கல்முனை வாழ் தமிழ் மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்தி கல்முனை மண்ணில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலம்பெற வைத்துள்ளனர்.
(செல்லையா பேரின்பராசா – துறைநீலாவணை நிருபர்)

நடைபெற்று முடிந்த உள்ளுர் அதிகார சபைக்கான தேர்தலின் போது கல்முனை வாழ் தமிழ் மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்தி கல்முனை மண்ணில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலம்பெற வைத்துள்ளனர். இந்த வகையில் வரலாறு காணாத வெற்றியை பதிவாக்கிய கல்முனை வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியினை காணிக்கையாக்குகின்றேன்.

இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் கல்முனைத் தொகுதிக்கான தலைவருமான மு.இராஜேஸ்வரன் விடுத்துள்ள நன்றி அறிதலில் தெரிவித்துள்ளார்.

கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளமை தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கல்முனை மண்ணுக்கு வருகை தந்து உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தை கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என பெயர் மாற்றம் செய்து தரமுயர்த்தித் தருவேன் என்று பகிரங்கமாக வாக்குறுதி அளித்தார். எனது கோரிக்கைக்கமைய அளிக்கப்பட்ட இந்த வாக்குறுதியை தேவ வாக்காக கருத்தில் கொண்டு கல்முனை வாழ் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பேராதரவினை அளித்துள்ளமைக்கு மீண்டும் நன்றி தெரிவிக்கின்றேன்.

தமிழ் மக்களை மாற்றுக் கட்சிகள் விலைபேசி அவர்களிடம் வாக்குப் பெற முடியாது என்பதை இத் தேர்தல் முடிவுகள் வடக்கு, கிழக்கில் பறைசாற்றியிருக்கின்றது. அந்த வகையில் தமிழ்த் தேசியத்தின் வெற்றிக்காக வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்த தமிழ் உணர்வாளர்களை நெஞ்சங்களில் சுமந்து செல்ல ஆசைப்படுகின்றேன்.

இவ்வாறான ஒற்றுமை, பலம் எதிர்காலத்தில் அவசியம் தேவை. காரணம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு எமது மக்களின் கரங்களில் வந்தடையும் வரையும் வட, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்தின் பின்னால் உறுதியுடன் செயற்பட வேண்டும்.

இத்தேர்தலில் தமிழ் தேசியத்தின் வெற்றிக்காக அயராது உழைத்த அனைத்து மக்களுக்கும் இலங்கை தமிழரசுக்கட்சியின் கல்முனைத் தொகுதிக்கான தலைவர் என்ற வகையில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

By admin