கோடம்பாக்கம் வலம் : ” இதுதான் சமூக வீழ்ச்சி”  இயக்குநர் மோகன் ராஜா நேர்காணல்…..

ம்பர் ஒன் இடத்துக்கான வியாபாரப்போட்டியில் நுகர்வோரைப் பலியாடுகள் ஆக்கும் தவறான நிறுவனங்களைத் துணிவுடன் விமர்சனம் செய்தது மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘வேலைக்காரன்’ திரைப்படம். தற்போது நடிகர் விஜயைச் சந்தித்துத் திரும்பியிருக்கும் மோகன் ராஜாவைச் சந்தித்து உரையாடியதிலிருந்து….

நாயகனைவிட வில்லனை வலிமையானவனாகப் படைக்க வேண்டும் என்ற உந்துதல் உங்களிடம் அதிகமாக இருக்கிறது. தமிழ் சினிமா உருவாக்கி வைத்திருக்கும் நடைமுறையை உடைக்க விரும்புகிறீர்களா?

சினிமா என்பதே அதன் த்ரில்லுக்காகவே ரசிக்கப்பட்டு வரும் கலை. ஹீரோவை ஜெயிக்கவைப்பதே ஹீரோயிசம் என்பது தவறாகப் பதிவுசெய்யப்பட்டுவிட்ட ஒரு கருத்து. கதாநாயகன் ஜெயித்துக்கொண்டே இருப்பது பார்வையாளர்கள் மத்தியில் ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்திவிடும். கதைக்கான ஹீரோயிசம் மனத்தடை இல்லாமல் ரசிக்கப்பட்டுவிடும். கதையை மீறிய ஹீரோயிசம் எப்போதுமே எடுபடாது. ‘தனி ஒருவன்’ படத்துக்கு புராணக் கதாபாத்திரமான இரணியன்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். வில்லனை அழிப்பதற்குக் கடவுளே அவதாரம் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

எப்போதெல்லாம் அநியாயம் தலைதூக்குகிறதோ அப்போதெல்லாம் அவதாரம் எடுக்கிறார் என்பது நம்பிக்கை. அநியாயத்தின் கொடூரத்தைக் காட்டும்போதுதான் அங்கே அவதாரத்துக்கான அவசியம் வருகிறது. ஹீரோவை ஒரு அவதாரமாக நிறுவ வேண்டுமென்றால் வில்லனை ஹீரோவைவிடச் சக்தி வாய்ந்தவனாகக் காட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது இல்லையா? ஆங்கிலப் படங்களை எடுத்துக்கொள்ளுங்கள், ராபர்ட்டி நீரோ ஒரு படத்தில் ஹீரோவாக நடித்தால் இன்னொரு படத்தில் வில்லனாக நடிப்பார். அல்பாச்சினோ நீரோவின் படத்தில் ஹீரோவாக நடித்தால் அவரது அடுத்த படத்தில் இவர் வில்லனாக நடிப்பார்.

மல்டி ஸ்டாரர் என்பது உருவான காலத்திலிருந்தே கதாபாத்திரங்களைப் பகிர்ந்துகொள்ளும் இந்த நடைமுறை ஹாலிவுட்டில் இருக்கிறது. எல்லாக் காட்சிகளிலும் ஹீரோ இருக்க வேண்டும் என்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஹீரோயிசம் இன்னும் நம்மிடம் இருக்கவே செய்கிறது. சவால் சரியாக அமையும்போதுதான் ஹீரோவின் சாதனை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக மாறும். கதாபாத்திர உருவாக்கத்தில் அடிப்படையான இந்த அம்சத்தைத்தான் நான் பின்பற்றிவருகிறேன்.

மிகையும் வீக்கமும்தான் ஹீரோயிசம் என்று இங்கிருக்கும் பல முன்னணிக் கதாநாயகர்களே நம்பிக்கொண்டிருக்கிறார்களோ?

இந்த இடத்தில்தான் என் தம்பி எனது பலமாக அமைந்துவிட்டான். ஒரு இயக்குநரும் நடிகனும் அண்ணன் தம்பியாக இருக்கும் அதிர்ஷ்டத்தால் கதாநாயகனை ஒரு கதாபாத்திரமாக என்னால் உருவாக்க முடிந்தது. நட்சத்திரமாக இருக்கும் தம்பியை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற முழுச் சுதந்திரம் அண்ணனாக எனக்கு இருக்கிறது. தம்பியும் என்னை நம்புவதன் மூலம்தான் இது சாத்தியமாகியிருக்கிறது. என் தம்பி நடித்த படங்களிலேயே மிகச்சிறந்த ஒன்றை நான் இயக்கினேன் என்ற பெயரை அவனுக்குப் பெற்றுத்தர என்னால் முடிந்ததென்றால் அதற்கு அவன் முன்னணிக் கதாநாயகனாக இருப்பதும் ஒரு முக்கியக் காரணம்.

‘தனி ஒருவ’னில் ரவி ஏற்ற மித்ரன் கதாபாத்திரத்தின் தேடல்தான் அரவிந்தசாமி ஏற்ற சித்தார்த் அபிமன்யூ கதாபாத்திரம். தமிழ் சினிமாவில் தனது எதிரியைத் தேடிய முதல் கதாநாயகன் மித்ரன். தன்னைவிட எல்லாவிதத்திலும் பலம் வாய்ந்தவனாக இருக்கும் சித்தார்த் அபிமன்யூ கதாபாத்திரத்தால் கவரப்படுபவனாக நாயகன் மித்ரன் இருக்கிறான். ரவியைப் போலவே எனது நாயகர்களாக அமைந்த விஜய் என்றாலும் சிவகார்த்திகேயன் என்றாலும் என்னிடம் சாதாரணமாக இயல்பாக நண்பர்களாகப் பழகினார்கள்.

ரவி தன்னை எப்படி என்னிடம் எப்படி ஒப்படைத்துவிட்டு அமைதியாக இருப்பானோ அப்படித்தான் அவர்களும் என்னை மதித்தார்கள். இது என் அதிர்ஷ்டம்.

‘வேலைக்காரன்’ படத்தில் கதாநாயகன் ஒரு சாமானிய இளைஞர். முக்கிய சவாலுக்கு விடை காண முயலும் அவரது போராட்டம் ஒரு அறிமுக நாயகனுக்கு எடுபட்டிருக்குமா?

நிச்சயம் எடுபட்டிருக்கும். சிவகார்த்திகேயனின் சில தனித்திறமைகளை நான் திரைக்கதைக்குப் பயன்படுத்திக்கொண்டேன். ஆனால், கதாநாயனுக்காகச் செய்யப்பட்டவை என்று பார்வையாளர்கள் உணர்ந்தால் ஒரு திரைக்கதை எழுத்தாளராக நான் தோற்றுவிட்டேன் என்று அர்த்தம். திரைக்கதைக்குப் பொருந்தாத எதுவொன்றையும் துறுத்தலாகத் திணிக்கும் பழக்கம் என்னிடம் கிடையாது. சிவகார்த்திகேயன் ஏற்ற அறிவு கதாபாத்திரம் நமக்கு மத்தியில் வாழ்பவன்தான்.

ஒரு சாமானியன் ‘நான் பத்துபேரில் ஒருத்தனாக இருக்க மாட்டேன்’ என்று முடிவுசெய்துவிட்டால் அது அவ்வளவு ஈஸி கிடையாது, அவன் தனித்து நின்று போராடி ஜெயிக்க முடியாது. நிறைய அவமானங்களைச் சூழ்ச்சிகளை, இழப்புகளைத் தாண்டித்தான் அவன் சாதிக்க முடியும் என்பதைச் சொன்ன கதாபாத்திரம். சிவகார்த்திகேயன் தனது நட்சத்திர அந்தஸ்துக்கு எதிர்நிலையில் நின்று செய்த கதாபாத்திரம். அவருக்கு இது அறிமுகப்படமாக இருந்திருந்தாலும் நிச்சயம் எடுபட்டிருக்கும்.

உணவுத் தயாரிப்புத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் நினைத்தால் விஷமில்லாத பொருட்களைத் தயாரிக்கலாம் என்ற தீர்வை ‘வேலைக்காரன்’ படத்தில் கூறியிருக்கிறீர்கள். முதலாளிகளை மீறி தொழிலாளர் வர்க்கம் இதைச் செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா?

மனிதத் தேவைகளைப் பூர்த்திசெய்ய உருவானதுதான் வேலை. காலப்போக்கில் மனிதனுக்கான தேவையைச் செயற்கையாக அதிகரிக்கச் செய்வதற்கான ஒன்றாக வேலையின் அடிப்படைத்தன்மை மாறி நிற்கிறது. இது காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றம்தானே என்று நாம் அலட்சியப்படுத்தியதால் இன்று நம் உணவையே இந்த மாற்றம் பாதித்துவிட்டது. இதைவிடப் பெரிய சமூக வீழ்ச்சி என்று அதுவும் இருக்க முடியாது. நாம் என்ன உண்ண வேண்டும் என்பதை நிறுவனங்கள் முடிவுசெய்யக் கூடாது என்பதைக் காட்டத்தான் நான் இந்தத் தலைப்பை எடுத்துக்கொண்டேன்.

நான் முன்வைத்த தீர்வு என்று வருகிறபோது, தொழிலாளியின் விசுவாசம் என்ற மந்திரம்தான் முதலாளியுடன் பிணைத்து வைக்கிறது, அந்த விசுவாசத்தைத் தொழிலாளி ஒழுங்காகக் கையாண்டால் சில அடிப்படைத் தவறுகளை அவனே களைந்துவிட முடியும் என்பதைச் சுட்டிக்காட்டினேன். டிவிசன் ஆஃப் லேபர் என்ற பெயரில் ‘நான் மூடிதானே செய்றேன்’, ‘நான் பாட்டில்தான் செய்கிறேன்’, ‘நான் லேபிள்தானே ஒட்டுறேன்’ என்று முதலாளியால் பிரித்துப் பிரித்து வேலை வாங்கப்பட்டாலும் ஊதியம் தந்துவிட்டு நம்மை வைத்துத் தவறு செய்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டுவிட்டால் அதன் பிறகு எந்தத் தொழிலாளியும் குற்ற உணர்ச்சியுடன் தவறுகளைத் தொடர்ந்து செய்ய மாட்டான். செய்ய மனசாட்சி இடம்கொடுக்காது என்பதையே சுட்டிக்காட்டினேன்.

வணிகச் சமரசங்கள் இல்லாமல், ஒரு முழுமையான சமூக அக்கறை கொண்ட படத்தை இயக்குவதில் உங்களுக்குத் தயக்கம் இருக்கிறதா?

நிச்சயமாக இல்லை. அதை நோக்கிய பயணத்தில் ‘தனி ஒருவன்’ ஒரு படிக்கட்டு என்றால் அது கொடுத்த தைரியத்தில்தான் ‘வேலைக்காரன்’ படத்தை இரண்டாவது படியாகப் பார்க்கிறேன். எனது அடுத்தடுத்த முயற்சிகள் அதை நோக்கியதாகவே இருக்கும். சினிமா வணிக அம்சங்கள் என்பதில் இங்கே பல தவறான புரிதல்கள் இருக்கின்றன. இதைத்தான் ஆடியன்ஸ் கேட்கிறார்கள் என்று நாம் பலகாலமாக வேறு ஊருக்குப் போய்விட்டோம். நம் சினிமா நிச்சயம் மாறும் உண்மையிடம் திரும்பிவரும்.
ஜெயம் ரவி, விஜய்க்குப் பிறகு தற்போது சிவகார்த்திகேயனை இயக்கியிருக்கிறீர்கள். அஜித், விஜய்சேதுபதி, மாதவன் மாதிரியான கதாநாயகர்கள் உங்கள் கூடையில் வந்து விழும்வரை காத்திருப்பதை விரும்புகிறீர்களா?

எனக்கும் காத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. இவர்கள் அனைவருமே சவாலான கதைகளில் வேலை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள். இவர்கள் அனைவருக்கும் என்னிடம் கதைகள் தயாராக இருக்கின்றன. அவர்களுடன் இணைந்து பணிபுரியும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை என்பது மட்டும் நிச்சயம்.

நடிகராக ஒரு படத்தில் தோன்றினீர்கள், தொடர்வதில் விருப்பம் இல்லையா?

ஆசியாவிலேயே ஒன்றாகப் பிறந்த குழந்தைகளுடன் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்காகத்தான் ‘என்ன சத்தம் இந்த நேரம்’ படத்தில் நடித்தேன். இயக்குநர்களுக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை இல்லாமல் இருக்காது. ஆனால், எனக்கு அந்த ஆசை இயக்கத்தைவிட மேலோங்கியது இல்லை. ஆனால், சவாலான கதாபாத்திரம் அமைந்தால் நிச்சயமாக நடிப்பேன்.

சமீபத்தில் விஜயைச் சந்தித்துத்துவிட்டு வந்தது பற்றி?

விஜய் எனது ஆத்மார்த்த நண்பர். ஒரு இடைவெளிக்குப் பிறகு அவரைச் சந்தித்தபோது நிறைய பேசினோம். அதில் நாங்கள் அடுத்து இணைந்து பணியாற்றுவது பற்றிய பேச்சும் இருந்தது. மறக்க முடியாத மாலைநேரச் சந்திப்பு அது.

தனி ஒருவன் 2 ?

கண்டிப்பாக இருக்கிறது. தனி ஒருவன் கதையின் இரண்டாம் பாகத்துக்கான கதையை ஏற்கெனவே தீர்மானித்துவிட்டேன். அது அடுத்த படமா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.