தமிழக சட்டசபைத் தேர்தல் களம் : தமிழக முதலமைச்சரின் தாயார் குறித்த அவதூறு பேச்சு. தலைமை தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் அளிக்க திமுக ஆ.ராசாவுக்கு உத்தரவு.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் குறித்த அவதூறு பேச்சு பற்றி தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. தலைமை தேர்தல் அதிகாரியிடம் இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் விதி முறைகளின்படி ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி மற்றும் அவரது பொதுவாழ்க்கைக்கு சம்பந்தப்படாத செயல்பாடுகள் பற்றி விமர்சிக்கக்கூடாது” என்று கூறப்பட்டுள்ளது
.இந்த நிலையில் தேர்தல் தேர்தல் ஆணையம் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி.க்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது..
எடப்பாடி பழனிசாமியை, ஆயிரம்விளக்கு தொகுதியில் 26-ந் தேதி பிரசாரம் மேற்கொண்டு இருந்த போது நீங்கள் (ஆ.ராசா) அவருக்கு (எடப்பாடி பழனிசாமிக்கு) எதிராக அவதூறாக பேசியதாக புகார் பெறப்பட்டுள்ளது.இது சம்பந்தமாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் பெறப்பட்டது. அதில் உங்கள் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. உங்களது இந்த பேச்சை தேர்தல் ஆணையம் கவனித்து பார்த்ததில் நீங்கள் அவதூறாக மட்டும் அல்ல, ஆபாசமாகவும் ஒரு பெண்ணின் தாய்மையை குறைத்தும் பேசி தேர்தல் நடத்தை விதிகளை மிக மோசமாக மீறியிருப்பது தெரிகிறது.
எனவே, உங்கள் தரப்பு கருத்தை இன்று (புதன்கிழமை) மாலை 6 மணிக்குள் நீங்கள் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் இது பற்றி மேலும் உங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும்.
என்று அவ் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.