டென்னிஸ் :   36 வயதில் நம்பர் 1: ரோஜர் பெடரர்(Roger Federer )உலக சாதனை………

டென்னிஸ் வரலாற்றில் மிக மூத்த வயதில் நம்பர் 1 அந்தஸ்தை பெற்ற வீரர் என்ற உலக சாதனை, சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடர(Roger Federer) வசமாகி உள்ளது.நெதர்லாந்தில் நடைபெற்று வரும் ரோட்டர்டாம் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில், உள்ளூர் வீரர் ராபின் ஹாஸுடன் நேற்று மோதிய பெடரர் 4-6, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலமாக ஒற்றையர் பிரிவு உலக தரவரிசையில் அவர் ஸ்பெயினின் ரபேல் நடாலை பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு முன்னேறினார்.

டென்னிஸ் வரலாற்றில் மிக மூத்த வயதில் முதலிடம் பிடித்த வீரர் என்ற உலக சாதனை பெடரருக்கு (36 வயது, 195 நாள்) சொந்தமாகி உள்ளது. அமெரிக்காவின் ஆந்த்ரே அகாசி 33 வயதில் நம்பர் 1 ஆக இருந்ததே முந்தைய சாதனையாகும். அதை பெடரர் நேற்று முறியடித்தார். ரபேல் நடால் (31), ஜிம்மி கானார்ஸ் (30), இவான் லெண்டில் (30) ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 35 வயதில் நம்பர் 1 ஆக இருந்துள்ளார். ராட்டர்டாம் ஓபன் அரை இறுதிக்கு ஆண்ட்ரியாஸ் செப்பி (இத்தாலி), தாமஸ் பெர்டிச் (செக்.), கிரிகோர் திமித்ரோவ் (பல்கேரியா) ஆகியோரும் தகுதி பெற்றுள்ளனர்.