ரஜனி அரசியல் : தமிழ்நாட்டில் சிஸ்டத்தை முதலில் சரி செய்வோம்: ரஜினிகாந்த்….

தமிழகத்தில் தான் முதலில் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டும் என்று ரஜினிகாந்த் மீண்டும் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் 1996-ல் அன்றைய அதிமுக ஆட்சிக்கு எதிராக வாய்ஸ் கொடுத்தார். திமுக தலைமையிலான மெகா கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தார். இந்த ஆட்சி மீண்டும் வந்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று கூறினார். இதனால் அதிமுக ஆட்சி அப்போது தோல்வியைத் தழுவியது.

அதன் பின்னர் 98-ல் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி கொடுத்த வாய்ஸ் எடுபடவில்லை. அதன் பின்னர் ரஜினி அரசியல் பற்றி பேசாமல் இருந்தார். ஜெயலலிதாவுடன் நட்பு தொடர்ந்தது. பின்னர் இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என்று அரசியலுக்கு வராமல் இருந்தவர் கடந்த ஜனவரி 31 அன்று தான் அரசியலுக்கு நிச்சயம் வர உள்ளதாக தெரிவித்தார்.

அதற்கு முன்னர் ரசிகர்கள் சந்திப்பில் தமிழத்தில் சிஸ்டம் சரியில்லை என்று பேசினார். இதற்கு அதிமுக அமைச்சர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். சிஸ்டம் குறித்த ரஜினியின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் கட்சி ஆரம்பிக்கும் முடிவில் தீவிரமாக இருக்கும் ரஜினிகாந்த் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறார். இன்று போயஸ் இல்லத்திலிருந்து புறப்பட்ட ரஜினிகாந்தை செய்தியாளர்கள் சந்தித்தனர்.

அப்போது அவரிடம் சிஸ்டம் சரியில்லை என்று சொன்னீர்களே அது தமிழகத்தையா அல்லது மொத்த இந்தியாவையுமா? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், ”இல்லை. முதலில் தமிழகத்தில் சிஸ்டத்தை சரி செய்வோம்” என்று தெரிவித்தார்.

கமலுடன் இணைந்து பணியாற்றுவது குறித்த கேள்விக்கு, ”காலம்தான் பதில் சொல்லும்” என்று ரஜினி தெரிவித்தார்.

தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை. அதை மட்டும்தான் முதலில் சரி செய்ய வேண்டும் என்ற ரஜினியின் கருத்து மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.