வடகொரியா ‘ஒழுக்கம் கெட்ட நாடு’, சீனா, ரஷ்யா போட்டி நாடுகள்: அமெரிக்கா அதிபர் டிரம்ப்

அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகியவற்றின் கூட்டுக் கூட்டத்தில் ஆற்றிய வருடாந்திர ஸ்டேட் ஆஃப் தி யூனியன் (State of the Union) உரையில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதாக அதிபர் டொனல்டு டிரம்ப் கூறியுள்ளார்.

தனது நிர்வாகம் ‘வலிய, பாதுகாப்பான, பெருமைமிகு அமெரிக்காவை உருவாக்கி வருகிறது,’ என்றும் ‘அமெரிக்கக் கனவை வாழ்வதற்கான நேரம் வந்துவிட்டது’ என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார்.

உரிய ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்க மறுத்தது, அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேற அனுமதி பெற்றவர்களின் குடும்பத்தினரில் அவர்களது வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகள் அல்லாதோருக்கான கட்டுப்பாடுகள், மெக்சிகோ எல்லைச் சுவருக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் எதிர்கட்சியினருடன் மோதல் போக்கில் இருந்த டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளது ஒரு சமரச முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

எனினும் அவரது உரையின்போது, அமெரிக்காவில் தங்கி பணியாற்ற அனுமதி பெற்றுள்ளவர்கள் தங்கள் குடும்பத்தினரை அமெரிக்காவுக்கு அழைத்து வர கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்துப் பேசியபோது சில மூத்த ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புக்குரல் எழுப்பினர்.

பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது மூட உத்தரவிட்ட, கியூபாவில் உள்ள, குவாண்டனாமோ பே சிறைச்சாலையையும் தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

டிரம்ப் பதவியேற்றபின் அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வந்தாலும், அவரவுக்கான ஆதரவு சரிந்து வருகிறது. தற்போது அவருக்கான பொது மக்கள் ஆதரவு 38%ஆக உள்ளது. இது அமெரிக்க வரலாற்றிலேயே அதிபராகப் பதவியேற்ற முதல் ஆண்டிலேயே ஒருவர் பெற்ற மிகவும் குறைந்தபட்ச விகிதமாகும்.

ஒரு மணிநேரம், 20 நிமிடம் அவர் நாடாளுமன்றத்தில் பேசியதை சுமார் நான்கு கோடி அமெரிக்கர்கள் தொலைக்காட்சி மூலம் பார்த்தனர் என்று கணிக்கப்பட்டுள்ளது.

என்னெவெல்லாம் பேசினார் டிரம்ப்?

சாலைகள் உள்ளிட்ட உள்கட்டுமானங்களை வலுப்படுத்துவது குறித்து பேசிய டிரம்ப், அவை குறித்து விரிவாக எதுவும் தெரிவிக்கவில்லை.

ஆவணங்களின்றி அமெரிக்காவில் குடியேறியுள்ள வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்க மெக்சிகோ எல்லைச் சுவருக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவற்றுக்கு ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று டிரம்ப் கூறினார்.

தமது மேற்பார்வையின்கீழ் 24 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.

வெளிநாட்டுக் கொள்கை குறித்து என்ன பேசினார்?

அடிக்கடி அணு ஆயுத சோதனை மேற்கொள்ளும் வடகொரியாவை ’ஒழுக்கம் கெட்ட நாடு’ என்று விமர்சனம் செய்த டிரம்ப், அந்நாடு தொடர்ச்சியாக அணு ஆயுத சோதனை செய்வது அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று கூறினார்.

வடகொரியாவிலிருந்து தப்பி வந்தவரான ஜி சியோங்-ஹோ எனும் மாற்றுத் திறனாளி நபருக்கு டிரம்ப் தனது மரியாதையைத் தெரிவித்தார். அப்போது ஜி சியோங்-ஹோ பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்திருந்தார்.

சிரியா மாற்று இராக் நாடுகளில் ஐ.எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் மீட்கப்பட்டுவிட்டதாகவும், அவர்கள் முழுமையாகத் தோற்கடிக்கப்படும்வரை தங்கள் சண்டை தொடரும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

டிரம்ப்க்கு முன்பு பதவியில் இருந்த ஒபாமா மற்றும் ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஆகியோர் இந்த உரையை ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் வெற்றியைப் பற்றிப் பேச பயன்படுத்தினர். ஆனால், அது அமெரிக்கா நீண்டகாலம் ஈடுபட்ட போர் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

தனது உரையில் சீனாவை தங்கள் போட்டி நாடு என்று குறிப்பிடும்போது, ஒரே ஒரு முறை மட்டுமே ரஷ்யாவை அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

எனினும், 2016ஆம் ஆண்டின் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்து டிரம்ப் எதுவும் கூறவில்லை.  – BBC NEWS