கல்முனை மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்கு எந்தகட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையே காணப்படுகிறது. இதனால் ஆட்சியமைக்க ஆதரவு தமிழ்த் தரப்பபுடனும் கோரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து கல்முனை பிரதேச மக்களிடம் இருந்து பல்வேறு கருத்துக்கள் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகிறது.

இவ்விடயம் தொடர்பாக திரு.கௌ.சி அவர்கள் எமக்கு அனுப்பியிருந்த கட்டுரையை 14.02.2018 அன்று பிரசுரித்திருந்தோம். இக்கட்டுரைக்கு பதிலாகவும் இவ்விடயங்கள் தொடர்பாகவும்  தனது கருத்தையும் திரு. அரவிந்தன் வேதநாயகம் அவர்கள் எமது ஊடகத்திற்கு அனுப்பியிருந்தார். அதனை  இங்கே தருகிறோம்.

(14/2/2018) கல்முனை நெற்றில் வெளிவந்த கௌசி யின் மடலுக்கான பதில்மடல்…

தேர்தல் முடிந்து ஆட்சியமைக்கும் பொருட்டு கட்சிகள் தமக்குள்ளே இணக்கப்பாடுகளைக்காண முயற்சித்து கொண்டிருக்கும் வேளை அனைவரது பார்வையும் கல்முனை மாநகர சபையின் பக்கம் அவதானம் செலுத்வதவைக் காணமுடிகின்றது.

இதற்கு சாய்ந்தமருது மக்கள் தாம் தனியான உள்ளூராட்சி சபையொன்றை தோற்றுவிக்க முஸ்லிம் மற்றும் பிரதான தேசிய கட்சிகளை நிராகரித்து தமது கோரிக்கைகளின் நியாயத்தை மக்கள் தீர்ப்பின்மூலம் வெளிப்படுத்தியுள்ளமை, தமிழர் தரப்பு கட்சிகளால் முன்வைக்கப்பட்ட கல்முனை தமிழர்களது 30 வருடக்கோரிக்கயான பிரதேச செயலகத்தை தரமுயரத்திகொள்வது உள்ளிட்ட அவர்களது இருப்பு, கலாசார, பாரம்பரியங்களை உறுதி செய்வதற்கான தேர்தல் பரப்புரைகளை அங்கிகரிக்கும் வகையில் மக்களால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அங்கிகாரம், முதல்முறையாக முஸ்லிம் காங்கிரஸ் தனித்து ஆட்சியமைக்கும் அறுதிப்பெரும்பான்மையை இழந்து நிற்கின்றமை, அவர்களால் முக வெற்றிலை என வர்ணிக்கப்பட்டு கல்முனை நகர் முஸ்லிம்களது வாழ்விடம் என சித்தரிக்க எடுக்கப்பட்டு வந்த முயற்சிகள் அனைத்தும் தோற்கடிக்கப்பட்டு 2 அங்கத்தவர் கொண்ட அவ்வாட்டாரத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளமை போன்றவற்றை பிரதான காரணிகளாக குறிப்பிடலாம்.

இவை இவ்வாறு இருக்க ஆட்சியமைக்கும் அறுதிப் பெரும்பான்மையை எக்கட்சியும் பெறாமையினால் ஆட்சியை பங்கிட்டுக்கொள்வதில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக மெய்யானதும், வதந்தியானதுமான பல செய்திகள் வெளிவந்தவண்ணமுள்ளன.

சாய்ந்தமருதை பிரதிநிதித்துவம்செய்யும் சுயேச்சைக்குழு, கூடுதல் ஆசனங்களை பெற்றுள்ள ஐக்கிய தேசிய கட்சி (முஸ்லிம் காங்கிரஸ்) யின் ஆட்சியமைப்பதற்கான நிபந்தனையற்ற அழைப்பை நிராகரித்திருக்கின்றது. இவ்வாறான சூழ்நிலையில் மூன்றாம் தரப்பாக காணப்படும் த.தே.கூட்டமைப்பு தன்னால் 12 ஆசனங்களின் ஆதரவை பெறமுடியுமெனவும், அந்த வேளையில் எமது மக்களின் அபிலாசைகளைப் பூர்த்திசெய்கின்ற நிபந்தனைகளுக்கமைய ஆட்சியில் ஆதரவை வழங்குவது தொடர்பில் ஆராயமுடியுமெனவும் அதன் பங்காளிக் கட்சியான ரெலோவின் பிரதிதித் தலைவரும், முன்னாள் மாநகர சபையின் எதிர்கட்சி தலைவரும், 11ம் வட்டாரத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளவருமான ஹென்றி மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தரப்பு இணைந்தாலே ஆட்சியமையும் என்ற நிலை வருகின்றபோது த.தே.கூ தேர்தல் பரப்புரையின்பிரகாரம் வழங்கப்பட்ட உறுதிமொழிகளே “மக்களின் அபிலாசைகளை பூர்த்திசெயகின்ற” என்பதன் பொருளாக இங்கு பார்கப்படவேண்டுமே தவிர அதை குறிப்பிட்ட கட்சிக்கோ அல்லது தனிநபருக்கோ எதிராக விமர்சிக்கப்படவேண்டிய ஒன்று அல்ல.

கூட்டமைப்பின் தலைவரினால் முதல்முறையாக நற்பிட்டிமுனை பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் எமது பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் என்ற உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளதை நோக்கியதகவே அவர்களது நகர்வுகள் அனைத்தும் இருக்கும் என்பதில் யாரும் ஐயம் கொள்ளவேண்டியதில்லை. இம்முறை தெரிவு செய்யப்பட்டுள்ள த.தே.கூ. உறுப்பினர்கள் அனைவருமே இவ்விடயத்தில் அக்கறையுடன் செயற்பட்டுவருபவரகள் என்பது மற்றுமொரு சிறப்பாகும்.

மேலும், கல்முனை தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தடையாகவும், கிழக்கு மாகாண சபையில் த.தே.கூட்டமைப்பால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சிப்பங்கீட்டில் மு.கா வால் தங்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டதாக கருதும் தமிழ்மக்கள, விசேடமாக கூட்டமைப்பின் வெற்றியின் பங்குதார்களான இளைஞர்கள் முஸ்லிம் காங்கிரசுடனான ஆட்சாயமைவதை விரும்பவில்லை என்பதுவும், சாய்ந்தமருது சுயேட்சையுடன் ஆட்சியமையும்போது ஒத்திசையும் இருதரப்பாரின் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சிமன்றம், தமிழ் தரப்புக்கான பிரதேச செயலக தரமுயர்த்தலுடன்கூடிய உள்ளூராட்சி சபை என்பன ஓரளவு சாத்தியமாகும் வாய்ப்பு எற்படுமென எதிர்பாக்கலாம்.

இறுதி நேரத்தில் தமிழ்தரப்பு நன்மையடைவதை தடுக்கும் தந்திரோபாயங்களை கையாண்டு தோடம்பழத்தை சுவைக்கும் திட்டத்தில் யானை வெற்றிபெறுமாயின் இவ்வாதப்பிரதிவாதங்களும், சேறுபூசல்களும் தேவையற்றவை ஆகிவிடும்.
-அரவிந்தன் வேதநாயகம்-

——————————————————————————————————————————

14 ஆம் திகதி திரு.கொ.சி அவர்கள் கல்முனை நெற்றுக்கு அனுப்பிய கட்டுரையை பிரசுரித்திருந்தோம் அதனையும் இங்கே தருகிறோம்.

கல்முனை மாநகரசபை ஆட்சியமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவளிப்பது தொடர்பான பேச்சுகள், தகவல்கள் வெளிவருவதைத் தொடர்ந்து கல்முனை பிரதேச மக்களிடமிருந்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இவ்விடயம் தொடர்பாக எமது ஊடகத்திற்கு .கௌ.சி அவர்கள் அனுப்பி வைத்த கட்டுரை இது!

காலம் வகுக்கும் கணக்கை இங்கு யார் காணுவார்?

இன்றைய காலை பொழுது எல்லா காலைப் பொழுதுகளை போலவே விடிந்தது. விடுமுறை நாள் என்பதால் எழுந்ததும் எழாததுமாக முகநூலை புரட்டுகையில்தான் அந்த பகிர்வு கண்ணில்பட்டது. பிரதி மேயர் பதவி என்ற பேரம் பேசலுடன் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து கல்முனை மாநகர சபையை அமைப்பது தொடர்பான கூட்டம் பாண்டிருப்பு அண்ணா மன்ற கட்டடத்தில் தமிழ் தேசிய கூடமைப்பால் நிகழ்த்தப்பட்டது எனும் செய்தி.

நண்பர் ஒருவருக்கு தொடர்பெடுத்து தகவலை உறுதிப்படுத்தி கொண்டேன். யாரை பகையாளி என்று சொல்லி கடந்த 30 வருடங்களாக வாக்கு கேட்டார்களோ….. அவர்களுடனேயே கூட்டா? ‘மடையரா நீங்கள் ‘ என்றது என் உள் மனது.

18.11.1988 , முதலாவது மாகான சபை தேர்தலுக்கு முன்னரான எங்களூரின் பின்-இரவின் அமைதி சரமாரியான துப்பாக்கி வேட்டுகளால் கலைந்து போனது. ‘தேர்தலை புறக்கணியுங்கள்’ என்று மாரியம்மன் கோயில் சுவற்றில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் இன் தகவல் காலையில் ஊரெங்கும் பரவ தேர்தல் சோகை இழந்து போனது.

திடீரன மதியமளவில் ஊர் பரபப்பானது. சனமெல்லாம் பரபரப்பாக சென்று வாக்களிக்க தொடங்கினர். எங்கள் வீட்டுக்கும் செய்தி கிட்டியது, நாம வாக்களிக்காம விட்டா முஸ்லிம்கள் மாகாண சபையை புடிசுருவானுகளாம். கெதியா போய் வாக்கு போடுங்க என்ற செய்தி தீயாய் பரவ, மதியம் 12 மணி முதல் 2 மணி வரை விழுந்த வாக்குகளின் அறுவடையில் விளைந்த கனியின் ருசியை தேர்தலில் வென்றவர்கள் இன்றுவரை மறந்திருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

இப்படியாக ஆரம்பித்த இந்த காரணம் இன்றுவரை சாகா வரம் பெற்று அனைத்து தேர்தல்களையும் வெற்றி கொள்ளும் அதி உன்னத ராஜாதந்திரமாக எம்மிடையே நிலை கொள்கிறது.

சரி இப்போது விடயத்துக்கு வருகிறேன், முப்பது வருட உங்கள் ராஜ தந்திரத்தை நீங்களே கடந்த மாகாண சபையில் காற்றில் பறக்க விட்டு விட்டதனால்…… முஸ்லிம் காங்கிரசுடன் கூட்டு சேருவதில் உங்களுக்கு அதிக அசௌகரியங்கள் இருக்காது என கொள்ளலாம்.

ஆனால் இங்கு எம் முன் உள்ள கேள்வி, நீங்கள் முஸ்லிம் காங்கிரசுடன் சேர்ந்து நகர சபையை அமைக்கிறீர்களா? அல்லது, அம் மக்களாலேயே கைவிடப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் நகர சபையை அமைக்க நீங்கள் உதவுகிறீர்களா? சாய்ந்தமருது மக்கள் மிகத் தெளிவாக மிக உறுதியாக காங்கிரசை மறுதலித்து விட்ட பின்னர் நீங்கள் ஏன் முண்டு கொடுக்க முனைகிறீர்கள்.

பாம்பின் கால் பாம்பறியும் என்பதற்கு ஏற்ப சொந்த மக்களே அவர்களை நிரகரித்த் பின் எந்த நம்பிக்கையில் நீங்கள் இணைந்து செயல்பட துணிகிறீர்கள்?

திரு. ஹென்றி மகேந்திரனின் ஊடக அறிக்கையின் படி ‘கல்முனை தமிழர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்கும் எந்த கட்சியுடனும் இணைந்து ஆட்சியமைக்க தயார்’ என்கிறார். நிச்சயமாய் நீங்கள் பிரதி மேயர் ஆவது கல்முனை தமிழர்களின் நியாயமான கோரிக்கை அல்ல என்பதும் அது உங்களுடைய அல்லது கட்சியினுடைய கோரிக்கைதான் என்பதும் நான் சொல்லி பிறர் அறியவேண்டியதில்லை.

நாங்கள் முஸ்லிம் காங்கிரசுடன்தான் இணைந்து செயல்பட போகிறோம் என்பதையே வெளிப்படையாக….. நேராக சொல்ல முடியாத நீங்கள் எப்படி நியாயமான கோரிக்கைகளுக்காக அழுத்தம் கொடுக்க போகிறீர்கள்.

ஒரு உள்ளூராட்சியில் தங்கள் பிரதேச அபிவிருத்திகளை விட வேறு எதை சாதித்து விட முடியும். உங்கள் இணைவில் கல்முனை வாழ் தமிழ் மக்கள் எப்படியான அபிவிருத்திகளை பெற்று கொள்ள முடியும்.

நிதி ஒதுக்கீடுகளில் எந்தளவு உங்கள் கை மக்களுக்காய் ஓங்கி நிற்கும். தங்களின் கடந்த காலம் இவை எல்லாவற்றுக்கும் எதிர் மறை விடைகளையே காண்பிக்கிறது. மக்களின் நாடித்துடிப்பை அறியாது, வென்றுவிட்டோம் என்று முடிவு செய்து நகரும் காலமல்ல இது. ஏனெனில் மாற்றங்கள் மிக விரைவாய் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

காலம் எப்பொழுதும் தன் கணக்கினை சரியாகவே வகுத்து செல்லும். புரிந்து கொள்ள முடியாதவருக்கு , புரியவைத்தபடியே அது செல்லும். நாடாளாவிய ரீதியில் நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சொல்லும் உண்மையும் அதுதான்.


இவ்விடயங்கள் கருத்தக்கள் தொடர்பாக கென்றி மகேந்தரன் அவர்கள் எமது ஊடகத்திற்கு தெரிவித்த கருத்துக்களையும் 15.02.2018 அன்று வெளியிட்டிருந்தோம் அதனையும் இங்கே தருகின்றோம்.

 

ஆட்சியமைக்க ஆதரவு வழங்குவதாக முடிவெதுவும் எடுக்கவில்லை, அப்படியாயின் கல்முனை பிரதேச மக்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு பரிசீலனை செய்தே முடிவெடுக்கப்படும்!

கல்முனை மாநகரசபையை  ஆட்சியமைப்பதற்கு எந்தகட்சிக்கும்  தனித்து ஆட்சியமைக்க முடியாதநிலை காணப்படுகிறது. இதனால் ஆட்சியமைக்க ஆதரவு தமிழ்த் தரப்பபுடனும் கோரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏழு ஆசனங்களை பெற்றுள்ள தமிழத் தேசியக் கூட்டமைப்பு இவ்விடயம் தொடர்பாக இரு தினங்களுக்கு முன்னர் பாண்டிருப்பில் கூடி கலந்துரையாடியிருந்தனர்.

இவ்விடயம்  தொடர்பாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து கல்முனை பிரதேச மக்களிடம் இருந்து பல்வேறு கருத்துக்களும் ஆதரவு தெரிவிப்பதாயின் அது தொடர்பாக பல விமர்சனங்களும் வெளியிடப்பட்டுவருகிறது.

கென்றி மகேந்திரன் அவர்களுடன் தொடர்புகொண்டு இவ்விடயம் தொடர்பாக கேட்டபோது அவர் இவ்வாறு கல்முனைநெற்றுக்கு தெரிவித்தார்…..

கல்முனை மாநகரசபைக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக இதுவரை எந்த முடிவுகளும் நாங்கள் எடுக்கவில்லை. வெற்றியீட்டிய உறுப்பினர்களும் கட்சிப் பிரமுகர்களும் தேர்தலின் பின்னர் ஒரிடத்தில் கூடியபோது மாநகரசபை ஆட்சி  விடயம் தொடர்பாகவும் கலந்துரையாடினோம் ஆனால் ஆதரவு வழங்குவதாக எந்த முடிவும் நாங்கள் எடுக்கவில்லை.

ஆட்சியமைக்க ஆதரவுகோரும்பட்சத்தில் கல்முனை பிரதேச தமிழர்களின் இருப்புக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் எமது நீண்டகால கோரிக்கைகளான பிரதேச செயலக விடயங்கள் நகர அபிவிருத்தி திட்டத்தில் தமிழரின் காணிகள் மற்றும் இருப்புக்கள் தொடர்பில் பாதிப்புக்கள் ஏற்படாத விடயங்கள் என எம்மால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் மாத்திரம் அது தொடர்பாக கல்முனை பிரதேச மக்களினதும்  இளைஞர்களினதும் கருத்துக்கள், ஆலோசனைகள் பெறப்பட்டு ஆதரவு வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  பங்காளிக் கட்சிகளின் தலைமைகளுடன் கலந்துரையாடியே முடிவுகள் எடுக்கப்படும்.

தமிழரின் பூர்வீ பிரதேசமான கல்முனை நகர் உட்பட்ட எமது மக்களின் இருப்புகளே  எமக்கு முக்கியம் அதற்கு குந்தகம் விளைவிக்க்க கூடிய எந்த திட்டங்களுக்கும் நாங்கள் அவசரப்பட்டு முடிவுகள் எடுக்க மாட்டோம். எமது மக்களின் கோரிக்கைகள் எமது நிலத்தின் இருப்பு பாதுகாப்பு அதுவே எங்களுக்கு முக்கியம்.

ஆட்சிக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக தேசியப் பதத்திரிகை  ஒன்றில் வெளியான செய்தியின்  தலைப்பு காரணமாகவும்  குழப்பங்கள் ஏற்பட்டிருந்தது. நான்கூறிய விடயத்திற்கும் அச் செய்தியின் தலைப்புக்கும் இடையில் இருந்த வித்தியாசமும் சில குழப்பங்களுக்கு காரணம். ஆட்சிக்கு நாங்கள் ஆதரவு வழங்குவது தொடர்பாக எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை என்றார்.

By admin