22 இந்தியர்களுடன் சென்ற வர்த்தக கப்பல் மேற்கு ஆப்பிரிக்காவில் மாயம்; கடத்தலா என சந்தேகம்?

22 இந்தியர்களுடன் சென்ற வர்த்தக கப்பல் மேற்கு ஆப்பிரிக்காவில் மாயம் ஆனது. இது கடற்கொள்ளையர்களின் கடத்தலாக இருக்க கூடும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

22 இந்தியர்களுடன் பனாமா நாட்டு கொடியுடன் கேசோலின் எண்ணெய் ஏற்றி கொண்டு சென்ற வர்த்தக கப்பல் ஒன்று மேற்கு ஆப்பிரிக்காவில் பெனின் கடலோர பகுதியில் கடந்த வியாழ கிழமை மாயம் ஆனது.

இந்த கப்பலில் கேரளாவை சேர்ந்த 2 நபர்களும் பயணித்துள்ளனர்.  கப்பலின் உரிமையாளர்களான எம்.டி. மெரீன் எக்ஸ்பிரெஸ் நிறுவனம், மும்பை கப்பல் இயக்குநரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு காணாமல் போன கப்பலை தேடுவதற்கு உதவும்படி கேட்டு கொண்டுள்ளனர்.

கப்பலை தேடும் பணியில் நைஜீரியா நாட்டு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.  இந்த நிலையில் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.  இதனை அடுத்து நைஜீரிய அதிகாரிகள் அனைத்து படகு ஓட்டிகளையும், காணாமல் போன கப்பலை பற்றி தகவல் தெரிவிக்கும்படி கூறியுள்ளனர்.

கடந்த 2016ம் ஆண்டில் 191 கப்பல் கடத்தல் சம்பவங்களும் மற்றும் 2017ம் ஆண்டில் 180 கப்பல் கடத்தல் சம்பவங்களும் நடந்துள்ளன.