ஈரான் : ஈரான் விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் 66 பேர் பலியாயினர்……..

60 பயணிகள் மற்றும் ஆறு விமானப் பணியாளர்களோடு சென்ற பயணிகள் விமானம் ஒன்று இரானில் உள்ள மலையில் மோதி நொறுங்கியதில், அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரான் தலைநகர் தெஹரானில் இருந்து யசூஜ் நகருக்கு இந்த விமானம் பறந்துகொண்டிருந்தபோது விபத்து நடந்திருக்கிறது.

இஸ்ஃபஹான் மாகாணத்தில் தொலைதூர நகரமான Semirom 620km (சுமார் 390 மைல்களுக்கு அப்பால்) சக்ரோஸ் மலைகளில் இந்த விமானம் மோதியது.

“அனைத்து அவசர காலப் படைகளும் தயாராக இருப்பதாக” அவசர சேவைகளின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

மோசமான காலநிலை காரணமாக சம்பவ இடத்துக்கு மீட்பு ஹெலிகாப்டர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த விமானம் ஏசெமன் விமான நிறுவனத்தின் ATR 72-500 விமானம் என நம்பப்படுகிறது.

விமானத்தில் 60 பயணிகளோடு, இரண்டு பாதுகாவலர்கள், இரண்டு விமான ஊழியர்கள், விமான ஓட்டுனர் மற்றும் ஒரு சக விமான ஓட்டுனர் இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.