மாலைதீவு : : சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு தூதர்களை அனுப்புகிறது மாலைதீவு ஆனால் இந்தியா  பட்டியலில் இல்லை………

மாலைதீவில் ஏற்பட்டுள்ள தற்போதய நெருக்கடி நிலவரம் குறித்து தகவல் தெரிவிக்க நட்பு நாடுகளுக்கு தூதர்களை அனுப்புவதாக தெரிவித்துள்ள அந்நாடு, இந்தியாவுக்கு தூதரை அனுப்ப போவது இல்லை என தெரிவித்துள்ளது.

மாலத்தீவில் தண்டிக்கப்பட்டு உள்ள அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும்; அதிபர் யாமீன் அப்துல் கயூமின் மாலைதீவு முன்னேற்ற கட்சியின் 12 எம்.பி.க்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என கடந்த 1-ந் தேதி அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதை மாலைதீவு அதிபர் யாமீன் அப்துல் கயூம் ஏற்க மறுத்தார். இதைத் தொடர்ந்து அங்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. தீர்ப்பை வழங்கிய தலைமை நீதிபதி அப்துல்லா சயீத், நீதிபதி அலி ஹமீத், முன்னாள் அதிபர் மாமூன் அப்துல் கயூம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் மாலைதீவு விவகாரத்தில் இந்திய ராணுவ உதவியை மற்றொரு முன்னாள் அதிபர் முகமது நஷீத் நாடி உள்ளார்.ஆனால் இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.இது தொடர்பாக பீஜிங்கில் சீன வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கெங்க் சுவாங்கிடம் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அங்கு தற்போது உள்ள நிலைமையை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தும் விதத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அந்த நாட்டின் இறையாண்மையை மதித்து, ஆக்கப்பூர்வமான பங்களிப்பு செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டார். ஆனால் முன்னாள் அதிபர் முகமது நஷீத் இதை கண்டுகொள்ளாமல், இந்தியாவின் ராணுவ உதவியை மீண்டும் கோரி உள்ளார்.

இதற்கிடையே முன்னாள் அதிபர் முகமது நஷீத் உள்ளிட்டவர்களின் தண்டனையை ரத்து செய்ததை சுப்ரீம் கோர்ட்டின் எஞ்சிய 3 நீதிபதிகள் அமர்வு விலக்கிக்கொண்டது. இதை அதிபர் யாமீன் அப்துல் கயூம் வரவேற்று உள்ளார். மாலத்தீவில் ஏற்பட்ட அதிகார மோதலில், அதிபர் யாமீன் கை தற்போது ஓங்கி இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது.

இந்த நிலையில், மாலைதீவில் தற்போது இருக்கும் சூழல் குறித்து தனது நேச நாடுகளுக்கு தகவல் தெரிவிக்க அதிபர் யாமீன் முடிவு செய்துள்ளார். இதன்படி, நட்பு நாடுகள் எனமாலைதீவு அறிவித்துள்ள பட்டியலில் இந்தியாவுக்கு இடம் இல்லை. சீனா, பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு தூதர்கள் சென்று மாலத்தீவின் நிலவரம் பற்றி தகவல் தெரிவிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவு , நட்பு நாடுகள் பட்டியலில் இந்தியாவை சேர்க்காமல் அறிவித்து இருப்பது, சர்வதேச அளவில் கவனிக்கப்படுகிறது. மாலத்தீவு விவகாரத்தில் இந்தியா தலையிட கூடாது என்று சீனா அறிவித்த சில மணி நேரங்களில் மாலைதீவு இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

மாலத்தீவின் தற்போதைய அதிபர் யாமீன், சீனா மற்றும் சவூதி அரேபிய நாடுகளுடன் நெருங்கிய நட்பு பாராட்டி வருகிறார். குட்டித்தீவு நாடான மாலத்தீவில் சீனா மற்றும் சவூதி அரேபியா ஆகிய இருநாடுகளும் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றன.