கட்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைத்து தமிழர்களின் ஆட்சி பலம்பெறக் கூடிய வகையில் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை கிழக்கு தமிழர் ஒன்றியம் முன்னெடுத்துள்ளதாக கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைவரும் சட்டத்தரணியுமான கே.சிவநாதன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு  மட்டக்களப்பு நல்லையா வீதியில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

நாங்கள் இந்தச் சந்திப்பில் மிகவும் முக்கியமாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் செயலாளரிடம் தெரிவித்த விடயம் என்னவென்றால், எமது நோக்கம் எமது பிரதேசத்தைத் தமிழர்கள் ஆழ வேண்டும் என்பதே.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்குப் போதுமான அறுதிப் பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் தமிழர்கள் ஆட்சி அமைக்க வேண்டுமாக இருந்தால் தமிழ் கட்சிகள் அனைத்தையும் இணைத்து ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை நாங்கள் தெரியப்படுத்தியிருந்தோம்.

அதற்கு அவரிடம் இருந்தது எங்களுக்கு சாதகமான பதில் கிடைத்தது. அதாவது தமிழ்த் தேசியக் கொள்கையளவில் ஒன்றுபட்டிருக்கக் கூடிய கட்சிகளுடன் நாங்கள் சேர்ந்து ஆட்சி அமைப்பதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று அவர் எங்களிடம் தெரிவித்தார்.

இதர தமிழ் கட்சிகளின் கொள்கை ரீதியான விடயங்களை அறிந்து கொள்வதற்காக நாங்கள் அவர்களை நேரடியாகச் சந்திக்க இருக்கின்றோம்.

அவர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைக்கு ஒத்த கொள்கையுடையவர்களாகக் காணப்படுமிடத்து அவர்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைத்து தமிழர்களின் ஆட்சி பலம்பெறக் கூடிய வகையில் ஒரு ஒற்றுமையை நாங்கள் உறுதிப்படுத்த இருக்கின்றோம்.

வரப்போகும் மாகாணசபைத் தேர்தலில் கிழக்கு மாகாணத் தமிழர்கள் அறுதிப் பெரும்பான்மையாக இந்த மாகாண சபையில் ஆசனங்களைக் கைப்பற்றும் முகமாக கிழக்கு மாகாணத் தமிழர்கள் அனைவரும் ஒரு குடையின் கீழ் வந்து ஒரு சின்னத்திற்கு வாக்களித்து பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்று கிழக்கு மாகாணசபையில் பேரம் பேசுகின்ற சக்தியாக உருவாக வேண்டும் என்பது தான் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் நோக்கம்.

இதனை அடைவதற்கு நாங்கள் இந்த உள்ளூராட்சித் தேர்தலின் ஒற்றுமையை அடித்தளமாகப் பயன்படுத்துகின்றோம்.

அதனடிப்படையில் தான் இந்தப் பேச்சுவார்த்தையை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளருடன் ஏற்படுத்தியிருந்தோம். இது மிகவும் வெற்றிகரமாக இருந்தது என தெரிவித்துள்ளார்.

 

By admin