கல்முனை வாழ் தமிழ் மக்கள் குழப்பமடையவேண்டியதில்லை! மு.கி.மாகாணசபை உறுப்பினர் இராஜேஸ்வரன்
(செல்லையா பேரின்பராசா – துறைநீலாவணை நிருபர்)

கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் களத்தில் குதித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய 7 உறுப்பினர்களும் எதிர்காலத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுமே தீர்மானிப்பர். இதனை விடுத்து பலரும் பல விதமாக பேசுகின்ற விடயங்கள் தொடர்பில் கல்முனைவாழ் தமிழ் மக்கள் குழப்பம் அடைய வேண்டிதில்லை.

இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கல்முனைவாழ் தமிழ் மக்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் எமது மக்களின் எண்ணங்கள், அபிலாசைகள் என்பவற்றுக்கு மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க மாட்டாது என்ற நம்பிக்கை எனக்குண்டு. நடைபெற்று முடிந்த உள்ளுர் அதிகார சபை தேர்தலின் போது கல்முனைப் பிரதேச தமிழ் மக்கள் வயது வித்தியாசம் இன்றி வாக்களிக்கத் தகுதி பெற்ற அனைவரும் முண்டியடித்துக் கொண்டு தமது வாக்குரிமையை தமிழ்த் தேசியத்திற்காக பதிவு செய்துள்ளனர். இதிலிருந்து எமது மக்களின் பலத்த எதிர்பார்ப்புக்கள் மேலோங்கியுள்ளதை எவரும் தட்டிக் கழிக்க முடியாது.

கல்முனை மாநகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எந்த அணியில் செயற்பட வேண்டும் என்பதை அலசி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். அந்த முடிவு அனைத்து தமிழ் மக்களையும் திருப்த்திப்படுத்துவதாக அமைய வேண்டும். இல்லையேல் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் விருப்பு வெறுப்புக்கள் வேறு வகையாக அமையக் கூடிய நிலை ஏற்படலாம். எனவே எமது தலைமைகள் கல்முனை விவகாரம் தொடர்பில் சிறந்த முடிவினை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

By admin