பேராதனை  மருத்துவபீடத்தை ஆரம்பித்துவைத்தவர் பேராசிரியர் டாக்டர்.வரகுணம் : கிழக்கின் முதல் மருத்துவத்துறைப்பேராசிரியர்!
காரைதீவு அஞ்சலிக்கூட்டத்தில் புகழாரம்!
(காரைதீவு  நிருபர் சகா)
 

கிழக்கின் முதல் மருத்துவத்துறைப் பேராசிரியர் வைத்தியகலாநிதி.த.வரகுணம் பேராதனை பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடத்தை ஆரம்பித்துவைத்து பல கல்விமான்களை உருவாக்கியவர். அவரது நாமம் இப்பூவுலகம் இருக்கும்வரை நிலைத்துவாழும்.

இவ்வாறு மறைந்த பேராசிரியர் டாக்டர் த.வரகுணத்தின் நினைவஞ்சலிக்கூட்டத்தில் உரையாற்றிய காரைதீவு வைத்தியசாலையின் மாவட்டவைத்தியஅதிகாரி டாக்டர் எம்.எச்.றிஸ்பின் தெரிவித்தார்.

பலகோடிருபா பெறுமதியான தனது காணியினை காரைதீவு வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக வழங்கிய மறைந்த பேராசிரியர் த.வரகுணத்தின் நினைவஞ்சலிக்கூட்டம் இன்;று(6) காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் நடைபெற்றது.

அஞ்சலி உரைகளை வைத்தியஅதிகாரி திருமதி டாக்டர் எஸ்.ஜீவராணி முன்னாள் அதிபர் வெ.ஜெயநாதன் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா சமுகசேவையாளர் ச.நந்தகுமார் கவிஞர் அன்புசண்முகம் அதிபர் எஸ்.மணிமாறன் ஆகியோர் நிகழ்த்தினர்.

முன்னதாக அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து புஸ்பாஞ்சலி நிகழ்த்தப்பட்டது. டாக்டர் வரகுணத்தின் நாமம் காரைதீவு வைத்தியசாலைக்கு சூட்டப்படவேண்டும் அத்துடன் அவருக்கு சிலை நிறுவுவது என்றும் முன்மொழியப்பட்டது.

அங்கு  அஞ்சலிஉரைகளின் போது குறிப்பிடப்பட்டதாவது:

மறைந்தும் மறையாத மாமனிதர் கொடைவள்ளல் பொன்மனச்செம்மல் பேராசிரியர் வரகுணத்தின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

கல்லடி உப்போடையில் தம்பிப்பிள்ளை டாக்டரின்  ஒரேமகனானப்பிறந்த  வரகுணம் மட்டு. மத்தியகல்லூரியிலும் கொழும்பு றோயல் கல்லூரியிலும் பயின்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் வைத்தியத்துறையில் பயின்று வைத்தியராகி பின்னர் லண்டன்சென்று எம்.ஆர்.சி.பி. பயின்று பேராதனை பல்கலைக்கழகத்தில் சிரேஸ்ட்ட விரிவுரையாளராகி பின்னர் பேராசிரியராக பதவிபெற்றவர்.

By admin