அமெரிக்கா : அமெரிக்க பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டிலிருந்து மாணவர்களை காப்பாற்றிய இந்திய ஆசிரியைக்கு குவியும் பாராட்டுக்கள்…..

அமெரிக்கப் பள்ளியில் அண்மையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டிலிருந்து தமது மாணவர்களைக் காப்பாற்றிய இந்திய வம்சாவளி ஆசிரியைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

புளோரிடா மாகாணத்தில் உள்ள ஸ்டோன்மேன் டக்ளஸ் ( Stoneman Douglas High School ) பள்ளியில் கடந்த வியாழக்கிழமை முன்னாள் மாணவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 17 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்தத் துப்பாக்கிச் சூட்டின்போது, பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரிந்து வரும் மாணவர்களிடையே Mrs V என்றழைக்கப்பபடும் இந்திய வம்சாளியைச் சேர்ந்த சாந்தி விஸ்வநாதன் என்பவர் சமயோசிதமாக செயல்பட்டு மாணவர்களைக் காப்பாற்றியது தெரியவந்துள்ளது.

எச்சரித்த ஒலி

வியாழக்கிழமைதோறும், அப்பள்ளியில் தீவிபத்து ஒத்திகை நடைபெறுவது வழக்கம். சம்பவ தினத்தன்றும் இந்த ஒத்திகை நடைபெற்றது. அதன் பின்னர், வகுப்பறைகள் நடந்து கொண்டிருந்தபோதுதான், பள்ளிக்குள் கொலையாளி நுழைந்துள்ளார். ஏராளமானோரை ஒரே நேரத்தில் கொல்லும் திட்டத்துடன், அங்கிருந்த தீ விபத்து எச்சரிக்கை மணியையும் அவர் ஒலிக்கச் செய்துள்ளார். இரண்டாவது முறையாக எச்சரிக்கை ஒலியை கேட்டதும், சந்தேகம் அடைந்த சாந்தி விஸ்வநாதன், முன்னெச்சரிக்கையாக தனது வகுப்பறையின் கதவு, ஜன்னல்களை உடனடியாக மூடினார்.

மேலும், அங்கிருந்த மாணவர்களையும் மேசைகளின் கீழ் படுக்கச் செய்தார். மாணவர்களும் ஒன்றுமறியாமல், ஆசிரியை கூறியதைப் போலவே செய்தனர். சிறிது நேரத்தில், ஆசிரியையின் கணிப்புப்படியே துப்பாக்கிச் சத்தம் கேட்டது. சில துப்பாக்கிக் குண்டுகள் அந்த வகுப்பறையின் கதவுகளை துளைத்தும் சென்றன. இருந்தபோதிலும், மாணவர்கள் மேசைகளின் கீழ் இருந்ததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

அதன் பின்னர், தங்கள் பிள்ளைகள் மூலம் இந்த விஷயத்தை அறிந்த பெற்றோர், ஆசிரியை சாந்தி விஸ்வநாதனைத் தேடி வந்து கண்ணீர் மல்க நன்றி கூறினர். மேலும், அவருக்கு சமூக வலைதளங்களிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள்…….