உள்ளுராட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநகரசபைகள் நகரசபைகள் பிரதேசசபைகளில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. இந்த குறைபாடுகளை பொதுமக்கள் வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்களுக்கும் வெற்றி பெற்ற பின் அந்த சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்.

உதாரணமாக சில குறைபாடுகளை இங்கு முன் வைக்கலாம் என்று நினைக்கிறன்.

மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசத்தை எடுத்து கொண்டால் , குறிப்பாக பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் பஸ் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கான மலசலகூடம் ஆறும் குளியலறை இரண்டும் காணப்பட்டபோதும் அவை பாவனைக்கு உதவாத தரத்தில் துப்பரவு இன்றி அழுக்காக துர்நாற்றத்துடன் தண்ணீர் வசதி சரியாக இல்லாமல் உடைந்த நிலையில் காணப்படுகின்றது.

இங்கே களைத்து வரும் சாரதியோ நடந்தினரோ அல்லது பஸ் தரிப்பு நிலையத்தில் வேலை செய்யும் ஊழியரோ இந்த மலசல கூடத்தை ( ஒன்று தான் பாவிக்க முடியும் மற்றவை மூடப்பட்டுள்ளது ) மூக்கை பொத்தாமல் பாவிக்கமுடியாது.

பொதுமக்களுக்காக மலசல கூடமும் சற்று நல்ல நிலையில் காணப்பட்டாலும் அதுவும் இலகுவாக பாவிக்ககூடியதாக இல்லை. சுத்தம் இல்லாமல் கறைபடிந்து காணப்படுகிறது. பெண் ஆண்களுக்கான குளியலறைகளில் சவர் உடைந்துள்ளது. தங்கள் உடைகளையும் பைகளையும் தொங்க விடுவதற்கு எந்த வசதியும் இல்லை. இந்த மலசல கூடத்தை பாவிக்கும் ஒவ்வொருத்தருக்கும் பத்து ரூபாய் கட்டணம் மாநகர சபைக்கு செலுத்த வேண்டும். சாரதி நடத்துனருக்கான மலசலகூடம் சரியாக இல்லாததால் பொது மக்களுக்கான மலசல கூடத்தையும் குளியலறையையும் தான் சாரதிகளும் நடத்துனரும் பாவிப்பதாக அறிய முடிந்தது.

ஆகவே இந்த குறையை உடனடியாக தேர்தலுக்கு களமிறங்கியவர்கள் கருத்தில் கொண்டு திருத்தி அமைக்க வேண்டும் , சரியாக பராமரிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து கண்காணிக்க வேண்டும்.

இதே போல் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திலும் பெண்களுக்கான மல சலகூடத்தில் தண்ணீர் வசதி உண்டு ஆனால் துப்பரவு இல்லை. ஆண்களின் மலசலகூடம் பாவிக்க முடியாத நிலையில் மூடப்பட்டுள்ளது. இந்த பிரதேச செயலகத்துக்கு தினம் தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து போவது குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக மட்டக்களப்பில் வீதி சமிக்சை விளக்குகள் போடப்படவேண்டும். உதாரணமாக கல்லடி உப்போடை சிவானந்தா வித்தியாலயத்துக்கு முன் உள்ள சந்தியில் அகோர விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுகின்றன , அது மட்டுமல்ல பிரதானமான இரு பாடசாலைகள் அவ்வீதிக்கு அருகே அமைந்துள்ளது.

மட்டக்களப்பு நகரில் இருக்கும் சிறுவர் பூங்காவினுள் நுழையவே முடியாது பறவைகளின் எச்சங்களின் நாற்றம் தலை சுற்றும் அளவில் உள்ளது. சிறுவர்கள் வந்து போகும் இடம் மிகவும் சுத்தமாகவும் , சுத்தமான கற்றை பிள்ளைகளும் பெற்றோரும் சுவாசிக்க கூடிய முறையில் இருக்க வேண்டும். இந்த இடத்தில் உள்ள மரங்களில் பறவைகள் தங்குவதால் இந்த பூங்காவை வேறு இடத்துக்கு மாற்றுவதுதான் சிறந்த வழி. மரங்களை வெட்டக்கூடாது. இயற்கையை அளிக்காமல் மக்களை மையப்படுத்திய அபிவிருத்திகள் புனரமைப்புக்கள் நடைபெறுவது கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

இதுபோல் ஒவ்வொரு பிரதேசத்திலும் பல குறைகள் உண்டு. இவற்றை மக்கள் இனம் கண்டு வேட்பாளர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். அவற்றை சரியாக செய்து தரும் படி அவர்களுக்கு அழுத்தம் கொடுத்துகொண்டே நாம் இருக்க பழகவேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் எம் பிரதேசத்தையும் கிராமத்தையும் முன்னேற்றுவதில் அபிவிருத்தி செய்வதில் நாமும் பங்களிப்பு செய்ய வேண்டும். இது ஜனநாயகத்தை விரும்பும் மதிக்கும் ஒவ்வொருத்தரினதும் கடமையாகும்.

மாசி மாதம் 10 நடக்கவிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் கலப்பு முறை தேர்தலாக அமையப்போகிறது. இம்முறையிலான தேர்தல் முதன் முதலாக நடக்கிறது. 60 வீதமான உறுப்பினர்கள் வட்டார முறையிலும் 40 வீதமாவர்கள் விகிதாசார முறையிலும் தெரிவாவர். இதைவிட ஒவ்வொரு பிரதேச சபையின் மொத்த ஆசனங்களில் 25 வீதம் மேலதிகமான ஆசனங்கள் பெண்களுக்குக்காக ஒதுக்கபட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு 2016 அம ஆண்டு 16 ஆம் இல்லக்க தேர்தல் திருத்த சட்டத்தின் மூலம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது

இதில் 341 உள்ளுராட்சி சபைகள் உள்ளன, 4,486 உறுப்புனர்கள் தெரிவாவார்கள் இதில் 3840உறுப்பினர் தொகுதிவாரி முறையிலும் 271 மிகுதி விகிதாரசார முறையிலும் தெரிவாவர் , இதில் 2,000 மேற்பட்ட உறுப்பினர் கட்டாயம் பெண்களாக இருப்பது சட்டமாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மொத்தம் 271 பிரதேச சபைகள் 41 நகரசபைகள் 24 மாநகரசபைகள் உள்ளன இந்த தேர்தலில் 16 மில்லியன் மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

இந்த நிலையில் தேர்தலுக்கான காலம் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. யார் களமிறங்கி உள்ளனர் அவர்கள் என்ன திட்டத்தை கொண்டு வரப்போகின்றனர் என்று ஆங்காங்கே மக்கள் பேசிக்கொள்வதையும் கேட்பதையும் காண முடிகிறது. களமிறங்கியவர்கள் கூட உள்ளுராட்சி மன்றத்தினூடு எவ்வகையான திட்டங்களை வேலைகளை செய்யலாம் என்ற தெளிவு இல்லமால் அரசியல் தீர்வு , நிரந்தர தீர்வு , இடைகால அறிக்கைக்கைக்கு எதிர்ப்பை காட்டுவோம் போன்ற உள்ளுராட்சி மன்றத்தின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட வாக்குறுதிகளை வேட்பாளர்கள் கூறி வருவதை காண முடிகிறது.

ஆகவே உள்ளுராட்சி மன்றத்தின் அதிகாரத்தை பாவித்து செய்யகூடிய வேலைகளை மக்கள் தெரிந்திருப்பது அவசியம். அதே போல் அவற்றை இனம் கண்டு வேட்பாளர்கள் வாக்கு கேட்டு வரும்போது அவர்களிடம் எடுத்துச்சொல்வது மக்களின் தலையாய கடமையாகும். வெல்பவர்கள்தான் திட்டத்தை முன் மொழிய வேண்டும் என்ற கலாச்சாரத்தை மாற்றி நாமும் பங்காளிகளாக இருக்க வேண்டும்.

நளினி ரத்னராஜா
மனித உரிமை செயற்பட்டாளர் – மட்டக்களப்பு

நன்றி – தினக்கதிர்

By admin