மெக்சிகோ : மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக தென் மெக்ஸிக்கோ நாட்டில் மீண்டும் நில நடுக்கம் ரிக்டர் அளவு கோலில்  5.9 புள்ளியாக பதிவு…..

மெக்சிகோ நாட்டின் ஒயாசகா மாகாணத்தில் உள்ள சாந்த காட்டரினா மெசோகன் நகரில் கிழக்கு பகுதியில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.9 புள்ளியாக இருந்தது. இதனால் சில வினாடி நேரம் வீடுகளும், கட்டிடங்களும் குலுங்கின. அப்போது அபாய எச்சரிக்கை மணி தொடர்ந்து ஒலிக்கப்பட்டது. இதையடுத்து வீடுகளில் தூங்கிக் கொண்டு இருந்தவர்கள் உயிர் பிழைக்க அலறியடித்துக் கொண்டு வெளியே வந்தனர். எச்சரிக்கை மணி ஒலிப்பது நின்ற பிறகே மக்கள் வீடுகளுக்கு திரும்பினர். இதன் தாக்கத்தை 320 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள மெக்சிகோ சிட்டி நகரிலும் உணர முடிந்தது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து உடனடியாக தகவல் எதுவும் தெரியவரவில்லை. கடந்த வெள்ளிக்கிழமையன்று இதே பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 7.2 புள்ளியாக பதிவான நில நடுக்கம் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. இந்தநிலையில் இந்த நில அதிர்வு அப்பகுதி மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தி உள்ளது.