மீட்பர்களின் இரண்டாம் வருகை…..
———————————————————–

அந்த மெல்லிய மென் அதிர்வை
நீங்கள் உணர்கிறீர்களா?
நுகர்கிறீர்களா?

கண்களை மூடி….
கரங்களை அகல விரித்து…..
மெதுவாய் உள் மூச்செடுத்து வெளி விடுங்கள்…..
மூடிய உங்கள் கண்களுக்குள் மீண்டும்
அந்த மீட்பர்கள் வந்து போகிறார்களா?…..

அவர்கள் உங்கள் தேவ தூதர்கள்…
மீட்பர்கள்…..
உங்களுக்காகவே….. உங்களுக்காக மட்டுமே….
உருவான தேவ தூதர்கள்.
கடைசி தேர்தலின் பின்
மாயமாய் போன தேவ தூதர்கள் .

இன்று-நிகழ்கின்ற மென் அதிர்வில்
அவர்கள் முனகுவது
உங்களுக்கு கேட்கிறதா?

மறைந்து போன உங்கள் மீட்பர்கள்
மீண்டும் உங்களுக்காய் முனகுவதை….
கொஞ்சம் கேளுங்கள்…..
ஐ.நா……
போர்க்குற்றம்……
பொறுப்பு கூறுதல்……
இன்னோரின்ன……. வேத வாக்குகள்
உங்களுக்கு கேட்கிறதா?

இந்த மீட்பர்கள்
இடை நடுவே எங்கே போயினர்….

எங்கள் பிள்ளைகளையும்……
காணி நிலங்களையும்……
வயல் வெளிகளையும்……. கேட்டு
இன்றுவரை நாங்கள் தெருவில்தானே நிற்கிறோம்….
மீட்பர்களின் மிஷன்
போன தேர்தலோடு முடிந்து போனதால்
மேகத்தில் ஏறி பரலோகம் போயினரோ?

இவர்கள்
வேதம் ஓதும் சாத்தான்கள் என
சொன்ன போது,
நாம் மத நம்பிக்கையும்
கடவுளை கண்டடையும் ராஜாதந்திரமும்
அற்றவர்கள் என்றீர்கள்.

ஆனாலும்,
நிகழ்கின்ற மென் அதிர்வில்
மீட்பர்கள் முனகுவது
உங்களுக்கு கேட்கிறதா?

இந்த மென் அதிர்வை நாம்
பேரிடியாக மாற்ற வேண்டாமா?
பெரும் வெடிப்பாக வெடிக்க வேண்டாமா?
பெரும் சுனாமியாய் சுழற்ற வேண்டாமா?
எரிமலையாய் நிமிர்த்த வேண்டாமா?
மீட்பர்களின் வேடம் கலைத்து
நீதி மான்களை அழைக்க வேண்டாமா?

(10.02.2018-நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் பின் ஒலிக்கும் சர்வதேச குரல்கள் தொடர்பாக)

By admin