தமிழ் நாடு : 400 ஆண்டுகளாக கோயிலையும் பள்ளிவாசலையும் இணைத்திருக்கும் நல்லிணக்கச் சுவர்! -…

தீண்டாமைச் சுவர்’… தமிழகத்தில் கிளப்பிய அலை சாதாரணமானதல்ல. இன்றைய நவீன காலத்திலும் இரு பிரிவினருக்கிடையே இருக்கும் பெரும் இடைவெளியை, பேதத்தைச் சுட்டிக்காட்டிய அவமானச் சின்னம் அது. இதே தமிழகத்தில்தான் துளிக்கூட இடைவெளிவிடாமல் ஓர் இந்துக் கோயிலையும் பள்ளிவாசலையும் இணைக்கிறது ஒரு சுவர். திருப்பத்தூரில், அமைந்திருக்கும் அந்தச் சுவரைச் சுட்டிக்காட்டி, “இது, எங்கள் மனதையும் மதங்களையும் இணைக்கும் நல்லிணக்கச் சுவர்’’ என்கிறார்கள் இந்துக்களும் முஸ்லிம்  மக்களும் பெருமை தொனிக்க..! இப்படியொரு சுவர் தமிழ்நாட்டில் வேறெங்கும் இருப்பதற்கு வாய்ப்பில்லை. திருப்பத்தூரில் இருப்பதுபோல் எல்லாப் பகுதிகளிலும் இருந்துவிட்டால், மதப்பிரச்னைக்கோ, சாதிப் பிரச்னைக்கோ வாய்ப்பில்லாமல் போகும். `வேற்றுமையிலும் ஒற்றுமை’ என்கிற இந்தியாவின் அடிப்படைக் கொள்கைக்கான உண்மையான அர்த்தம் புரியும்.

‘இந்தியா என் தாய் திருநாடு… வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறோம்…’ என்றெல்லாம் நாம் பாடப் புத்தகத்தில்தான் படித்திருக்கிறோம். ஆனால், நிஜத்தில் இந்தியா அப்படியில்லை என்பதற்குப் பல அடையாளங்கள் இருக்கின்றன.

பிச்சை முகம்மது

இந்த நிலையில்தான் இந்தச் சுவரை நாம் பார்த்தோம். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பெரிய கடைவீதியில் சிதம்பர விநாயகர் கோயிலும், பள்ளிவாசலும் ஒரே சுவரில் ஒட்டி அமைந்துள்ளன. “இது எப்படிச் சாத்தியமானது..?’’ திருப்பத்தூர் நகர் வியாபாரிகள் சங்கத்தின் தலைவராக இருக்கும் 80 வயது முதியவர் பிச்சை முகம்மதுவிடம் பேசினோம்…

“எனக்கு விவரம் தெரிஞ்சு 400 வருசத்துக்கும் மேலே ஒரே சுவரில் பள்ளிவாசலும் விநாயகர் கோயிலும் இணைஞ்சிருக்கு. இது வரைக்கும் இந்த ஊர்ல எங்களுக்குள்ள பிரச்னை வந்ததே கிடையாது. அந்த அளவுக்கு இந்துக்களும் முஸ்லிம்களும் மாமா – மச்சான், பங்காளி, அண்ணன் – தம்பினு ஒரே குடும்பம்போல உறவுமுறை சொல்லி, வாழ்ந்துக்கிட்டிருக்கோம். ரம்ஜான் காலத்துல கோயிலில் சாமிப் பாடல்கள் போடுவதைத் தவிர்த்துடுவாங்க. அதேபோல நாங்களும் மார்கழி மாசம், திருவிழாக் காலங்களில் பள்ளிவாசலில் ஒலிபெருக்கி ஒலிப்பதைத் தவிர்த்துடுவோம். `விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை’ என்பதுதான் இங்கே முக்கியம். தைப் பொங்கல் சமயத்துல காளியம்மன் கோயிலில் கிடா விருந்து நடக்கும். அதுல நாங்களும் கலந்துக்கிட்டு சாப்பிடுவோம்.

இந்த ஊரைப் பொறுத்தவரையில், சாதி, மதமெல்லாம் எங்களுக்குக் கிடையாது. இந்துக்கள் வீட்டு கல்யாணம் நடந்தா… நாங்களும் அவங்க குடும்பத்துல ஒருத்தர்போல் இருக்கறதால, அசைவ சாப்பாடு போடும்போது, எங்கள் முறைப்படி ஓதி, ஆடு அறுத்து சமையல் செய்வாங்க. இங்கே இருக்கும் கோயிலில் பூச்சொரிதல் விழா நடக்கும். அதுக்குத் தேவையான அனைத்துப் பூக்கூடைகளையும் சுமந்துக்கிட்டுப் போறதுல இஸ்லாமியர்களுக்கு முக்கியப் பங்கு இருக்கும். ஒருகட்டத்துல சிதம்பர விநாயகர் கோயில் குளமான சீதலிக்கரைக்குத் தண்ணீர்வரத்து இல்லாமல் போச்சு. உடனே இந்து, முஸ்லிம், வர்த்தக அமைப்புகள், மற்ற அமைப்புகள், மாணவர்கள்னு எல்லாரும் ஒண்ணு கூடி பெரிய கண்மாயிலிருந்து வரக்கூடிய கால்வாய்களைச் சரிசெய்து, இந்தக் குளத்துக்குத் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பினோம். பள்ளிவாசலும் கோயிலும் ஒரே சுவரில் இருக்கிறதால, இந்த வழியாகப் பிரேதம் கொண்டுபோனா, கொட்டு அடிக்க மாட்டாங்க. எல்லாரும் ஒருதாய்ப் பிள்ளைகள்தான். இதுல என்ன வேற்றுமை இருக்கு…” என்கிறார் பிச்சை முகம்மது அழுத்தமான குரலில்.

சேது.சிவராமன்

“ஆதிசங்கர பாண்டியர் மன்னர் காலத்தில் இந்தச் சிதம்பர விநாயகர் கோயில் கட்டப்பட்டது. குன்றக்குடி அடிகளார், பள்ளிவாசலுக்கு நிலம் வழங்கியிருக்கிறார். இன்னும் திருத்தளிநாதர் கோயில் தேர் பராமரிப்பு போன்றவற்றைச் செய்து வந்த குடும்பம் தேக்காபுலி வகையறா. இவர்களுக்கு இந்தக் கோயில் திருவிழாவின்போது மரியாதை செய்யும் வழக்கம் இன்றைக்கும் இருக்கிறது. விநாயகர் சதுர்த்தி, மார்கழி மாதங்களில் சாமிப்பாட்டு போடும்போது பள்ளிவாசலில் ஒலிபெருக்கியை அணைத்துவிடுவார்கள். இந்தத் திருவிழாக்களின்போது இஸ்லாமியர்கள் வாழ்த்திப் பேசுவதும் இங்கேதான் நடக்கிறது. இங்குள்ள கான்சாகிப் சமாதிக்கு, இந்துக்கள்தான் சந்தனக்கூடை சுமந்து சென்று, சந்தனம் பூசுவார்கள். ராஜகாளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவின்போது  முஸ்லிம்கள் பூக்கூடை எடுத்து வருகிறார்கள். இந்தச் சுவர் எங்கள் ஊரில் மத நல்லிணக்கம் இருப்பதற்கான அடையாளம். இங்கு இந்து முஸ்லிம் வேற்றுமை கிடையாது. எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறோம். இதே நிலை எதிர்காலத்திலும் தொடர வேண்டும் என்பதுதான் எங்கள் எல்லோருடைய ஆசையும்” என்கிறார் சேது.சிவராமன்.