ஜப்பான் : அகதி அந்தஸ்து கோரிய 19,628 பேர் விண்ணப்பத்தில் : வெறும் 20 பேருக்கு மட்டும் அகதி அந்தஸ்து அளித்த ஜப்பான்……

2017ம் ஆண்டில் ஜப்பானில் அகதி அந்தஸ்து கோரி அரசிடம் 19,628 பேர் விண்ணப்பத்திருந்தனர். அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்தந்தவர்களில் பெரும்பான்மயானோர் பிலிப்பைன்ஸ், வியட்நாம், இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.

இந்த நிலையில், ஜப்பானிய அரசு வெறும் 20 பேருக்கு மட்டுமே தஞ்சக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவித்துள்ளது. இதில் எகிப்தைச் சேர்ந்த 5 பேர், சிரியாவைச் சேர்ந்த 5 பேர், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 2 பேருக்கு தஞ்சக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஜப்பான், பாதுகாப்பு காரணங்கள் கருதி மற்ற 8 பேரின் நாடுகளைத் தெரிவிக்க மறுத்துள்ளது.

2016ம் ஆண்டு 10,901 விண்ணப்பங்களில் 28 பேருக்கு தஞ்சக்கோரிக்கை உறுதிச் செய்யப்பட்டிருந்தது. இந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது 2017ம் ஆண்டின் தஞ்சக்கோரிக்கை விண்ணப்பங்கள் 80% உயர்ந்துள்ளதை காண முடிகின்றது.

தஞ்சம் கோரியவரின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் வரை முறையான விசாவுடன் இங்கு வேலை செய்யலாம் என்ற நடைமுறை இருப்பதால், சமீப ஆண்டுகளாக அகதி அந்தஸ்து கோருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக ஜப்பான் நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில், கடந்த டிசம்பர் மாதம் முதல் தஞ்சக்கோரி விண்ணப்பிப்பவர்களில் 50 சதவீதம் வீழ்ச்சியைக் காணுவதாக நீதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

அதிகளவிலான அகதிகளை அனுமதிக்கவும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தவும் சர்வதேச தரப்பிலிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தாலும்பிப், ஜப்பான் அதனை நிராகரிக்கும் விதமாகவே செயற்பட்டு வருகின்றது.