சிவராத்திரி  கட்டுரை – கா.சந்திரலிங்கம்

சிவனுக்குரிய இரவு சிவராத்திரி என்று அழைக்கப்படும். மேலும் இது சிவனுடைய ராத்திரி என்றும், சிவமான ராத்திரி என்றும், சிவனைப் பிரார்த்தனை செய்யும் ராத்திரி என்றும், சிவனுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் ராத்திரி என்றும் பலவாறாக பொருள் கொள்ளப்படும்.

வருடந்தோறும் நித்திய சிவராத்திரி, பக்ஷ சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என ஐந்து வகையான சிவராத்திரிகள் காணப்பட்ட போதும், சைவர்கள் அனைவரும் விரதமிருந்து, இரவு முழுவதும் நித்திரையின்றி விழித்திருந்து, நான்கு யாம பூஜை செய்து, சிவ நாமத்தை உச்சரித்து, சிவனின் அருளை பெறும் இரவாக காணப்படுவது மகா சிவராத்திரி ஆகும். இது மாசி மாதம் தேய்பிறையில் சதுர்த்தசி திதியில் வரும் இரவாகும்.

சிவராத்திரி நாளைப் பொறுத்தவரை பிரம்மா விஷ்ணு இருவருக்கும் யார் பெரியவர் என்ற மமதை ஏற்பட்டபோது ஆதி அந்தம் இன்றி சிவபெருமான் ஜோதிமயமாக தோன்றியநாள், உலக மக்களின் முன்னேற்றத்திற்காக சக்தியாகிய தேவி சிவனை நோக்கி பூஜை செய்த நாள், அன்பே மயமாக காணப்படும் சிவபெருமான் இலிங்கத்தில் தோன்றி அருளும் நாள், சக்தியாகிய ஈஸ்வரி விளையாட்டாக சிவனது கண்களை பின்புறமாக வந்து கைகளால் மூடிய போது உலகெங்கும் இருள் பரவிட இதனைப் போக்க தேவர்கள் பூசை செய்த நாள் என்றெல்லாம் பலவாறு கூறப்பட்டாலும், சிவனின் அருளை முழுமையாகப் பெறக்கூடிய அதிசிறந்த நாளாக மகா சிவராத்திரி நாள் காணப்படுகின்றது. அதுமட்டுமன்றி அன்று நள்ளிரவில் உலகிலுள்ள சகல இலிங்கங்களிலும் சிவன் தோன்றுவதாக கூறப்படுகின்றது.

‘சிவம்’ என்ற சொல் அனைத்து துன்பங்களையும் இல்லாமல் செய்வது என பொருள்படும். சிவராத்திரி அன்று பக்தியோடு விரதமிருந்து சிவநாமத்தை ஜெபிக்கும்போது சிவனுடைய பூரண அருளைப் பெறலாம். சிவராத்திரியன்று விரதமிருந்து சிவனைப் பூசிப்பவர்கள் 14 ஆண்டுகள் தொடர்ச்சியாக இதனை மேற்கொண்டு கடைசி ஆண்டில் பூர்த்தி செய்கின்ற பொழுது எம்பெருமானாகிய சிவன் முத்தியைக் கொடுப்பதாக கூறப்படுகின்றது. சிவகதியை அடைவதற்காக 24 ஆண்டுகள் தொடர்ச்சியாக விரதம் இருப்பவர்களும் உண்டு.

வேடன் ஒருவனைப் புலி ஒன்று காட்டில் விரட்டிச் சென்றபோது அவன் வேறு வழியின்றி மரத்தில் ஏறிக் கொண்டான். அது இரவு நேரம் என்பதால் மரத்திலிருந்து தவறி விழுந்து விடுவோம் என்ற பயத்தினால் மரத்திலிருந்த ஒவ்வொரு இலைகளை பறித்து கீழே போட்டுக் கொண்டிருந்தான். அவ்வாறு போட்ட இடத்தில் சிவலிங்கம் இருந்ததாலும், அந்த மரம் வில்வ மரமாக இருந்தாலும், அன்று சிவராத்திரி நாளாக இருந்ததாலும் அவன் முத்தி பெற்றதாக புராணங்கள் கூறும். சிவராத்திரி நாளென்பதை அறியாதிருந்த வேடனுக்கே முக்தி கிடைத்தமை சிவராத்திரி நாளின் சிறப்பை இயம்புவதாக உள்ளது.

கலாபூஷணம்,

கா.சந்திரலிங்கம்.

(ஓய்வுநிலை அதிபர்)

By admin