அவுஸ்திரேலியா  : 2020-ம் ஆண்டுக்கான டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலியா நடத்துகிறது . இறுதி ஆட்டங்கள் மெல்போர்னில்..

2020-ம் ஆண்டுக்கான டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலியா நடத்துகிறது. முதன்முறையாக மகளிர் மற்றும் ஆடவருக்கான டி 20 உலகக் கோப்பை ஒரே நாட்டில் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் போட்டி நடைபெறும் இடங்கள் நேற்று அறிவிக்கப்பட்டது. அடலேய்ட், பிரிஸ்பன், கான்பெரா, ஜீலாங், ஹோபர்ட், மெல்போர்ன் , பேர்த் , சிட்னி ஆகிய 8 நகரங்கள் போட்டியை நடத்துவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மகளிருக்கான உலகக் கோப்பை டி 20 தொடர் 2020-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி நடைபெறும் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினமாகும். இதன் மூலம் பார்வையாளர்கள் வருகையில் சாதனை படைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆடவருக்கான தொடர் உலகக் கோப்பை டி 20 தொடர் அக்டோபர் மாதம் 18-ம் தேதி முதல் நவம்பர் 15-ம் தேதி வரை அதே ஆண்டில் நடைபெறுகிறது. இரு தொடர்களின் இறுதி ஆட்டங்களும் மெல்பர்னில் நடத்தப்பட உள்ளது. மகளிர் பிரிவில் 10 அணிகளும், ஆடவர் பிரிவில் 16 அணிகளும் கலந்து கொண்டு விளையாட உள்ளன.