பல அங்கத்தவர் வட்டாரமுறை பலனளிக்குமா?

இலங்கை அரசியலில் மீண்டுமொரு தடவை பல அங்கத்தவர் வட்டாரமுறைமை அமுலுக்கு வந்துள்ளது.

இதன் நோக்கம் எதிர்பார்த்த இலக்கை அடைந்துள்ளதா? என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இரு இனங்கள் அல்லது பல்லினங்கள் வாழுகின்ற பிரதேசங்களில் அந்த இனங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் போய்ச்சேரவேண்டும் என்ற நோக்கோடு இந்த முறைமை சோல்பரி ஆணைக்குழுவினால் அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன்பிரகாரம் ஒரு தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதி என்றால் தெரிவாகுவோரில் ஒருவர் ஒருஇனத்தையும் இரண்டாமவர் மற்றஇனத்தையும் சேர்ந்தவராக வருவார்கள். அந்த வகையில் இம்முறைமை மிகுந்த வரவேற்பைப்பெற்றிருந்தது.

ஆனால் தற்போது புதிய கலப்பு முறைமையின்கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல் அங்கத்தவர் முறைமை சற்று வித்தியாசமானது.

அந்த வட்டாரத்தில் எந்தக்கட்சி கூடுதல் வாக்கெடுக்கின்றதோ அக்கட்சி சார்பில் அந்தவட்டாரத்தில் போட்டியிட்டவர்கள் வெற்றிபெறுவார்கள். அவர்கள் ஓரினத்தைச் சார்ந்தவராகவும் இருப்பர். உதாரணம் கல்முனை 12ஆம் வட்டாரம்.

இங்கு தமிழரசுக்கட்சி வெற்றி பெற்றால் இருவரும் தமிழழராகவும் ஜ.தே.கட்சி அல்லது அ.இ.ம.காங்கிரஸ் வெற்றிபெற்றால் தெரிவாகும் இருவரும் முஸ்லிம்களாகவும் இருப்பர்.
இது எந்தளவிற்கு இந்த பல் அங்கத்தவர் வட்டாரமுறைமையின் நோக்கத்தை நிறைவேற்றும்? என்பது கேள்விக்குறியே.

இதில் ஒரு திருத்தம் இவ்வாறு கொண்டுவந்திருந்தால் சிலவேளை 100வீதம் நோக்கத்தை நிறைவேற்றியிருக்கும்.
அதாவது இரட்டை அங்கத்தவர் வட்டார வேட்புமனுவில் அந்த வட்டாரத்தில் வசிக்கும் இரு இனங்களையும் சேர்ந்த இருவர் கட்டாயம் நியமிக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தால் அது சாதகமாகவிருந்திருக்கும். அல்ல கூடிய வாக்ககள் பெற்ற கட்சிக்கு ஒரு ஆசனமும் அடுத்தகட்ட வாக்ககளைப்பெறும் கட்சிக்கு இரண்டாவது ஆசனமும் வழங்கப்படும் என்ற நடைமுறை இருந்திரந்தால் வரவேற்பைப்பெற்றிருக்கும்.
அதாவது தெரிவில் எப்படியோ இரு இனங்களையும் சேர்ந்த இருவர் தெரிவாகியிருப்பர். அது சமுகத்திற்கு நல்லது.
வரலாறு:

இலங்கையில் 1931 டொனமூர் யாப்பில் 50 தனி அங்கத்தவர் தொகுதிகளைக் கொண்ட பிரதேசவாரி தேர்தல் முறை அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் 1947 சோல்பரி யாப்பிலேயே 05 பல அங்கத்தவர் அங்கத்தவர் கொண்ட தேர்தல் தொகுதிகள் உருவாக்கப்பட்டன.

ப.அ.தே.தொகுதிகள் உருவாக்கப்படுவதன் நோக்கம் சிறுபான்மையினருக்குப் போதிய பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொடுப்பதாகும். அதாவது பல்வேறு இனங்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களில் இனங்கள் ஒவ்வொன்றும் தங்களுடைய பிரதிநிதித்துவத்தைப் பெற வழி செய்வதாகும்.

இதன்படி 1947 இல் கொழும்பு மத்தி 3 அங்கத்தவர் தொகுதியாகவும் மட்டக்களப்பு மூதூர் அக்குறணை பலாங்கொடை பதுளை போன்ற தொகுதிகள் இரட்டை அங்கத்தவர் தொகுதிகளாகவும் உருவாக்கப்பட்டன. ஆனால் நடைமுறையில் எல்லா இனத்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை.

உதாரணமாக கொழும்பு மத்தியில் ஒருபோதும் தமிழர்கள் தெரிவுசெய்யப்படவில்லை. 1970 தேர்தலில் மட்டக்களப்பில் முஸ்லிம் பிரதிநிதி தெரிவு செய்யப்படவில்லை. 1952 தேர்தலில் பலாங்கொடையில் இந்திய வம்சாவழி பிரதிநிதி எவரும் தெரிவு செய்யப்படவில்லை. எனவே இரட்டை அங்கத்தவர் வட்டாரத்தில் இரு இனங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவர் தெரிவு செய்யப்படுவர் என உறுதியாகக் கூற முடியாது.

1972 இல் ப.அ.தே.தொகுதிகள் ஒழிக்கப்பட்டன. 1978 இலிருந்து 2017 வரை விகிதாசார தேர்தல் முறையே இருந்தது. எனவே நீண்ட காலத்திற்குப் பின்னர் உள்ளூராட்சித் தேர்தலில் கலப்பு முறையின் ஊடாக ப.அ.தே.வட்டாரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில்..
அம்பாறை மாவட்டம் கல்முனை அக்கரைப்பற்று ஆகிய 2 மாநகரசபைகளையும் அம்பாறை நகரசபையையும் மீதி 17 பிரதேசசபைகளையும் கொண்டது.
மொத்தமாகவுள்ள 20சபைகளில் சம்மாந்துறை பிரதேசசபையில் 3அங்கத்தவர் வட்டாரமொன்றும் கல்முனை மாநகரசபை மற்றும் நாவிதன்வெளி இறக்காமம் ஆகிய பிரதேசபைகளில் இரட்டை அங்கத்தவர் கொண்ட வட்டாரமும் உள்ளன. ஏனைய 16சபைகளும் ஒற்றை அங்கத்தவர் கொண்ட வட்டாரங்களைக்கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

3அங்கத்தவர் வட்டாரம்!

சம்மாந்துறை பிரதேசசபையில் 9வட்டாரங்கள் இருப்பினும் அங்கு ஒரு 3 அங்கத்தவர் வட்டாரமொன்று இருப்பதனால் மொத்தமாக அங்கு 12 வேட்பாளர்கள் போட்டியிடவேண்டும்.
அது வீரமுனை வட்டாரமாகும்.
இங்கு நௌசாட்டை தலைமையாகக்கொண்ட அ.இ.ம.காங்கிரஸ் தமிழர் ஒருவரையும் இரு முஸ்லிம்களையும் இணைத்து தேர்தலில் நிற்கிறது. ஆனால் மு.கா. அங்கு மூவரையும் முஸ்லிம்களாகவே இறக்கியுள்ளது.மு.கா. வெற்றிபெற்றால் மூவரும் முஸ்லிம்களாகவே இருப்பர்கள்.

இங்கு இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.

2அங்கத்தவர் வட்டாரம்!

2 அங்கத்தவர் வட்டாரமுள்ள சபைகளாக நாவிதன்வெளி இறக்காமம் தெஹியத்தக்கண்டிய ஆகிய 3 சபைகளும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றில் நாவிதன்வெளி இறக்காமம் ஆகிய சபைகளில் தலா 6வட்டாரங்கள் உள்ளன. இங்குள்ள இரட்டை அங்கத்தவர் வட்டாரமொன்றிருப்பதனால் அங்கு தலா 8 வேட்பாளர்கள் நிறுத்தப்படவேண்டும்.

தெஹியத்தக்கண்டிய சபையில் எள்ள வட்டாரங்களின் எண்ணிக்கை 21.ஆனால் அவற்றில் ஒன்றில் 2அங்கத்தவர் வட்டாரம் ஒன்றிருப்பதனால் மொத்தமாக அங்கு 23 வேட்பாளர்கள் களமிறக்கப்படவேண்டும்.

கல்முனை 12ஆம் வட்டாரம்!

 

இந்தப் பின்னணியில் கல்முனை 12 இரட்டை அங்கத்தவர் வட்டாரத்தை நோக்கினால் இதில் கல்முனை நகரப்பகுதி உள்ளடக்கப்படுகின்றது. இது தமிழ் முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இரு இனத்திற்கும் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும்.

ஆனால் முஸ்லிம் அரசியல் வாதிகள் திட்டமிட்டே கல்முனை நகரைக் கைப்பற்றுவதற்காக இவ்வாறு பிரிக்க வழிவகை செய்துள்ளனர். அதனால்தான் கல்முனைக் குடியின் ஒரு பகுதியையும் இஸ்லாமாபாத்துடன் சேர்த்துள்ளனர். தமிழர்களது வாக்குகள் நிச்சயமாகச் சிதறும் என அவர்களுக்குத் தெரியும். அவர்களும் எவ்வழியிலாவது தமிழர் வாக்குகளைச் சிதற வைப்பார்கள். அல்லது வாக்களிக்கும் வீதத்தைக் குறைப்பார்கள். இதன் மூலம் கல்முனையின் இரண்டு உறுப்பினர்களையும் தாங்களே பெற்று பஜார் பகுதி தங்களுடையதே என்பதை நிரூபிப்பார்கள். தமிழ்த் தலைமைகள் விஷயம் தெரியாமல் இப்பிரிப்புக்கு துணை போயுள்ளார்கள் எனப்து உண்மையென அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கட்சிகளின் தேர்தல் பரப்புரையிலும் இவ்விடயம் சமகாலத்தில் பேசுபொருளாக இருந்துவருகிறது.

எனவே கல்முனை மாநகர சபைத் தேர்தலில் தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி (குறிப்பாக 12 ம் வட்டாரம்) முடிவெடுத்து அனைவரும் ஒரு அணிக்கே வாக்களிக்க வேண்டும். அத்துடன் வாக்களிக்கும் வீதத்தையும் உயர் மட்டத்தில் பேண வேண்டும். தவறினால் கல்முனை பறிபோகும் அபாயம் உள்ளது என அங்குள்ள தமிழ்மக்களளின் பிரதிநிதிகள் தேர்தல் பரப்புரையில் கூவித்திரிகின்றனர்.

எது நடக்குமென்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். ஒன்று மட்டும் நிச்சயம் இவ்வட்டாரத்தில் தெரிவாகும் இருவரும் ஒரு இனத்தைச் சார்ந்தவராக மட்டுமே இருக்கப்போகிறார்கள். ஒரு இனம் பிரதிநிதியின்றி மாட்டப்போகின்றது.

எனவே இப்பல்லின அங்கத்தவர் தொகுதி முறைமை அர்த்தப்புஸ்டியாக நீதி கிடைக்கவேண்டுமாகவிருந்தால் வேட்புமனுவில் இரு இனங்களையும் கேர்ந்தவர்கள் கட்டாயம் உள்ளடக்கப்படவேண்டும் என்று சரத்து அல்லது தெரிவுமுறையில் முன்பிருந்த முறைபோல அடுத்தடுத்த கட்சிகளுக்கு ஆசனங்கள் வழங்கப்படவேண்டும் என்ற சரத்துசேர்க்கப்படவேண்டும். இன்றேல் இம்முறைமை வெறும் கண்துடைப்பாகவே இருக்கும் என்பதில் ஜயமில்லை.

வி.ரி.சகாதேவராஜா

By admin