மகாசிவராத்திரி தினம் 13.02.218 திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. சிவராத்திரி தொடர்பாக ஆன்மீகத்தொண்டன் அடியவன் எழுதிய கட்டுரை இது

மகா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும் !

சிவராத்திரி ரகசியம் ~ 01 ~*

கனகமஹாமணிபூஷித லிங்கம்

பணிபதிவேஷ்டிதஸோபித லிங்கம்

தக்ஷஸுயக்ஞவினாஸன லிங்கம்

தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்

🔥 *பொருள்:*🔥
*****************

தங்கத்தாலும், சிறந்த மணிகளாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, நாகராஜனால் சுற்றப்பட்டு விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, தக்ஷ யாகத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, மங்கலத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன் என்பதாகும்.

*”மகா சிவராத்திரி”* எனும் புனிதமான விரதம் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம், கிருஷ்ணபக்ஷம், சதுர்த்தசி திதியன்று திருவோணம் நக்ஷத்திரம் கூடிய புண்ணிய தினத்தன்று  அனுஷ்டிக்கப் பெறுகின்றது.

மஹா சிவராத்ரியன்று சிவபெருமான் எழுந்தருளும் ராத்திரி, சிவனை அர்ச்சிக்க வேண்டிய ராத்திரி, சிவனோடு ஐக்கியமாக வேண்டிய ராத்திரி, தேவர்களும் முனிவர்களும் வணங்கி நிற்கும் ஒப்பற்ற ராத்ரியாகும்.

இவ்வருடம் *13.02.2018* செவ்வாய்க்கிழமை  அன்று கொண்டாடபட இருக்கிறது.

எம்பெருமானுக்கு உகந்த விரதங்களாக எட்டுவிரதங்களை
கந்தபுராணம்  குறிப்பிடுகிறது.

1.சோம வார விரதம்

2. திருவாதிரை

3.உமா மகேசுவர விரதம்

4.மகா சிவராத்திரி விரதம்

5.கேதார விரதம்

6. கல்யாண விரதம்

7.சூல விரதம்

8.ரிசப விரதம் என்பன அவையாகும்.

இத் திருநாட்களில்  தனித்திருந்து, விழித்திருந்து, பசித்திருந்து  இறைவனை வழிபட்டால் இறையருள் கிட்டும் என  ”வள்ளல் பெருமான் இராமலிங்க அடிகள்” கூறுகின்றார்.

 *தனித்திரு:*
***************

ஆசாபாசங்களில் மனதை அழுந்த விடாமல் பற்றற்றான் பற்றினையே பற்றிக் கொண்டிருத்தல், எவ்வித கூட்டுறவுகளில் கலந்திருந்த போதிலும் சீவன் பரமனை பற்றி இருத்தலே தனித்திருத்தல் – மனம் தனித்து அமைதி நிலையில் இறையுணர்வோடு இருத்தல் ஆகும்.

*விழித்திரு:*
**************

மனம், புத்தி, சித்தம், அகங்காரம் முதலிய காரணங்களை அன்புக்குரிய நன் முயற்சியில் ஈடுபடுத்தி பொய், பொறாமை, காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் முதலான துவேச உணர்வுகளிலிருந்து தடுத்துப் பழகுதலே விழித்திருத்தல் – விழித்திருத்தல் எனப்பெறும்.  விழிப்புடன் இருத்தல்  ஆகும்.

*பசித்திரு:*
*************

பசியோடு இருந்தால் தான் புசிக்கலாம். ஆண்டவர் அருளமுதம் அருந்த அருட்கணல் ஏற்றி அவாக் கொள்ளுதலே பசித்திருத்தல்,  முழுமை சித்தி அடையும் வரையில் ஞானப் பசியுடன் இருத்தல் ஆகும்.

மகா சிவராத்திரியின் மகிமையை ஆகமங்கள், சிவமகா புராணம், ஸ்காந்தம், பத்மம் உள்ளிட்ட பத்து புராணங்களும் குறிப்பிடுகின்றன.

வேதங்களில் சாமவேதமும், நதிகளில் கங்கையும், பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாகிய சிதம்பரமும் எப்படி உயர்ந்ததோ அதே போல விரதங்களில் உயர்ந்தது மஹா சிவராத்திரி விரதம் என சாஸ்திரங்கள் போற்றுகின்றன.

*சிவராத்திர தோன்றிய விதம்:*

உலகத்துக்கு ஆதியும் அந்தமுமாய் இருப்பவர், சிவபெருமான். பிரளய காலத்தில் ஜீவன்கள் எல்லாம் அவருள் ஒடுங்கிவிடும். ஆனால் எப்போதும் சிவனை விட்டுப் பிரியாதவளாக சக்தி மட்டும் இருப்பாள்.
அப்படி ஒரு பிரளயம் வந்து உலக உயிர்கள் எல்லாம் சிவனிடம் ஒடுங்கிவிட்டன.

அண்டத்தில் எதுவுமே இல்லை. புல், பூண்டு, பூச்சிகள் என எதுவுமே இல்லாத வெறுமை. எங்கும் எப்போதும் பேரமைதி. அன்னைக்கு இந்த நிலை பிடிக்கவில்லை. குழந்தைகள் இல்லாத வீடு எந்தத் தாய்க்குத் தான் பிடிக்கும் ?

அதனால் கருணையே வடிவான உலகண்ணை மீண்டும் உலகத்தில் உயிர்கள் தோன்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் சிவனை பூஜித்தாள். அந்த பூஜைக்கு மனமிரங்கிய பெருமானும் மீண்டும் உயிர்களையும் ஈரேழு பதினாலு உலகங்களையும் படைக்க உத்தரவிட்டார்.

அப்போது பார்வதி தேவி, தான் ஈசனை நினைத்து பூஜைகள் செய்து வழிபட்ட காலம் சிவனுக்குரிய காலமாகப் போற்றப்பட வேண்டும் என்றும், அன்று சிவனை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்களுக்கு அவர்கள் வேண்டுவது கிடைக்க அருள்புரிய வேண்டும் என்றும் வேண்டினாள். சிவனும் அவ்வாறே அருளினார். அந்த நாளே சிவராத்திரி என்று சிவ மகா புராணம் சொல்கிறது.

பார்வதி தேவியைத் தொடர்ந்து சனகாதி முனிவர்களும், நந்தியும் சிவராத்திரி விரதமிருந்து தாங்கள் விரும்பியதைப் பெற்றதாகவும் அப்புராணம் இயம்புகிறது.

*இனி வரும் பதிவுகளில்  சிவராத்திரியின் பெருமையை சொல்லும் பலர் அறிந்திடாத சில கதைகளும் , விரதமுறைகள் பற்றிய தகவல்களும், சில சிவஸ்தல தரிசனத்தையும் பார்க்கலாம்…*

– *தொடரும்…..*

🙏🏽 *தியான நிலையில் ‘சிவாய நம’ என்ற மந்திரத்தை ஓதினால ஐம்புலன்களையும் அடக்கலாம்.*

*ஷிவோகம்*

By admin