தேர்தல் வன்முறையில் தாக்குதலுக்கிலக்கான நோயாளியைபார்க்கச்சென்றவர்கள் வைத்தியரை அச்சுறுத்தினராம்!
கல்முனைப்பொலிசாரால் இருவர் கைது: வைத்தியஅத்தியட்சகர் முறைப்பாடு!
காரைதீவு நிருபர் சகா
 
தேர்தல் வன்முறையில் தாக்குதலுக்கிலக்கான ஒரு நோயாளியைப் பார்க்கச்சென்ற இருவர் அங்கிருந்த வைத்தியஅதிகாரியையும் தாதிய உத்தியோகத்தரையும் தகாதவார்த்தை பாவித்து ஏசியதுடன் அச்சுறுத்தியுமுள்ளனர்.
இச்சம்பவம்  (9) மாலை 5.15மணியளவில் கல்முனை ஆதாரவைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவநேரம் வைத்திய சாலையின் வைத்தியஅத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் வைத்தியசாலையில் கடமையிலிருந்துள்ளார்.
அவர்கூறுகையில்:
கட்சிஆதரவாளர்களிடையே இடம்பெற்ற மோதலில் காதுஅறுக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு  சத்திரசிகிச்சைக்குப்பொறுப்பான வைத்தியஅதிகாரி சிகிச்சைசெய்துள்ளார்.
அவரைப்பார்க்கவந்த அவரது ஆதரவாளர்கள் இருவர் நோயாளியைஅனுமதித்த அனுமதிப்பத்திரத்தில் எழுதப்பட்ட பெயரில் வித்தியாசமிருப்பதாகக்கூறி அங்குநின்ற தாதிய உத்தியோகத்தருடன் வாக்குவாதப்பட்டுள்ளனர்.முரண்பட்டுள்ளனர்.
அதனைக்கண்ணுற்ற வைத்தியஅதிகாரி வந்து அவர்களுடன் கதைத்தபோது அவர்கள் அவரைத்தாக்கமுற்பட்டதுடன் தகாதவார்த்தையால் திட்டியதுடன் அச்சுறுத்தியுமுள்ளனர்.
இச்சம்பவத்தால் சத்திரசிகிச்சை விடுதியின் வழமையான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தது. விடயமறிந்து சென்று  விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளேன்..
சம்பவத்தை கேள்வியுற்றதும் மறுகணம் வந்து விரைந்து செயற்பட்டு பொலிசாருக்கு முறைப்பாடு தெரிவித்தேன். என்றார்.
கல்முனைப்பொலிசார் ஸ்தலத்திற்குவந்து விசாரணைசெய்து நோயாளியிடம் தகவலைப்பெற்று பார்க்கவந்த இருவரையும் அவர்களது ஊருக்குச்சென்று இரவு 8.30மணியளவில் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரும் அரசியல்கட்சியொன்றின் ஆதரவாளர்கள் ஆவர். இருவரும் பொலிஸ்நிலையத்தில் தடுத்தவைக்கப்பட்டு விசாரணைசெய்யப்பட்டு வருவதாக பொலிசார் வைத்தியஅத்தியட்சகர் முரளீஸ்வரனிடம் நேற்று கூறியுள்ளனர்.
இதனிடையே அரசாங்க வைத்தியஅதிகாரிகள் சங்கத்தினரும் இச்சம்பவத்தை கேள்வியுற்று உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளமை குறிப்பிடத்கக்கது.

By admin