இன்றைய சூழ்நிலையில் இயந்திரங்களின் பெருக்கத்தால் உடல் உழைப்பு குறைந்துவருகிறது. இதன் விளைவாக `ஒபிசிட்டி’ எனும் உடல் பருமன் அனைத்து வயதினரையும் தாக்குகிறது. உடல்பருமனில் இருந்து விடுபட்டு, உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க… சத்துமிக்க, அதேசமயம் குறைந்த கலோரிகள்கொண்ட உணவு வகைகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். இதைக் கருத்தில்கொண்டு, ஓசூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் எஸ்.சாந்தி எடை குறைப்பு உணவு வகைகளை இங்கே வழங்குகிறார்.

சிறுதானிய பிரெட் சாண்ட்விச்

தேவையானவை: சிறுதானிய பிரெட் ஸ்லைஸ்கள் – தேவையான அளவு, வெங்காயம் – ஒன்று (துருவவும்), முளைகட்டிய பச்சைப் பயறு – அரை கப், தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை (சேர்த்து) –  ஒரு கைப்பிடியளவு,  பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லித்தழை, தோல் சீவிய இஞ்சி சேர்த்து அரைத்த விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்,  மிளகு – சீரகத்தூள் – கால் டீஸ்பூன், இந்துப்பு – கால் டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் – கால் டீஸ்பூன்

செய்முறை: முளைகட்டிய பயறுடன் தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை, வெங்காயம், இந்துப்பு, மிளகு – சீரகத்தூள், ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து பிரெட் ஸ்லைஸ்களை டோஸ்ட் செய்து எடுக்கவும். அதன்மீது அரைத்த விழுதைத் தடவவும். பிறகு, சிறிதளவு பயறு கலவையைப் பரப்பி மேலே மற்றொரு பிரெட் ஸ்லைஸ் வைத்து மூடி, மீண்டும் தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் டோஸ்ட் செய்து எடுக்கவும். இதை பிரெட் டோஸ்டரிலும் செய்யலாம்.

பயன்: காலை உணவாக உண்ணும்போது அன்றைய நாள் முழுவதற்கும் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.

By admin

Leave a Reply

Your email address will not be published.