பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம் : இலங்கை அதிபரின் உத்தரவு குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை – மஹேஷினி கொலன்ன..

பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை மீண்டும் பணியில் அமர்த்தும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவு தொடர்பாக தமக்கு ஏதும் தெரியாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை, பாதுகாப்பு ஆலோசகர் பணியில் இருந்து இடைநிறுத்துவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.

எனினும், இந்த உத்தரவை ரத்துச் செய்து, மீண்டும் அவரைப் பணியில் சேர்த்துக் கொள்ளுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று உத்தரவிட்டிருந்தார்.

இதுதொடர்பாக சிறிலங்கா வெளிவிவகாரச் செயலருக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார்.

ஆனால், பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை மீண்டும் பணியில் சேர்க்கும் சிறிலங்கா அதிபரின் உத்தரவு தொடர்பாக தமக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று சி்றிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்ன தெரிவித்துள்ளார்.

Puthinappalakai