தமிழக அரசியல் : எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட மோடி கட்டாயப்படுத்தினார்: ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேச்சு…….

பிரதமர் மோடி கூறியதால்தான் முதல்வர் பழனிசாமியுடன் இணைந்தேன் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென பேசியுள்ளது அதிமுகவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் பல்வேறு சிக்கல்களுக்கும், சமாதானங்களுக்கும் இடையில் கடந்தாண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தன.

அணிகள் இணைந்தபோதே பிரதமர் மோடியின் வலியுறுத்தலின் பேரில்தான் இருவரும் இணைந்தனர் என்று கூறப்பட்டது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகளும் விமர்சித்தன. அப்போதெல்லாம், எங்கள் கட்சி விவகாரத்தில் பாஜக தலையிட விடமாட்டோம். நாங்கள் யாரையும் நம்பி இல்லை என்று அதிமுக நிர்வாகிகள் கூறி வந்தனர். இந்நிலையில் ஓபிஎஸ் பேச்சு மோடியின் தலையீட்டை உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், ஓ.பன்னீர்செல்வமே இவ்வாறு கூறியிருப்பது, கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழிசை சவுந்திரராஜன்

இதுதொடர்பாக, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்,‘‘இருவரும் சந்தித்தபோது அரசியல் தொடர்பாக பேசியிருக்கலாம். இது தொடர் பாக அவர்களிடம்தான் கேட்க வேண்டும். கருத்து கூற எனக்கு உரிமை இல்லை’’ என்று கூறியுள்ளார். அமைச்சர்களை பொறுத்தவரை ஒவ்வொருவரும் ஒவ் வொரு கருத்தை கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக நேற்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறும்போது,‘‘துணை முதல்வர் ஒரு கருத்தை கூறியுள்ளார். பிரதமரும் துணை முதல்வரும் பேசிய விவகாரம். அதில் நான் ஒன்றும் கூற முடியாது. தமிழக மக்கள் அதிமுக தொண்டர்கள் எல்லோருடைய விருப்பம் சசிகலா குடும்பம் கட்சியிலும், ஆட்சியிலும் வரக்கூடாது என்பதுதான். இதன் அடிப்படையில் அந்த கருத்துக்கள் கூறப்பட்டிருக்கலாம்.

எந்த விதத்திலும் அதிமுகவின் தனித்தன்மையை நாங்கள் இழக்கவே மாட்டோம். மாநிலத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசை சார்ந்திருப்பது தவறானது அல்ல. அதில் உள்நோக்கம் என்பது கூடாது’’ என்றார்.

அமைச்சர் கே.பி.அன்பழகன்

உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறும்போது,‘‘கட்சியினர் விருப்பத்தின்பேரில் இரட்டை இலையை மீட்கவே இணைந்தார்கள். மோடி கூறியதால் இணையவில்லை’’ என்றார்.

அதேபோல், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இதுதொடர்பாக கூறும்போது,‘‘துணை முதல்வர் கூறியது தொடர்பாக அவரிடம்தான் கேட்க வேண்டும். நேற்று நடந்த கூட்டத்தில் ஏற்கெனவே நடந்த விஷயங்களைத் தான் அவர் கூறியுள்ளார். வெளிப்படையாக தொண்டர்களுக்கு நம்பிக்கை, உற்சாகம் ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை பகிர்ந்துள்ளார்’’ என்றார்.

அரசு ரீதியான உறவு

இதனிடையே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறும்போது, “பிரதமர் சொல்லித்தான் அதிமுகவில் மீண்டும் இணைந்தேன் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறியிருப்பது யதார்த்தமான பேச்சு. நிர்வாக ரீதியாக பிரதமர் கூறியதை அவர் குறிப்பிட்டிருக்கலாம். பிரதமருக்கும், எங்களுக்கும் அரசாங்க ரீதியான உறவுதான். அரசியல் ரீதியான உறவு இல்லை” என தெரிவித்துள்ளார்.

தகுதி நீக்க வழக்கு

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம், ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் எதிர்த்து வாக்களித்தது தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளன. இதில் வரும் முடிவுகள் அடிப்படையில் அடுத்தக்கட்ட தமிழக அரசியல் நகர்வுகள் இருக்கும். இதுதவிர, சமீபகாலமாக மத்திய பாஜக அரசுடன், தமிழக அரசும் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விஷயங்களில் முரண்பட்டுள்ளது.

துணை முதல்வர், அமைச்சர்கள் இதுதொடர்பாக வெளிப்படையாகவே பேசியுள்ளனர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ‘தமிழகம் பயங்கரவாதிகள் கூடாரமாக உள்ளது’ என்று கூறியதை, ஓபிஎஸ் எதிர்த்தார்.

இந்நிலையில், ஓபிஎஸ் தற்போது இதுபோன்று பேசியுள்ளது தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.