விஞ்ஞானிகள் திணறல் தேனீக்கள் சுருள் வடிவிலான கூடுகளை ஏன் கட்டுகின்றன?

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ‘டெட்ராகோனுலா கார்போனேரியா’ (Tetragonula carbon aria)வகை தேனீக்கள் ஏன் தங்கள் கூடுகளை சுருள் வடிவில் கட்டுகின்றன என்பது விடைதெரியாத கேள்வியாக உள்ளது. இந்த மண்ணில் இருந்து தேனீக்கள் மறைந்து விட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது என்று விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியுள்ள கருத்தை புறம் தள்ள முடியாது. அந்தளவுக்கு தாவரங்களின் மகரந்த சேர்க்கைக்கு உதவும் இதன் பணி மிக முக்கியமானது. உலகத்தில் 20 ஆயிரம் வகையான தேனீக்கள் உள்ளன. அவற்றில் கொடுக்கு இல்லாத தேனீக்கள் மட்டும் 500 வகைகள் உள்ளன.

இவற்றில் ஆஸ்திரேலியாவின் ‘டெட்ராகோனுலா கார்போனேரியா’ (Tetragonula carbon aria) வகை தேனீக்கள் தங்கள் கூடுகளை சுருள் வடிவில் கட்டுகின்றன. இதற்கான காரணம் குறித்து பல்வேறு வகையான ஆராய்ச்சிகள் நடந்தபடி உள்ளது. கொடுக்கில்லா தேனீக்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பூச்சியியல் வல்லுநர் டிம் ஹியர்டு தன்னுடைய ஆராய்ச்சியின்போது, இந்தக் கூடுகளை புகைப்படம் எடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் கொடுக்கில்லாத தேனீக்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அவர், இது குறித்து தான் எழுதிய ‘ஆஸ்திரேலியாவின் பூர்வீக தேனீக்கள்’ என்ற புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது: முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட சுருள் வடிவிலான இத்தகைய கூடுகள் 10 முதல் 20 வரையிலான அடுக்குகளை கொண்டிருக்கும். ஒவ்வொரு அடுக்கும் ஒரு வட்டப்பாதையை கொண்டிருக்கும். இதில் சிறிய அளவிலான அறைகள் உள்ளன. முட்டையில் இருந்து உருமாறி ஒரு தேனீ வளர்வது இந்த அறைகளில் நிகழும். இதற்கு 50 நாட்களாகும். இந்த அறைகளை வேலைக்கார தேனீக்கள் உருவாக்குகின்றன. இதற்கென தன்னுடைய வயிற்றில் இருரந்து சுரக்கும் மெழுகு போன்ற திரவம் மற்றும் செடிகளிலிருந்து பெறப்படும் பிசின் இவற்றை சேர்த்து, வலிமையான இந்த அறைகளை இவை உருவாக்குகின்றன.

பிறக்கும் தேனீக்களுக்காக தங்கள் கூடுகளில், இரண்டு முதல் மூன்று மடங்கு வரை உணவை இவை சேகரிக்கும். ராணி தேனீ இந்த அறைகளில் முட்டையிட்டதும் அவை உடனடியாக மூடப்படும். இந்த அறைகளில் பிறக்கும் தேனீக்கள் பாதுகாப்பாக வளரும். இந்த பணி செவ்வனே நடைபெற்ற பின்பு, வேலைக்கார தேனீக்கள் அடுத்த அறைகளை உருவாக்க சென்று விடும். இந்த பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேயிருக்கும். கொடுக்கில்லாத காரணத்தால், இவற்றின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கும் என்று எண்ண முடியாது. இவற்றின் கூடுகளில் நுழையும்  வண்டுகள் போன்றவற்றை ஒருவித பிசினைக் கொண்டு உயிரோடு சமாதியாக்கி விடும். ஆனால், இந்த தேனீக்கள் தன்னுடைய கூட்டை ஏன் சுருள் வடிவில் வடிவமைக்கின்றன என்ற ேகள்விக்கு விடை கிடைக்கவில்லை. இதற்கான விடை வேலைக்கார தேனீக்களுக்கு மட்டுமே தெரியும். இந்த மர்மம் மட்டும் விடை காண முடியாமல் உள்ளது. ஆனால், கிடைக்கும் இடத்தை முறையாக பயன்படுத்துவது மற்றும் அடுக்குகளுக்கு இடையில் சீரான காற்று வருவதற்கு இத்தகைய வடிவத்தை தேனீக்கள் உருவாக்கக்கூடும் என  கருதப்படுகிறது.