அமெரிக்க உளவுப் பிரிவு(சிஐஏ) தகவல் : இன்னும் சில மாதங்களில் அணு ஆயுதம் மூலம் அமெரிக்காவை வடகொரியா ராணுவம் தாக்கலாம் ….!!

அணு ஆயுதம் மூலம் அமெரிக்கா மீது வட கொரியா இன்னும் சில மாதங்களில் தாக்குதல் நடத்தக்கூடும்’’ என அமெரிக்க உளவுப் பிரிவு(சிஐஏ) கவலைத் தெரிவித்துள்ளது. வடகொரியா கடந்தாண்டில் மொத்தம் 20 தொலைதூர ஏவுகணைகளைச் சோதனைச் செய்துள்ளது.
இது மேற்கத்திய நாடுகளில் கவலையையும், பதட்டத்தையும் அதிகரித்துள்ளது.  கடந்த புத்தாண்டு தினத்தில் உரையாற்றிய வடகொரிய அதிபர் கிம், அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் அதிகளவில் தயாரிக்க வேண்டும் என தனது தளபதிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அணு ஆயுத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவில்லை என்றால், அமெரிக்காவின் கோபத்தை சந்திக்க நேரிடும் என அதிபர் டிரம்ப் டிவிட்டர் மூலம் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் அமெரிக்க உளவு பிரிவுத் தலைவர் மைக் பாம்பியோஅளித்த பேட்டி: அமெரிக்க அதிபருக்கு உளவுத் தகவல்களை வழங்குவதுதான் எங்கள் வேலை. வடகொரியா அச்சுறுத்தலை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்காமல் ராணுவ நடவடிக்கை எடுத்தால் எவ்விதமான பிரச்னைகள் ஏற்படும் என்பதை தெரிவித்துள்ளோம். வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுத்தால், கொரிய தீபகற்ப பகுதியில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் மனித இழப்புகள் மிக மோசமான அளவில் இருக்கும்.

அதிபர் கிம்மை பதவியில் இருந்து அகற்றினாலோ அல்லது அமெரிக்கா மீது அணுஆயுதம் ஏவும் திறனை கட்டுபடுத்தினாலோ என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். இன்னும் சில மாதங்களில் அமெரிக்கா மீது அணு ஆயுதம் மூலம் வடகொரியா தாக்குதல் நடத்தலாம். இது கவலை அளிக்கிறது. வடகொரிய அதிபர் பற்றி கடுமையான வார்த்தைகளை அதிபர் டிரம்ப் உபயோகிக்கிறார். ஆனால் அது வடகொரியாவின் காதில் விழவில்லை.  இந்த வார்த்தைகள் மூலம் அமெரிக்கா மிகவும் கோபமாக உள்ளது என்பதை கிம் ஜாங் உன் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.