கோடம்பாக்கம் வலம் : ‘சீமராஜா’ சிவகார்த்திகேயன் புதிய படத்தின் பெயர் விநாயகர் சதுர்த்தி வெளியீடாக திரைக்கு வருகிறது…….

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 32 வயது முடிவடைந்து, 33-வது வயது பிறந்தது. அவர் தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். பிறந்த நாளையொட்டி பொன்ராம் டைரக்‌ஷனில் அவர் நடித்து வரும் படத்துக்கு, ‘சீமராஜா’ என்று பெயர் சூட்டப்பட்டது.

பொன்ராம் டைரக்டு செய்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்,’ ‘ரஜினி முருகன்’ ஆகிய 2 படங்களிலும் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்தார். இருவரும் மூன்றாவதாக, ‘சீமராஜா’ படத்தில் இணைந்து இருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ,’ ‘வேலைக்காரன்’ ஆகிய படங்களை தயாரித்த ஆர்.டி.ராஜா, இந்த படத்தை தயாரிக்கிறார்.

சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். சிம்ரன், சூரி, நெப்போலியன், லால், மனோபாலா, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். இமான் இசையமைக்கிறார்.

முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசியில், 70 நாட்கள் நடைபெற்றது.

அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக சென்னையில், பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டு வருகிறது. அதில், 30 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

அதைத்தொடர்ந்து பாடல் காட்சிகளை, லடாக்கில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். அத்துடன், ‘சீமராஜா’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைகிறது. படத்தொகுப்பு, குரல் சேர்ப்பு, பின்னணி இசை சேர்ப்பு ஆகிய பணிகள் நிறைவடைந்ததும், படம் திரைக்கு வரும்.

வருகிற செப்டம்பர் 13-ந் தேதி, விநாயகர் சதுர்த்தி அன்று படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறார்கள்.