சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் கிடைக்கும் வரை, கல்முனை மாநகர சபையின் மேயர் பதவி அந்த மண்ணுக்கே வழங்கப்படும் என்பதை சாய்ந்தமருது மண்ணில் வைத்து பிரகடனம் செய்கிறேன்.

அதுவரைக்கும் இந்த மாநகரை “கல்முனை – சாய்ந்தமருது மாநகரம்” என பெயரிடுவோம் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது பெளசி மைதானத்தில் இன்று நடைபெற்‌ற “மாண்புறும் சாய்ந்தமருது” எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த தேர்தலில் எங்களுக்கு சாய்ந்தமருதில் வழங்கப்பட்ட வாக்குகள் இந்த முறையும் கிடைக்கும். இந்தமுறை மேயர் பதவியை தந்துதான் சாய்ந்தமருது மண்ணை கட்சி அலங்கரிக்கும்.

சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை வழங்கப்படும் வரை மேயர் பதவி தொடரும். அதை யாராலும் தடுக்க முடியாது.

கல்முனையிலுள்ள யாரும் அதை எதிர்த்து பேசமாட்டார்கள். அதுவரை இந்த மாநகரம் கல்முனை – சாய்ந்தமருது மாநகரம் என பெயர் மாற்றப்படும்.

இந்த மாநகரத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்த வருடத்தில் 2000 மில்லியன் ரூபாவை செலவிடுவதற்கு நான் தயாராகிக்கொண்டிருக்கிறேன்.

அதில் 200 மில்லியன் ரூபாவை எடுத்து, சாய்ந்தமருது பிரதேச செயலக கட்டிடத்தை நூலக வளாகத்தில் அமைக்கவுள்ளேன். இந்த வேலைத்திட்டங்களை இந்த வருடமே நாங்கள் ஆரம்பிக்கவுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

நன்றி – தமிழ்வின்

 

By admin