அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்வைத்த திட்டத்துக்கு சிரியா அரசு மறுப்பு

வியன்னாவில் நடைபெற்று வரும் சிரியா பிரச்சினை பற்றிய புதிய சுற்று பேச்சுவார்த்தையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்வைத்த சிரியா மோதல் பற்றிய தீர்வு திட்டத்தைச் சிரியா அரசு உறுதியாக எதிர்க்கின்றது என்று இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் சிரியா அரசுப் பிரதிநிதிக்குழுத் தலைவரும், ஐ.நாவுக்கான சிரியாவின் நிரந்தரப் பிரதிநிதியுமான ஜஃபாரி 26ஆம் நாள் தெரிவித்தார்.

முன்னதாக, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், செளதி அரேபியா மற்றும் ஜோர்டான் ஆகிய ஐந்து நாடுகள் சிரியா பிரச்சினைக்கான ஐ.நா தலைமைச் செயலாளரின் சிறப்புத் தூதர் தே மிஸ்துராவிடம் ஆவணம் ஒன்றை ஒப்படைத்தன. நடப்புப் பேச்சுர்த்தையில், சிரியாவின் அரசியல் அமைப்பு முறை சீர்திருத்தத்தை உடனடியாக விவாதித்து, வெளிப்படையான சுதந்திர பொதுத் தேர்தலை நடத்துவது பற்றிய உகந்த திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்று இவ்வாவணத்தில் மேற்கூறிய நாடுகள் கோரின. இந்த ஆவணத்தின் அம்சங்களைச் சிரியா அரசு உறுதியாக மறுத்துள்ளதோடு, இதைச் சிரியா மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளது.

ரஷியா, துருக்கி மற்றும் ஈரான் ஆகிய மூன்று தரப்புகளின் முன்மொழிவில் சிரியா தேசியப் பேச்சுவார்த்தை மாநாட்டை நடத்துவதை சிரியா அரசு ஏற்றுக்கொண்டு, இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் என்று ஜஃபாரி தெரிவித்தார்.