உள்ளூராட்சித் தேர்தலில் தொங்கும் உறுப்பினர்கள் (OVER HANG MEMBERS) என்றால் என்ன?

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட கலப்புமுறை தேர்தல்முறைமையில் உள்ளுராட்சித் தேர்தல் தற்போது நடந்துமுடிந்திருக்கிறது.

இங்கு புதுப்புது வியடங்கள் தகவல்கள் பொறிமுறைகள் மக்களுக்கு தெரியவந்தன. சுனாமி என்றசொல்லே சுனாமி இலங்கையைத்தாக்கியபிறகே இலங்கை மக்களுக்குத் தெரியவந்தது. அதுபோல தொங்கு உறுப்பினர்கள்(

OVER HANG MEMBERS.

) முயுறைமையும் தற்போது தேர்தல் முடிந்தபிற்பாடேதெரியவந்தது.

வர்த்தமானியில் ஒன்றைக்கூறிவிட்டு எப்படி உறுப்பினர்களைக்கூட்டுவதென்று பலரும் கேள்வியெழுப்பினர். அதற்குக் காரணம் போதிய விளக்கமின்மையே.

இன்னும் பலருக்கு இந்த முறைமை பற்றித் தெரியாது. அல்லது விளங்கவில்லை. அதனைக்கருத்திற்கொண்டு அரசியல் பத்தி எழுத்தாளன் அரசறிவியல்பட்டதாரி என்ற அடிப்படையில் இச்சிறுகட்டுரையை எழுதுகின்றேன்.

உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் முடிவடைந்துவிட்டது. அரசு ஏலவே வர்த்தமாணி அறிவித்தல் மூலம் உள்ளூர் அதிகார சபைகள் ஒவ்வொன்றுக்கும் எத்தனை உறுப்பினர்கள் எனத்தீர்மானித்து அதற்கேற்பவே தேர்தல் நடைபெற்றது.

இத் தீர்மானமானது ஒவ்வொரு உள்ளூர் அதிகார சபைகளுகளினதும் பரப்பளவு மற்றும் சனத்தொகையை அடிப்படையாகக் கொண்டு எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு அதன் அடிப்படையpல் அம் மொத்த உறுப்பினர் தொகையில் 60வீதம் வட்டாரம் மூலமும் 40வீதம் பட்டியலிலிருந்து விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்வதாக எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

உதாரணமாக ஒரு உள்ளூர் அதிகார சபைக்கு 20 உறுப்பினர்களை (100% தெரிவு செய்வதாயின் 12 பேர் (60%) வட்டாரத்திலிருந்தும் 08 பேர் (40%) பட்டியலில் இருந்து விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்தல்.

இதற்கமையவே தேர்தல் நடைபெற்றபோதும் முடிவுகளில் சில உள்ளூர் அதிகார சபைகளுகளில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுதான் தொங்கும்

(OVER HANG )உறுப்புரிமையாகும்.

இவ்வாறாக  இம்முறை இலங்கையில் 200 தொங்கு உறுப்பினர்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது எப்படி நிகழ்ந்தது எனப் பார்ப்போம்.

உதாரணமாக காரைதீவு பிரதேச சபைக்கு நிர்ணயிக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 11 ஆகும். இதை 100மூ ஆக எடுத்தால் வட்டாரங்களில் இருந்து 07 பேர் 60% தெரிவு செய்யப்படல் வேண்டும். மிகுதி 04  பேர் 40% அளிக்கப்ட்ட வாக்குகளின் விகிதாசாரத்திற்கு ஏற்ப பட்டியலில் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டும். இதுவே தேர்தல் நியதி.

தேர்தலில் வட்டாரத் தெரிவானது ஒவ்வொரு வட்டாரத்திலும் அதி கூடுதலான வாக்குகளைப் பெறுபவர் தெரிவு செய்யப்படுவார் என்பது சட்ட ஏற்பாடாகும். அவ்வாறே நிகழ்ந்தது.

ஆனால் தகைமை பெறும் எண்ணைக்கொண்டு ஒவ்வொரு கட்சி அல்லது சுயேச்சைக் குழுக்கள் பெற்ற மொத்த செல்லுபடியான வாக்குகளின் அடிப்படையில் உறுப்புரிமை தீர்மானிக்கப்படும் போது கிடைக்கவேண்டிய உறுப்புரிமை எண்ணிக்கையிலும் பார்க்க வட்டார ரீதியான தெரிவில் நேரடியாக அதிகமாக் கிடைத்திருப்பின் அக் கட்சியின் அல்லது சுயேச்சைக் குழுவின் உறுப்பினர் எண்ணிக்கையை எக்காரணம் கொண்டும் குறைக்க முடியாது. ஏனெனில் அவர்கள் வட்டார ரீதியாக தெரிவு செய்யப்பட்டவர்கள்.

அப்பொழுது மொத்த உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கும். அதுவே தொங்கும் உறுப்பினர்கள். (

OVER HANG MEMBERS).

 

இதனை ஓர் உதாரணம்  மூலம் காண்போம்.

காரைதீவு பிரதேச சபையை எடுத்துக் கொண்டால்……

நிர்ணயிக்கப்பட்ட உறுப்புரிமை – 11.

வட்டாரங்கள் – 07 (07 பேர் வட்டார ரீதியாக தெரிவு செய்யப்பட வேண்டும்.

விகிதாசார ரீதியான 04 பேர் தெரிவு செய்யப்பட வேண்டும்.)

வட்டார ரீதியாக பெறப்பட்ட விபரம் –

இலங்கை தமிழரசுக் கட்சி – 04 வட்டாரங்களிலிருந்து 04 உறுப்பினர்கள்.

அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் 01 வட்டாரத்திலிருந்து 01 உறுப்பினர்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி 01 வட்டாரத்திலிருந்து 01 உறுப்பினர்.

சுயேச்சைக் குழு-2 01 வட்டாரத்திலிருந்து 01 உறுப்பினர்.

ஆக 07 வட்டாரங்களிலிருந்தும் 07 பேர் நேரடியாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

நடைபெற்றுமுடிந்த  தேர்தலில் இலங்கைத்தமிழரசுக்கட்சி 3202 வாக்குகளையும் சுயேச்சை-1 அணி 1985வாக்குகளையும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 1684வாக்குகளையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1522வாக்குகளையும்  அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் 1010வாக்குகளையும்  சுயேச்சை -2 அணி 829வாக்குகளையும் தமிழர்விடுதலைக்கூட்டணி 280வாக்குகளையும் ஜ.தே.கட்சி 203வாக்குகளையும் பெற்றுக்கொண்டன.

.

இப்பொழுது அளிக்கபட்ட மொத்த செல்லுபடியான வாக்குகளின் அடிப்படையில் தகைமை பெறும் எண்ணானது

அளிக்கபட்ட மொத்த செல்லுபடியான வாக்குகள் – 10715. இதனை 11ஆல் (மொத்த உறுப்பினர் எண்ணிக்கை) வகுக்கும்போது பெறப்படுவது தகைமை பெறும் எண்ணாகும்.

இங்கு ஒரு உறுப்பினருக்கான தகைமை எண் 974 என அமைகின்றது.

மொத்த 12972வாக்குகளில் 10821வாக்குகள் அளிக்கப்பட்டன. அதில் 106 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதனால் 10715வாக்குகள் செல்லுபடியானது.

 

இப்பொழுது இத் தகைமைபெறும் எண்ணால் (974) இலங்கை தமிழரசுக் கட்சி பெற்ற மொத்த வாக்குகளை (3202) வகுக்கும் போது 3.2874 என அமையும்

இங்கு இலங்கை தமிழரசுக் கட்சி பெற்ற வாக்குகளைப்பார்த்தால் ஆக 03 உறுப்பினர்களே பெற வேண்டிய நிலையில் வட்டாரத்தில் 04 உறுப்பினர்கள் பெற்றமையினால் 01 உறுப்பினர் அதிகமாக அமைகின்றது. இங்கு பெற்ற உறுப்பினர்களை குறைக்க முடியாது.

அதற்காக ஏனைய கட்சிகள் பெறுகின்ற ஆசனங்களையும் குறைக்கமுடியாது. எனவேதான் வட்டாரமுறையில் குறைந்த அந்த ஒரு ஆசனத்தை இங்கு வழங்கவேண்டிய நிலை.

ஏனைய கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்கள் பெற்ற மொத்த வாக்குகள் தகைமை எண்ணால் வகுக்கப்பட்டு அவர்களுக்குரிய உறுப்புரிமை இதே வகையில் வழங்கப்பட்டது.

உதாரணமாக சுயேச்சை 1 அணி பெற்ற 1985 வாக்குகளை தகைமைபெறும் எண்ணான 974ஆல் பிரித்தால் 2.0379 வருகிறது. ஆகவே இநத அணியினருக்கு 2 ஆசனங்கள் வழங்கப்பட்டது. அதேபோன்று தகைமைபெறும் எண்ணுக்குள் வருகின்ற வாக்குகளைப்பிரித்து வரும் எண்ணிக்கை ஆசனங்களாக வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி  த.அ.கட்சி 4ஆசனங்களையும் சுயேச்சைக்குழு-1 அணி 2ஆசனங்களையும் ஸ்ரீல.மு.கா. 2ஆசனங்களையும் ஸ்ரீல.சு.கட்சி 2ஆசனங்களையும் அ.இ.ம.காங்கிரஸ் 1ஆசனத்தையும் சுயேச்சை 2 அணி 1ஆசனத்தையும் பெற்றுக்கொண்டன.

இதனால் தற்போது காரைதீவு பிரதேசசபையின் பிரதிநிதிகள் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

இதுவே தொங்கும் உறுப்பினர்கள்

OVER HANG MEMBERS.

ஆவர். இதேபோன்று திருக்கோவில் பிரதேசசபைக்கான மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 16இலிருந்து 17ஆக உயர்ந்துள்ளது. மட்டுமாநகரசபைக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை 33 இலிருந்து 38ஆக உயர்ந்துள்ளது.கல்முனை மாநகரசபையிரல் 40க்கு 41 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். இவ்வாறு இலங்கையில் மொத்தம் 200பேர் இவ்வகுதிக்குள் வருகின்றனர்.

எனவே இது அடுத்துவரும் தேர்தல்களில் பழக்கப்பட்டுவிடும்.

வி.ரி.சகாதேவராஜா.

 

By admin