சவுதி அரேபியா பட்டத்து இளவரசரின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை சவுதியில் ரூ.13 .75 லட்சம் கோடி வசூல்….

வளைகுடா நாடான சவுதி அரேபியாவில், பட்டத்து இளவரசர், ஊழலுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளால், கடந்த மூன்று மாதங்களில், 13 .75 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக, முகமது பின் சல்மான், 32, கடந்தாண்டு ஜூனில் பொறுப்பேற்றார். அதன்பின், பல்வேறு பொருளாதார, சமூக சீர்திருத்த நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டார். அதன்படி, ஊழலில் ஈடுபட்டதாக, அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர்கள், முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள், தொழிலதிபர்கள், கடந்தாண்டு நவம்பரில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 13 .75 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் அட்டர்னி ஜெனரல், ஷோக் சவுத் அல் மோஜப் வெளியிட்டுள்ள செய்தி:ஊழலுக்கு எதிராக, பட்டத்து இளவரசர் எடுத்த நடவடிக்கையின்படி, கடந்தாண்டு நவம்பரில் பலர் கைது செய்யப்பட்டனர். இதுவரை, 381 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டோர், ரிட்ஸ்கார்ல்டன் ஓட்டலில் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.இதில், நாட்டின் மிகப் பெரிய பணக்காரரும், இளவரசருமான அல்வாலீத் பின் தலால், சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார். சமரசத்துக்கு முன்வந்த, 90 பேர் விடுதலை செய்யப்பட்டனர். தற்போது யாரும் சிறையில் இல்லை, அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் செய்யப்பட்ட சமரசத்தின்படி, இவர்களிடமிருந்து, 13 .75 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது; இது நிலம், கட்டடங்கள், வணிக நிறுவனங்கள், ரொக்கம் மற்றும் பொருள் ஆகியவை அடங்கும். இவ்வாறு செய்தியில் கூறப்பட்டுள்ளது.