இயக்குனரும், தயாரிப்பாளருமான மறைந்த பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துகள் ஏலத்திற்கு வந்திருப்பது தமிழ் சினிமாத் துறையினரை அதிர்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபல பெரிய ஹீரோக்களை உருவாக்கியவர் பாலசந்தர். இவரின் இயக்கத்தில் வெளிவந்த அபூர்வ ராகங்கள் படத்தில்தான் ரஜினி அறிமுகமானார்.

அதேபோல், கமல்ஹாசனை வைத்து பல வித்தியாசமான கதைக் களங்களை சினிமாவில் உருவாக்கியவர் பாலச்சந்தர். இயக்கம் மட்டுமில்லாமல், புன்னகை மன்னன், அண்ணாமலை, ரோஜா, முத்து உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை அவரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில், கவிதாலயா புரடெக்‌ஷன்ஸ் நிறுவனத்தில் சார்பில் வங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை செலுத்தப்படாததால், அந்நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்கள் ஏலத்திற்கு வந்துள்ளது.

UCO வங்கியில் அந்த நிறுவனம் சார்பாக வாங்கப்பட்ட ரூ.1 கோடியோ 36 லட்சம் பணத்தை செலுத்தவில்லை என்பதால், சென்னை அபிராமபுரத்தில் உள்ள அந்நிறுவனத்திற்கு சொந்தமான சில கட்டிடங்கள் மற்றும் வீடுகள் ஏலத்திற்கு வர உள்ளன.

அதற்கான அறிவிப்பு இன்று ஒரு ஆங்கில செய்தித்தாளில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தமிழ் சினிமா உலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.