சீனா    } சீன மக்களின் வசந்த விழா விருப்பம்

சீன மக்களின் வசந்த விழா விருப்பம்
இன்று பிப்ரவரி 16ஆம் நாள். சீன சந்திர நாட்காட்டியின்படி வசந்த விழாவின் முதல் நாள். கோயில் விழா சந்தைக்குச் செல்லுதல், விளக்குக்காட்சியை ரசித்தல், வெளியூரில் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளுதல் ஆகிய பல்வேறு இன்பமான நிகழ்வுகளில் சீன மக்கள் இந்த முக்கிய பாரம்பரிய விழாவைக் கொண்டாடி வருகின்றனர்.

சீன மக்களின் வசந்த விழா விருப்பம்

பெய்ஜிங் மாநகரில் கோயில் விழா சந்தை, தோட்ட விருந்து, கண்காட்சி, கலை நிகழ்ச்சி உள்ளிட்ட 480 நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. பெய்ஜிங் பண்பாட்டுப் பணியகத்தின் துணை இயக்குநர் பாங் வெய் அம்மையார் பேசுகையில், இவ்வாண்டு குளிர்கால ஒலிம்பிக், பெய்ஜிங்கின் கோயில் விழா சந்தையின் தலைப்பாக மாறியுள்ளது. அங்கு, நகரவாசிகள் பனிப் பண்பாட்டை உணர்ந்துகொள்ளலாம் என்று அறிமுகப்படுத்தினார்.

மேலும் வசந்த விழாக்காலத்தில் பெய்ஜிங்கின் நூலகம், நுண்கலை காட்சியகம் முதலிய பொது பண்பாட்டு இடங்கள் இயல்பாக திறக்கப்பட்டுள்ளன. பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வக் கண்காட்சி உள்ளிட்ட பாரம்பரிய அம்சங்கள் நிறைய நிகழ்ச்சிகள் பல்வேறு குடியிருப்புப் பிரதேசங்களிலும் பண்பாட்டு மையங்களிலும் நடைபெற்று வருகின்றன.

ஹேநான் மாநிலத்தின் லோயாங் நகரில் நடைபெற்ற 2018 குவன்லின் கோயில் விழா சந்தையில் விளக்குகள் பட்டு புகழ்பெற்ற வரலாற்றுக் காட்சியை உருவாக்கின. தினமும் அங்கே செல்வக் கடவுள் வர வேண்டும் என்ற பாரம்பரிய இறை வேண்டல் நிகழ்ச்சியும் அரங்கேற்றப்பட்டது.

உள்மங்கோலிய தன்னாட்சி பிரதேசத்தைச் சேர்ந்த ஹெலின்கார் மாவட்டத்தின் தெய்க்காதோ கிராமத்தில் உள்ள குடும்பங்கள், நல்ல லாபம் காரணமாக மகிழ்ச்சியடைந்துள்ளன. கடந்த ஆண்டில் கிராமவாசிகள் வளர்த்த ஆடுகள், பயிரிட்ட கோதுமைகள் உள்ளிட்டவை மின்னணு வணிக நிறுவனங்களின் மூலம் பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இதன் மூலம் கிராமவாசிகளின் வருமானம் அதிகரித்து வருகின்றது. லீயு லியிங் என்னும் கிராமவாசி செய்தியாளரிடம் கூறுகையில், புத்தாண்டில் என்னுடைய வீட்டில் கிராமப்புற உணவகத்தைத் திறக்க திட்டமிட்டுள்ளேன். தற்போது கிராமப்புறத்தில் பயணம் மேற்கொள்ளும் நகரவாசிகளில் கிராம வீட்டு விருந்தை சுவைப்பவர்கள் மென்மேலும் அதிகரித்து வருகின்றனர். அதேவேளை மின்னணு வணிகத்தின் மூலம், வேளாண் உற்பத்திப் பொருட்களையும் விற்பனை செய்ய முடிகிறது என்று குறிப்பிட்டார்.

பொது மக்கள் பலர், சீன வானொலி நிலையத்தின் செய்தியாளர்களிடம் அவர்களது புத்தாண்டு விருப்பத்தைப் பகிர்ந்து கொண்டனர். சான் துங் மாநிலத்தைச் சேர்ந்த வாங் அம்மையார் கூறுகையில், எங்கள் நாட்டு வலிமை என்பது, மக்களின் செழுமை தான். என் வீட்டில் அனைவரும் இன்பமான வாழ்வை அடைய வேண்டும் என்பது தான் என்னுடைய சிறிய விருப்பம் என்று கூறினார்.

சியாங்சி மாநிலத்தின் திரு.லீ, செய்தியாளரிடம் கூறியதாவது, பெற்றோரை என் வீட்டுக்கு அழைத்து இணைந்து வாழ வேண்டும் என்பதே என் விருப்பம் என்று தெரிவித்தார்.