தமிழக சட்டசபைத் தேர்தல் களம்: முடிவடைந்த தேர்தல் பிரச்சாரங்கள். ஜெயிக்கப் போவது யாரு….

தமிழக தேர்தல் பிரச்சாரங்கள் நேற்றுடன் முடிவடைந்து நாளைய தேர்தலுக்கான பணிகள் தேர்தல் ஆணையத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தற்போதைய அ.தி.மு.க. அரசின் பதவிக்காலம் மே மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி நாளை தேர்தல் நடைபெற இருக்கிறது.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் 16-வது தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ஆம் தேதி நடக்க உள்ள இந்தத் தேர்தலில் முதன்முறையாக ஜெயலலிதா, கருணாநிதி இல்லாமல் திமுக, அதிமுக கட்சிகள் களம் காண்கின்றன. இரண்டு கட்சிகளிலும் புதிய தலைவர்கள் களம் காண்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 3 ஆயிரத்து 998 பேர் போட்டியிடுகின்றனர். இதில், 3 ஆயிரத்து 585 ஆண் வேட்பாளர்களும், 411 பெண் வேட்பாளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 2 பேரும் அடங்குவார்கள்.

சனிக்கிழமை இறுதிக்கட்டத் தேர்தல் பிரச்சாரத்தை முடித்தனர். தமிழக முதல்வர் பழனிசாமி எடப்பாடியிலும், திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டியிலும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூரிலும், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் கோவை தெற்கிலும் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர். சனிக்கிழமை மாலை 7 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.

 

நேற்று இரவு 7 மணியிலிருந்து முன்னதாக, பிரசாரத்திற்காக வந்தவர்கள் தொகுதியை விட்டு வெளியேறி விடவேண்டும் என்று தேர்தல் ஆணையத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது . கருத்து கணிப்புகளும் தடை.மதுபானக் கடைகளும் செவ்வாய்க் கிழமை வரை மூடப்பட்டிருக்கும்.

தமிழகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் தேவையான 1,55,102 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்,1,14,205 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1,20,807 விவிபாட் இயந்திரங்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன. இந்தத் தேர்தலில் 3,8,38,473 ஆண் வாக்காளர்கள், 3,18, 28,727 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 6, 26, 74,446 பேர் வாக்களிக்க உள்ளனர்.

வாக்குப்பதிவு நாளை இரவு 7 மணிக்கு முடிவடைந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக பெட்டிகளில் வைத்து ‘சீல்’ வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட இருக்கின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே மாதம் 2-ந்தேதி காலை, இந்த பெட்டிகளில் உள்ள ‘சீல்’ உடைக்கப்பட்டு, வாக்குகள் எண்ணப்படும். அன்று காலை 11 மணி முதலே முன்னணி நிலவரங்கள் தெரியவரும். மாலைக்குள் ஜெயிக்கப் போவது யார்? என்பதும் தெரிந்துவிடும்.