நாவிதன்வெளி பிரதேச சபையில் தமிழர்களின் தனித்துவம் காக்கின்ற அணியாக செயற்படுவோம்! அ.ஆனந்தன்
-செல்லையா பேரின்பராசா – துறைநீலாவணை.-

நாவிதன்வெளிப் பிரதேச சபைக்கான தேர்தலின் போது தமிழ்த் தேசியப் பற்றாளர்களின் கூட்டுச் சேர்வையாக சுயேட்சை அணியில் மீன் சின்னத்தில் போட்டியிட்ட எமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியினைத் தெரிவிப்பதோடு நாவிதன்வெளி பிரதேச சபையில் தமிழர்களின் தனித்துவம் காக்கின்ற அணியாக தொடர்ந்து செயற்படுவோம். மக்கள் எமக்கு அளித்த ஆணையை இறுதி மூச்சு வரை காப்பாற்றுவோம். இதனை விடுத்து மாற்று இனத்தவர்களுடன் கூட்டுச் சேர்ந்து அரசியலில் பயணிக்க மாட்டோம் என்பதை உறுதிபட தெரிவிக்கின்றேன்.

இவ்வாறு நாவிதன்வெளிப் பிரதேச சபைக்கான தேர்தலில் சுயேட்சை அணியாகப் போட்டியிட்டு மூன்று உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்ட அணியின் தலைவரான அ.ஆனந்தன் குறிப்பிட்டார்.

இத் தேர்தல் முடிவு தொடர்பாக அவர் மேலும் கருத்துரைக்கையில்,

நாவிதன்வெளிப் பிரதேசம் என்பது தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசம் ஆகும். இப்பிரதேசத்தின் ஆட்சி அதிகாரத்தினை தமிழர்கள் தம்வசம் வைத்திருக்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும். கடந்த காலத்தில் 11 உறுப்பினர்களைக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 7 உறுப்பினர்களைக் கொண்டிருந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு கிழக்கு மாகாண சபையை தாரை வார்த்துக் கொடுத்தது போன்று நாவிதன்வெளிப் பிரதேசத்தையும் தாரைவார்த்துக் கொடுக்க முற்பட்டால் எமது தமிழ் மக்கள் யார் உண்மையான தமிழ் தேசியப் பற்றாளர்கள் என்பதை உணர்ந்து அவர்களின் முடிவுகளை எதிர்காலத் தேர்தல்களில் அழுத்தம் திருத்தமாக எடுத்துக் கூறுவதற்கு தயாராக உள்ளனர்.

தேர்தல் காலங்களில் எமது அணி வெற்றி பெற்று மாற்று இனத்தவர்களுடன் சேர்ந்து ஆட்சி அமைப்போம் என்று பிரச்சாரம் செய்தவர்கள் இத்தருணத்தில் என்ன செய்யப் போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது. இந்த வகையில் எம்மை தேர்ந்தெடுத்த அனைத்து தமிழ் உறவுகளுக்கும் எமது உளமார்ந்த நன்றிப் பூக்களை சொரிகின்றேன் என்றார்.

By admin