நகரஅபிவிருத்தி என்றபோர்வையில் தமிழர்களின் காணி பறிபோவதையோ இருப்பை இழப்பதையோ நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் – ராஜன்

ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் த.தே.கூட்டமைப்பை வெல்லவைத்த கல்முனை தமிழ்மக்களுக்கு வணக்கங்கள்!
கல்முனையில் வெற்றிபெற்றத.தே.கூ. வேட்பாளர் ராஜன் தெரிவிப்பு!


காரைதீவு நிருபர் சகா

தமிழர்களின் பூர்வீகமான பிரதேசமான கல்முனையைக் காப்பாற்றுமுகமாக 1000வாக்குகள் வித்தியாசத்தில் 12ஆம் வட்டாரத்தில் வாக்களித்த தமிழ்மக்களுக்கு எனது வணக்கங்களையும் சிரம்தாழ்த்திய நன்றியையும் தெரிவிக்கின்றேன்..

இவ்வாறு கல்முனை மாகநரசபைத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புசார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்; சந்திரசேகரம் ராஜன் நேற்று வெற்றி நடையில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

இரட்டை அங்கத்தவர் வட்டாரமாகிய கல்முனை 12இல் த.தே.கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சந்திரசேகரம் ராஜன் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் கல்முனை தமிழ் இளைஞர்கள் ஒன்றியத்தின் பரிபூரண ஒத்துழைப்புடன் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

அங்கு ராஜன் அவர்கள் மேலும் கூறுகையில்:

கல்முனைக்கு வியாபாரத்திற்கு வந்தவர்கள் கல்முனையை அபகரிக்கவிடமுடியாது.கல்முனை மாநகரசபைத் தேர்தலில் குறிப்பாக 12ஆம் வட்டாரத்தில் தமிழ்மக்கள் வாக்களிக்கத்தவறினால் தமிழ்ப்பிரதிநிதித்துவம் பறிபோவது மட்டுமல்லாது பாரம்பரிய தாயகபூமியையும் இழக்கவேண்டிவரும் என்று நான்கூறியதற்கமைவாக எமது தமிழ் இளைஞர்கள் வீடுவீடாகச்சென்று அனைவரையும் உற்சாக்படுத்தி த.தே.கூட்டமைப்பை வெல்லவைத்தனர்.

குறிப்பாக கல்முனை தமிழ் இளைஞர்கள் ஒன்றியம் இரவுபகல்பாராமல் துண்டுப்பிரசுரம் விநியோகித்து ஆதரவுதிரட்லில் ஈடுபட்டதை மறக்கமுடியாது. மாதர்சங்கங்கள் கிராமஅபிவிருத்திச்சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து சங்க பிரதிநிதிகளையும் இவ்வண் நன்றியுடன் பார்க்கின்றேன்.

எனது அன்புக்காக 12ஆம் வட்டார தமிழ்மக்கள் இட்டவாக்குகளால் இன்று த.தே.கூட்டமைப்பு வெற்றிபெறநேர்ந்தது.

கல்முனை மாநகரசபையில் 71வீத முஸ்லிம்களும் 29வீத தமிழ்மக்களும் வாழந்துவருகின்றனர். ஆனால் நிலப்பரப்பைப் பொறுத்தவரை தமிழ்மக்கள் 60வீத நிலபப்பரப்பிலும் முஸ்லிம்கள் 40வீத நிலப்பரப்பிலும் வாழ்ந்துவருவதை அறிவீர்கள்.
கடந்தகாலங்களில் பிரிந்துநின்று தமிழினம் பட்ட வேதனைகள் துன்பங்களை நாமறிவோம். எனவே இனியாவது உணர்ந்து நமது இருப்பைக்காப்பாற்ற சிந்தித்து செயற்படவேண்டும் என்று கேட்டதற்கு எமது தமிழினம் பரிபூரண ஆதரைவைத்தந்துள்ளது. அவர்களை கனவிலும் மறவேன்.

கல்முனை தனியார் பஸ்நிலையத்தை மூடி அங்கு தனியார் வங்கியை அமைக்க கல்முனைத்தமிழர்களின் எவ்வித சம்மதமுமில்லாமல் அன்று தீர்மானிக்கப்பட்டது. இதனால் தமிழர்களின் காணி ஒருவகையில் அபகரிக்கப்பட்டுள்ளது. இதனை நாம் வந்து மீளப்பெறுவோம்.

நகரஅபிவிருத்தி என்றபோர்வையில் தமிழர்களின் காணி பறிபோவதையோ இருப்பை இழப்பதையோ நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். அதற்காக எமது தமிழ்மக்கள் உணர்ந்து தமிழ்மண்காப்பாற்ற வாக்களித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

By admin