ஆட்சியமைக்க ஆதரவு வழங்குவதாக முடிவெதுவும் எடுக்கவில்லை, அப்படியாயின் கல்முனை பிரதேச மக்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு பரிசீலனை செய்தே முடிவெடுக்கப்படும்!

கல்முனை மாநகரசபையை  ஆட்சியமைப்பதற்கு எந்தகட்சிக்கும்  தனித்து ஆட்சியமைக்க முடியாதநிலை காணப்படுகிறது. இதனால் ஆட்சியமைக்க ஆதரவு தமிழ்த் தரப்பபுடனும் கோரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏழு ஆசனங்களை பெற்றுள்ள தமிழத் தேசியக் கூட்டமைப்பு இவ்விடயம் தொடர்பாக இரு தினங்களுக்கு முன்னர் பாண்டிருப்பில் கூடி கலந்துரையாடியிருந்தனர்.

இவ்விடயம்  தொடர்பாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து கல்முனை பிரதேச மக்களிடம் இருந்து பல்வேறு கருத்துக்களும் ஆதரவு தெரிவிப்பதாயின் அது தொடர்பாக பல விமர்சனங்களும் வெளியிடப்பட்டுவருகிறது.

கென்றி மகேந்திரன் அவர்களுடன் தொடர்புகொண்டு இவ்விடயம் தொடர்பாக கேட்டபோது அவர் இவ்வாறு கல்முனைநெற்றுக்கு தெரிவித்தார்…..

கல்முனை மாநகரசபைக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக இதுவரை எந்த முடிவுகளும் நாங்கள் எடுக்கவில்லை. வெற்றியீட்டிய உறுப்பினர்களும் கட்சிப் பிரமுகர்களும் தேர்தலின் பின்னர் ஒரிடத்தில் கூடியபோது மாநகரசபை ஆட்சி  விடயம் தொடர்பாகவும் கலந்துரையாடினோம் ஆனால் ஆதரவு வழங்குவதாக எந்த முடிவும் நாங்கள் எடுக்கவில்லை.

ஆட்சியமைக்க ஆதரவுகோரும்பட்சத்தில் கல்முனை பிரதேச தமிழர்களின் இருப்புக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் எமது நீண்டகால கோரிக்கைகளான பிரதேச செயலக விடயங்கள் நகர அபிவிருத்தி திட்டத்தில் தமிழரின் காணிகள் மற்றும் இருப்புக்கள் தொடர்பில் பாதிப்புக்கள் ஏற்படாத விடயங்கள் என எம்மால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் மாத்திரம் அது தொடர்பாக கல்முனை பிரதேச மக்களினதும்  இளைஞர்களினதும் கருத்துக்கள், ஆலோசனைகள் பெறப்பட்டு ஆதரவு வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  பங்காளிக் கட்சிகளின் தலைமைகளுடன் கலந்துரையாடியே முடிவுகள் எடுக்கப்படும்.

தமிழரின் பூர்வீ பிரதேசமான கல்முனை நகர் உட்பட்ட எமது மக்களின் இருப்புகளே  எமக்கு முக்கியம் அதற்கு குந்தகம் விளைவிக்க்க கூடிய எந்த திட்டங்களுக்கும் நாங்கள் அவசரப்பட்டு முடிவுகள் எடுக்க மாட்டோம். எமது மக்களின் கோரிக்கைகள் எமது நிலத்தின் இருப்பு பாதுகாப்பு அதுவே எங்களுக்கு முக்கியம்.

ஆட்சிக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக தேசியப் பதத்திரிகை  ஒன்றில் வெளியான செய்தியின்  தலைப்பு காரணமாகவும்  குழப்பங்கள் ஏற்பட்டிருந்தது. நான்கூறிய விடயத்திற்கும் அச் செய்தியின் தலைப்புக்கும் இடையில் இருந்த வித்தியாசமும் சில குழப்பங்களுக்கு காரணம். ஆட்சிக்கு நாங்கள் ஆதரவு வழங்குவது தொடர்பாக எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை என்றார்.

By admin