.பெற்றோர்களுடைய தாய்மொழியும் பிள்ளைகளின் தாய்மொழியும் ஒன்றாக இருக்கவேண்டும் என்ற நியதி இல்லை.

2.ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மொழியும் ஒருவனுக்குத் தாய்மொழியாக அல்லது தாய்மொழிகளாக அமையும்.

3.ஒருவனின் வாழ்க்கையில் தாய்மொழி மாறிக்கொண்டே போகலாம்

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்

    நற்றவ வானினும் நனி சிறந்தனவே – பாரதியார்

பெற்ற தாயைவிட சிறந்தது தாய்மொழியாகும். எந்நாட்டவராக இருப்பினும் அவரவர் தாய் மொழியிலேயே கல்வி கற்பதுதான் மிகச் சிறந்ததாகும்.

உலகளவில் மனித சமுதாயம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முடிகிறது என்றால் அதற்கு காரணம் மொழி. உலகில் பேச்சு வழக்கில் ஆயிரக்கணக்கான மொழிகள் உள்ளன. இது மாவட்டம் மாகாணம். நாடு கண்டம் என வேறுபடுகிறது. ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் ஒரு தாய்மொழி இருக்கும்.

இவற்றின் தனித்தன்மை பண்பாட்டை பாதுகாக்கும் நோக்கிலும் அவற்றுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கிலும் பெப். 21ம் தேதி சர்வதேச தாய்மொழி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

‘தாய் மொழி கண் போன்றது; பிற மொழி கண்ணாடி போன்றது’ என்பது பொன்மொழி. கண்ணாடிகளுக்காக கண்ணை இழக்காமல் வாழ்வது குறித்து வளரும் தலைமுறைக்கு வழிகாட்டுவோம்.

. உலகில் உள்ள மொழிகளுக்குள் ஒரு தொடர்பை ஏற்படுத்தவும் ஒற்றுமையை வளர்க்கவும் ஆண்டுதோறும் பெப்.21ம் தேதி உலக தாய்மொழி தினம் யுனெஸ்கோ அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது.

தாய்மொழி தேசிய மொழி மற்றும் தொடர்பு மொழி என பொதுவாக மூன்று விதமான மொழிகள் ஒருவருக்கு தெரிந்திருந்தால் எங்கு வேண்டுமானாலும் வாழ்வதற்கு துணையாக இருக்கும் என அறிஞர்கள் கூறுவர்.

ஆனால் தொடர்புகளுக்காக உருவான மொழியின் பெயரால் இனவாதம் துவங்கியது துரதிஷ்டமானது. உலக மக்களால் பயன்படுத்தப்படும் அனைத்து மொழிகளுக்கும் பாதுகாப்பும் உரிய மரியாதையும் அளிக்க வேண்டும். எந்த மொழியையும் அழிக்கக் கூடாது.’

ஒருவர் பல மொழிகளை தெரிந்து கொள்ளவும் வெளிநாட்டு மொழிகளை கற்றுக் கொள்ளவும்மொழிபெயர்ப்பு மூலம் அமைதியை உருவாக்கவும்’ இத்தினம் வலியுறுத்துகிறது.

.தமிழ் மொழி 3500 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியமிக்கது. அதை பேசுகிற ஒருவராக பெருமையும் புனிதமும் கொள்ள வேண்டும். தமிழ் செம்மொழி ஆக்கப்பட்ட பின் ஓரளவு புரிதல் வந்தது. ஆங்கில மொழி உருவாகி 500 ஆண்டுகள் தான் ஆகிறது. அறிவியல் தமிழ் வானவியல் சாஸ்திரம் கணிதம் குறித்த சொற்கள் பழந்தமிழில் இருந்தன. அதில் பயன்பாட்டில் இருந்ததை இலக்கியச் சான்று மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அறிவியல் பெயர்களை தமிழில் சொல்ல முடியவில்லை என கூறமுடியாது. தமிழனைப் போல அகம் புறம் என வாழ்க்கையை பிரித்துஇஅதன்படி வாழ்ந்தவர்கள் வேறு நாட்டில் கிடையாது.

உலகில் முன்னிலையிலுள்ள 20 மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாகும். ஜரோப்பியமொழிகளே உலகின் அரைவாசிப்பேர் பேசுகிறார்கள்.

ஒருவருக்கு ஒருவர் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள உதவிய மொழி பின்னாளில் இனத்தின் அடையாளமாக மாறியது. உலகளவில் மொழியானது நாட்டுக்கு நாடு மாநிலத்துக்கு மாநிலம் சமூகத்துக்கு சமூகம் மாறுபடுகிறது.

 உலகில் பேசப்படும் மொழிகள் பொது மொழி தாய்மொழி என இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் 100 ஆண்டுகளுக்கு முன் 6200 ஆக இருந்த மொழிகள் இன்று 3000க்கும் குறைவாக குறைந்துள்ளதாக மொழியியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.இந்தியாவில் இந்தி தமிழ் தெலுங்கு உள்ளிட்ட 22 மொழிகள் அதிகாரப்பூர்வமாக உள்ளன

இந்தியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின் பாகிஸ்தானில்’உருது மொழி’ அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இருந்தது. 1952ம் ஆண்டு அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் (தற்போது வங்கதேசம்) உருது மொழிக்குப் பதிலாக வங்க மொழியை அங்கீகரிக்க வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் கோரிக்கை தெரிவித்தனர்.

கடந்த 1952 பிப். 21ம் தேதி பாகிஸ்தான் அரசின் ஊரடங்கு உத்தரவையும் மீறி டாகா பல்கலை மாணவர்கள் நடத்திய போராட்டத்தில்நான்கு மாணவர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலியான மாணவர்களின் நினைவாகயுனெஸ்கோ அமைப்பு 1999ம் ஆண்டு இத்தினத்தை உருவாக்கியது.

மொழியின் பிறப்பிடம் எது? தாயின் கருவறை. கருவறை இருளில் கண்கள் மூடியிருக்கும் கருக்குழந்த சும்மா இருப்பதில்லை. தாயுடன் பேசுபவர்களின் குரலை சூழ்ந்து ஒலிக்கும் சத்தங்களை சதா கேட்டுக் கொண்டேயிருக்கும். தாயின் வயிற்றுக்குள் கருவாக இருக்கும் போதே மொழியை குழந்தை கற்றுக் கொள்கிறது என்கிறார் மதுரை மனோதத்துவ நிபுணர் ராணி சக்கரவர்த்தி.

அவர் கூறியதாவது: தாய்மொழியை அறிமுகப்படுத்துவது தாயை அறிமுகப்படுத்துவதற்கு சமம். கருவில் உள்ள குழந்தைகள் வெளியில் உள்ள சத்தத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளும். எந்த மொழி அதிகம் பேசப்படுகிறதோ அதை கிரகித்து கொள்ளும். அந்த மொழியை வேகமாக பின்பற்றும். முதல் மூன்று ஆண்டுகள் வரை ஒரு மொழியை மட்டுமே குழந்தைகளால்

கற்றுக் கொள்ள முடியும்.

மொழியை நன்கு பழகிய பின் மூன்றரை வயதுக்கு மேல்ரண்டாவது மொழியை கற்றுத் தரலாம். அப்போது தான் குழப்பமின்றி தெளிவாக பேசமுடியும்.

மனிதனின் அடையாளம் அவனது தாய்மொழி தான். மொழியில் மூத்த தமிழ்மொழியைப் பேசுவதே பெருமையான விஷயம். அதுவே தாய்மொழியாய் நமக்கு அமைந்தது பெரும்பேறு. உச்சரிக்க இனிதான நமது மொழியின் அருமை தெரியாமல் பிறமொழி மோகத்தில் தமிழை தள்ளி வைத்து வேடிக்கை பார்க்கிறோம். தாய் மொழி தமிழின் அருமையை இனிமையை மேன்மையை உளமார உணர இந்த நாள் உதவட்டும்.

தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம் தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம்.

தாய்மொழி வழி கல்வியின் சிறப்பு

   தாய்மொழியிலேயே கல்வி கற்க வேண்டும் என்று கூறுவதனால் பிற மொழிகளைக் கற்க வடாது என்பது பொருள் அல்ல. எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்கலாம். ஆனால் கல்வி என்பது தாய்மொழி வழியாக மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும்.

தாய்மொழி கல்வி குறித்த காந்தியடிகள்

    தாய்மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டிருந்தால் நம்மிடையே பல ஜெகதீஸ் சந்திரபோஸ்களும் பி.சி. ராய்களும் தோன்றியிருப்பார்கள் என்று காந்தியடிகள் கூறுகிறார். மனிதர்களின் சிந்தனையும் கற்பனையும் தாய்மொழியில்தான் உருவாகின்றன. எனவே சிந்தனை வளர்ச்சிக்கு தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது.

தாய்மொழியில் அறிவியல் கல்வி

   ஜப்பான் ஜெர்மன் ரஷ்யா போன்ற அயல்நாட்டு மக்கள் அந்நிய மொழியை புறக்கணித்துதாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து தாய் மொழியிலேயே கல்வி பயின்றதால்தான் இன்று உலக மேதைகளாக இருக்கிறார்கள்.

புதுப்புது அறிவியல் சாதனங்களை உருவாக்குவதிலிருந்து கோள்களை ஆராய்ச்சி செய்வது வரை அவர்கடள் உலக அரங்கில் புகழ் பெற்றள்ளனர்.

   உலகிலுள்ள பிற நாடுகளில் எல்லாம் அறிவியலை அவரவர் தாய்மொழியிலயே கல்வி பயின்றதால்தான் இன்ற உலக மேதைகளாக இருக்கின்றனர். புதுப்புது அறிவியல் சாதனங்களை உருவாக்குவதிலிருந்து கோள்களை ஆராய்ச்சி செய்வது வரை அவர்கள் உலக அரங்கில் புகழ் பெற்றுள்ளார்கள்.

    தாய்மொழியில் அறிவியலைப் போதிப்பதற்கான கலைச் சொற்கள் அதிகம் இல்லை என்ற ஒரு சிலர் கூறுகின்றனர். அது தவறான கூற்று. புதியனவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும்.  புதிய கலைச்சொற்களை தமிழில் உருவாக்க வேண்டும்.

    உலகிலுள்ள பிற நாடுகளில் எல்லாம் அறிவியலை அவரவர் தாய்மொழியிலேயே கற்கின்றனர். அவர்கள் மொழியிலெல்லாம் அறிவியலுக்கான கலைச் சொற்கள் இருக்கும் போது உலகின் தொன்மை மொழியான உயர்தனிச் செம்மொழியான நம் தாய்மொழியில் கலைச் சொற்களை உருவாக்குவது கடினமல்லவே.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் என்று பாரதியார்.கூறியுள்ளார். பல மொழிகளை கற்றறிந்தவர் பாரதியார். அவர்கள் கற்ற அத்தனை மொழிகளிலும் இனிமை உள்ளது என்று பாரதி கூறியுள்ளார். தன் தாய்மொழியின் மீது இருந்த பற்றினையும் உயர்வினையும் எவ்வளவு அழகாக அவர் வெளிப்படுத்தியுள்ளார். தன் தாய்மொழியின் மீது இருந்த பற்றினையும் உயர்வினையும் எவ்வளவு அழகாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

    உலகிலுள்ள மற்ற நாடுகள் தாய்மொழியில் கல்வி கற்று சிறந்த விளங்குவிது போல நாமும் தாய்மொழியில் கல்வி கற்று சாதனைகள் பல படைக்க வேண்டும்.

தாய்மொழிக் கல்வி:

தாய்மொழியில் கல்வி கற்பதன் மூலம் குழந்தைகள் கற்பதைத் தாங்கள் பேசுவதுடன் அல்லது சமூகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கமுடியும். அதனால் அவர்கள் எளிதில் கற்கின்றனர். அதனால் அவர்கள் ஒரு விஷயத்தை நோக்கும் விதம் வேறு மொழியில் கற்பவர்களை விட மாறுபடுகிறது. இவை அனைத்தும் கற்கும் திறனை நாளடைவில் அதிகரிக்கச் செய்கிறது. இது கற்கின்ற குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் கற்றுத் தரும் ஆசிரியர்களும் தாங்கள் சொல்ல வருவதை கற்பவருக்கு சரியாக போதிக்க முடிகிறது. இதனால் மாணவர்கள் தன்னம்பிக்கை கூடுகிறதுஇ பேச்சாற்றல் வளர்கிறது மற்றும் ஆக்கத்திறன் கூடுகிறது.

இதனை உணர்ந்துதான் தாய்மொழியில் அறிவியல் கல்வியைக் கொடுப்பதன் மூலம் ஆக்கப்பூர்வ சிந்தனையைக் குழந்தைகள் மத்தியில் கொண்டுவர முடியும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறியுள்ளார்.

தாய்மொழிக் கல்வி பற்றி உநெஸ்கோ(UNESCO) அமைப்பு:

தாய்மொழியில் கல்வி பற்றி ஐ.நா. சபையின் உநெஸ்கோ – –UNITED NATIONS EDUCATIONAL, SCIENTIFIC and CULTURAL ORGANISATION (UNESCO) அமைப்பு பல்லாண்டு காலமாக ஆராய்ச்சி செய்து வருகிறது. அந்த ஆராய்ச்சிகளின் அடிப்படையில் சில தகவல்கள் மற்றும் வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

முதலாவதாகத் தாய்மொழியில் கல்வி பயிலும் குழந்தைகளே மிகவும் ஆழமாகக் கல்வி கற்கின்றனர். இது அனைத்து வயதினருக்கும் அளிக்கப்படும் கல்விக்கும் பொருந்தும்.

உநெஸ்கோ நிலைப்பாடான தாய்மொழியில் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்த உநெஸ்கோ பல கூட்டங்களை நடத்தி அதன்மூலம் பல தீர்மானங்களை அறிவித்துள்ளது. அந்த தீர்மானங்களின் தொகுப்பு:

 கல்வியின் தரத்தை உயர்த்த தாய் மொழியில் கல்வியை ஆதரிப்பது மற்றும் மேம்படுத்துவது.

 பள்ளிகளில் அனைத்து நிலைகளிலும் இரு மொழிகளில் அல்லது பன்மொழிகளில் கல்வியைக் கற்றுத்தர ஊக்கப்படுத்துவது.

 கலாச்சாரப் பரிமாற்றக் கல்வியில் மொழியை முன்னிறுத்துவது.

சிந்தனைத் திறனின் திறவுகோல் தாய்மொழி:

பிப்ரவரி 21இஅனைத்துலகத் தாய்மொழி தினம்.

யுநெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட அத்தினம் உலகம் முழுவதும் 2000 ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

தாய்மொழிதான் சிந்திக்கும் திறனின் திறவுகோலாக இருக்கிறது. எந்த மொழியைக் கற்றாலும்இ எத்தனை மொழிகளைக் கற்றாலும் ஒருவரின் சிந்தனை உருவெடுப்பது தாய்மொழியில்தான்.

தாய்மொழிக் கல்வி கற்பதனால் தொழில்துறை மற்றும் பொருளாதாரம் போன்றவற்றில் வெற்றி பெற முடியுமா என்ற கேள்வி தவறான கருத்தாகும். ஏனெனில் தாய்மொழிக் கல்வி வாழ்க்கையை செம்மைப்படுத்துகிறது.தாய்மொழிக் கல்வி போதனையில் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியதுடன் அதன் மேம்பாட்டில் அக்கறை கொள்ள வேண்டும்.

‘அம்மா’ என்ற சொல் தாய்மொழியின் முதற்சொல். அதுவே கல்விக்கு அடிப்படையாக இருக்க வேண்டும். எதிர்வரும் காலத்தில் அனைத்து இன மக்களும் அனைத்துலகத் தாய்மொழி தின விழாவில் பெருமளவில் பங்கேற்று மக்களிடையே நல்லிணக்கம் மலர முன்வர வேண்டும்.

ஒருநாள் போதுமா?

தாய்மொழியின் உயர்வை உன்னதத்தைப் பேசுவதற்கும் படிப்பதற்கும் ஒருநாள் போதுமா?

அம்மா மொழி பாட்டி மொழி இருக்கின்றன. அத்துடன்  ‘வைப்பாட்டி’ மொழியும் இருக்கிறது. இவற்றுக்கிடையிலான வித்தியாசங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறிய திராவிடம் ‘தாய்மொழி எனது உள்ளத்தில் இருக்கிறது என்று கூறுவது வழக்கம்’. ஆனால் அது நமது குருதியில் இருக்க வேண்டும்.

மொழி என்பது வெறும் கருத்து பரிமாற்றங்களுக்கான ஒரு கருவி என்பதைத் தாண்டி அது  மக்களின் கலாச்சாரங்களைத் தாங்கி நிற்கும் சாதனமாக உள்ளது. அது மக்களின் பண்பாட்டுடன் இரண்டறக் கலந்துள்ளது. தாய்மொழிக் கல்வியால் கலாச்சாரங்களை ஒட்டி கல்வி கற்க முடிகிறது. மக்கள் தங்கள் கலாச்சாரங்களைத் தழுவி வாழ்கின்றனர். இதனால் உலகில் பல்வேறுபட்ட கலாச்சாரங்களைப் பாதுகாக்க முடிகிறது.

உலக நாடுகள் அனைத்தும் தாய் மொழிக் கல்வியின் அவசியத்தை உணர்ந்து அதை நோக்கி நகர்ந்துள்ளன. நம் நாட்டிலும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தாய் மொழி கல்வியை ஆதரித்தால் தான் ஒரு வலிமையான தலைநிமிர்ந்த சமூகத்தை உருவாக்க முடியும்.

மொத்தத்தில் உலகத்தை புரிந்துகொள்ள வழிசெய்கிறது இம் மொழி. அறியாமையை அகலச்செய்து அறிவின் அளவை அகலச்செய்கிறது மொழி எனலாம்.

விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா

By admin