சிவனுக்கு உகந்தது சிவராத்திரி!


சிவனுக்கு உகந்தது சிவராத்திரி. இன்று(11) சிவராத்திரி. சிவனுக்கு சோமவாரவிரதம் முதல் திருவெம்பாவை வரை பல்வேறு விரதங்களிருப்பினும் அம்பிகை வழிபட்ட முக்கியமான விரதம்  மகாசிவராத்திரி விரதம்.


எட்டுணையும் உளத்து அன்பிலரேனும் உளரேனும் இந்நாள் எம்மை கண்டவர் நோற்றவர் பூசை பண்ணினர் நற்கதி அடைவர்’ – என்று சிவபெருமான் அருளியதாக வரதபண்டிதம் எனும் நூல் தெரிவிக்கிறது.


சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து தரிசித்து வழிபாடு செய்ய முடியாவிட்டால்கூட, ‘லிங்கோற்பவ’ காலமாகிய இரவு 11:30 மணி முதல் 1 மணி வரை உள்ள காலத்திலாவது சிவ தரிசனம் செய்து வழிபட வேண்டும் என்கின்றன ஞானநூல்கள்.


சிவராத்திரி மகா சிவராத்திரி யோக சிவராத்திரி நித்திய சிவராத்திரி பட்ச சிவராத்திரி மாத சிவராத்திரி மகா சிவராத்திரி என்று பலவகைப்பட்டாலும் மகா சிவராத்திரிதான் தலையாயது
மூன்றுகோடி சிவராத்திரி தினங்கள் விரதம் இருந்த புண்ணியம் சிவராத்திரியில் விரதமிருந்தால் கிட்டும் என்பார்கள்.

ஆலயங்களில் நான்குசாமப்பூஜைகள் நடைபெறும். இடையிடையே சமயசொற்பொழிகள் ஆன்மிகநிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். பிரதமரும் இவ்விரதத்தை சிறப்பாக அனுஸ்டிக்குமாறு ஆலோசனைவழங்கியுள்ளார்.
ஆனால் கொரோனா காலமாகையால் ஆலயங்களில் மட்டுப்படுத்தப்பட்டளவில் பூஜைகள் இடம்பெறும். எனவே இந்துக்கள் வீட்டிலேயிருந்து விரதத்தை அனுஸ்ட்டிக்கலாம்.
மகேஸ்வரனைப் போற்றித் துதிக்கும் ராத்திரி சிவராத்திரி. இந்த இரவில் ஈசனைத் துதிப்பவர்களைக் கண்டு காலனும் அஞ்சுவான். ஏழ்மையும் இன்மையும் விலகி ஓடும். பகை விலகும். இருவினை நீங்கும். இறைவன் அருள் சேரும்.


இத்தனை சிறப்புகளையும் கொண்டதால்தான் அந்த ராத்திரி மகா சிவராத்திரி. இந்த நாளில் ஆலயங்களில் நான்கு கால பூஜை விமர்சியாக நடைபெறும். அதைக் கண்டு தரிசித்து வழிபட்டால் இணையில்லாப் புண்ணியம் கிட்டும் என்பது நம்பிக்கை.
ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் கோயில்களுக்குச் செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அதற்காகக் கலங்க வேண்டியதில்லை.

வீட்டிலேயே ஈசனுக்கு பூஜை செய்து அற்புத பலன்களைப் பெறலாம்.
நான்கு காலத்துக்கும் தனித்தனியே சிறிய நான்கு ஷணிக லிங்கங்களை உருவாக்கி, ஒவ்வொரு காலத்துக்குமான விசேஷப் பொருள் களைக் கொண்டு அபிஷேகமும் அர்ச்சனையும் செய்து வழிபட்டு, அற்புத பலன்களை வீட்டிலிருந்தே வழிபட்டுப் பெறலாம்.
மகாசிவராத்திரியில் விசேஷமான எட்டு சிவ நாமங்கள் உச்சரித்தால் நலமுண்டாகும்.


மகா சிவராத்திரி தினத்தில் கீழ்க்காணும் எட்டு திருப்பெயர்களைக் கூறி துதித்தால் வாழ்வு வளமாகும்.
1. பவாய நம 2. சர்வாய நம 3. ருத்ராய நம 4. பசுபதயே நம 5. உக்ராய நம 6. மகாதேவாய நம 7. பீமாய நம 8. ஈசாநாய நம  என்பதாகும்.

இத்துணை சிறப்புவாய்ந்த சிவராத்திரியை அனுஸ்ட்டித்து வளம்பெறுவோமாக.
வி.ரி.சகாதேவராஜா

By admin