தமிழ்க் கட்சிகள் ஒரணியில் இணைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் சமகால அரசியல் மாற்றங்கள்!  -அரவிந்தன் வேதநாயகம் –

இன்று அரசியல் வட்டாரங்களில் முக்கியம்பெற்றவிடயமாக உள்ளூராட்சி மன்ற முடிவுக்கு பின்னரான நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற நிலைமை பார்க்கப்படுகின்றது. பிரதமர், ஆளும் கட்சி, கூட்டாட்சி போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படுவதன் மூலம் ஆட்சிமாற்றங்கள் நிகழலாமென அவதானிகள் கருத்து தெரிவித்து வருகின்ற அதேவேளை முக்கிய அறிவிப்பை  வெளியிடவிருப்பதாக தெரிவித்திருந்த ஜனாதிபதி அதனை இறுதி நேரத்தில் இரத்து செய்திருந்தமையும், பிரதமர் தான் பதவி விலகப்போவதில்லையென்றும் நல்லாட்சி நீடிக்குமென தெரிவித்துள்ளதையும் சற்றே பரபரப்பைக்குறைத்திருக்கின்றன.

தேர்தல் முடிவுகள் கொழும்பு அரசியல் களத்தில் இவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் அதேவேளை வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கும், அரசியல் தலைமைகளுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான அணி சற்றும் வலுவிழக்கவில்லை என்பதை சமிக்ஞை செய்திருக்கின்றது. இச்சமிக்ஞையானது இலங்கை அரசியலில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் தமிழர்கள் தங்கள் பலத்தை ஒருமித்து காட்டவேண்டிய கட்டாயதேவை இன்னும்முற்றுப்பெறவில்லை என்பதை கோடிட்டு காட்டுகின்றது.

தமிழ்த்தரப்பை பொறுத்தவரை அனைத்து விடயங்களையும் அவர்கள்சார்பில் த.தே.கூட்டமைப்பே கையாண்டுவருகின்றது. முந்தைய கூட்டமைப்பில் இருந்து ஈ.பி.ஆர்.எல்.எப் சுரேஸ் அணி வெளியேறியுள்ள நிலையில் இன்னும் பல தமிழ் கட்சிகளும், கட்சிகளின் கூட்டுக்களும் கூட வெளியே இருக்கின்றன. இவற்றுள் கிழக்கை மட்டும் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளும் உள்ளடங்குகின்றன. இவ்வாறான ஒரு நிலை தமிழ் மக்களுக்கு சாதகமான பிரதிபலன்களை ஒருபோதும் வழங்கப்போவதில்லை. தமிழ் மக்களது இணைந்த வடகிழக்கில் சுயாட்சிக் கோட்பாடு இன்று சமஷ்டி கோரிக்கையாக சுருங்கி நிற்பதுவும் இப்பிழவுகளின் காரணமாகவே.

எதிர் வரும் காலங்களில் இணைந்த வடகிழக்கை உருவாக்கி தமிழ் மக்களிற்கான ஆட்சிக்கோரிக்கையொன்றை முந்நிலைப்படுத்தும்போது சர்வஜன வாக்கெடுப்பொன்றை சந்திக்கவேண்டிய சூழல் ஏற்படுமாக இருப்பின் ஏனைய இரு சமூகங்களை விஞ்சி பெரும்பான்மையை நிரூபிக்க இந்த அனைத்துக்கட்சிகளினதும் ஆதரவு விரும்பியோ விரும்பாமலோ கூட்டமைப்புக்கு தேவையாக இருக்குமென்பதை யாரும் மறுக்கத்தான் முடியுமா?

 

எனவே, இப்பிழவுகளிற்கான முக்கிய காரணியாக அதிகாரப் போட்டி இருப்பதன்காரணமாக உட்பூசல்களுக்கு குறைவில்லாதிருக்கின்றது. கூட்டமைப்புக்ககிடையே ஒரு நடைமுறைக் கட்டமைப்பு ஏற்படுத்தப்படாமையும், ஏற்படுத்தப்படும் இணக்கப்பாடுகளுக்கேற்ப பங்குதாரக் கட்சிகள் நடந்துகொள்ளாமல் ஆதிக்கத்தை திணிக்க முற்படுகின்றமையும் கூட்டமைப்பின் ஆரோக்கியமான நகர்வை நாளுக்குநாள் பலவீனப்படுத்தி செல்வதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டியநிலை காணப்படுகின்றது.

என்னதான் தமிழ் கட்சிகளின் தலைமைகள் ஒன்றிணைந்து செயற்பட பகிரங்கமாக விருப்பம் தெரிவிக்கின்றபோதும் உண்மையில் அது தமிழ் மக்களது நலனைக்கருத்தில்கொண்டுதான் தங்களுக்குள் இணக்கப்பாட்டை ஏற்படுத்த முனைகிறார்களா என்ற ஐயப்பாடே தமிழ் மக்கள் மத்தியில் மேலோங்கியிருக்கின்றது.

இவ் ஐயப்பாடுகளைக் களைவதற்கும், கூட்டமைப்பை நடைமுறைச் சிக்கல்களின்றி நகர்த்திசெல்வதற்கும் அதனை அரசியல் கட்சியாக பதிவு செய்வதும், பொறுப்புக்களை பங்காளிக் கட்சிகளிடையே பகிர்ந்து கொள்வதுமே தற்போதைய தேவையாக இருக்கின்றது.

இலங்கையில் எத்தகைய அரசியல் மாற்றமேற்பட்டாலும் தமிழர் அரசியல் சக்தி பலமுடன் பயணிக்க வேண்டியதன் அவசியம் கருத்தில் எடுத்தே தமிழ்க் கட்சிகளை இணைத்து அன்று தூரநோக்குடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

இது தனிப்பட்ட ஒரு கட்சிக்கு உரித்தானது இல்லை என்பதையும் அனைத்து தரப்பும் புரிந்துகொண்டு விட்டுக்கொடுப்பு பரிந்துணர்வுடன் வலுவான தமிழ் அரசியல் சக்தியாக ஒற்றுமையுடன் சர்வதேச ரீதியில் தீர்வை நோக்கி இலங்கை அரசை நகரும்பொருட்டு அழுத்தம்கொடுப்பதற்கும் தமிழ் கட்சிகள் ஒன்றிணைய வேண்டுமென்பது காலத்தின் கட்டாயமாகும்.

-அரவிந்தன் வேதநாயகம்-

By admin