ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆழ்பவர்கள் சம்பந்தன், சுமந்திரன்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆழ்பவர்கள், தீர்மானிப்பவர்கள் நாங்கள் அல்ல. இதனை தீர்மானிப்பவர்கள் சம்பந்தனும், சுமந்திரனும் தான் என முன்னாள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கே.எம்.ஜவாத் தெரிவித்தார்.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய முன்னனியில்; போட்டியிடும் செம்மண்ணோடை வேட்பாளர் எம்.எச்.எம்.ஹக்கீமினை ஆதரித்து செம்மண்ணோடையில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-

தனக்குள் அனைத்து அதிகாரங்களையும் வைத்துக் கொண்டு மொத்த வியாபாரியாக மாறியுள்ளார் என்று முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மற்றும் சிங்கள அரசியல் தலைவர்களும் கூறி வருகின்றனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை பணம் இருந்தால் வாங்கி விட முடியும் என்று சிங்கள அரசியல் தலைவர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் பதவி சிரேஷ்ட விரிவுரையாளர் மன்சூர் காதரிடம் வழங்கப்பட்டமையால் அவர் தனது விரிவுரையாளர் பதவியை இராஜினாமா செய்தார், ஆனால் வருடம் முடிவடைவதற்குள் அந்த பதவி பறிக்கப்பட்டு நிசாம் காரியப்பருக்கு வழங்கப்பட்டது.

இந்தியாவின் உளவுப்படையின் நெறியாளர் சுப்பிரமணிய சுவாமி சொன்னதற்கிணங்க நிசாம் காரியப்பருக்கு செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் கூறியதற்கிணங்கவும் வழங்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் மன்சூர் காதர் நண்பரிடம் தெரிவித்திருந்தார் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இந்திய உளவுப்படைக்கு பலியாகிவிட்டது என்று கூறினார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆழ்பவர்கள், தீர்மானிப்பவர்கள் நாங்கள் அல்ல. இதனை தீர்மானிப்பவர்கள் சம்பந்தனும், சுமந்திரனும் தான்.

வடக்கு கிழக்கு இணையக் கூடாது என்று முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மற்றும் சிங்கள அரசியல் தலைவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமால் மாத்திரம் இதுவரை வடகிழக்கு தொடர்பாக எந்த வார்த்தைகளையும் வெளியிட முடியாமல் இருக்கின்றார் என்றார்

.Universal Tamil news